அணித் தலைவர் திசர பெரேரா போராடியும் இலங்கைக்கு தோல்வி

826

இலங்கை அணிக்கு எதிராக ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற டி20 போட்டியில் திசர பெரேராவின் அதிரடியையும் தாண்டி, இங்கிலாந்து அணி 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இதன்படி ஒருநாள் தொடரை அடுத்து டி20 தொடரையும் அந்த அணி கைப்பற்றியுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியின் தலைவர் திசர பெரேரா இங்கிலாந்து அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார்.  இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களை குவித்தது.

இங்கிலாந்துடனான T20 போட்டியிலிருந்து விலகும் அகில தனன்ஜய, குசல் பெரேரா

இங்கிலாந்து அணிக்கு சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்த ஜேசன் ரோய் அதிரடியாக துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை குவித்தார். இதில் இலங்கை அணியின் களத்தடுப்பில் சதீர சமரவிக்ரம (மேலதிக வீரர்) மற்றும் தசுன் சானக்க ஆகியோர் ரோயின் பிடியெடுப்பை தவறவிட, ஜேசன் ரோய் 36 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 69 ஓட்டங்களை குவித்தார்.

இவரின் அதிரடி ஓட்டங்களுடன், மத்திய வரிசையில் பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி மற்றும் ஜோ டன்லி ஆகியோரின் இணைப்பாட்டங்களுடன் இங்கிலாந்து அணி ஓட்ட எண்ணிக்கையை உயர்த்திக்கொண்டது.

ஜேசன் ரோய் உடன் இணைந்து 47 ஓட்டங்களை பகிர்ந்த பென் ஸ்டோக்ஸ் 26 ஓட்டங்களையும், அதிரடியாக துடுப்பாடிய மொயின் அலி 11 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, இந்த தொடரின் முதல் போட்டியில் விளையாடிய ஜோ டென்லி 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை ஆரம்பத்தில் எதிரணிக்கு ஓட்டங்களை வாரி வழங்கிய லசித் மாலிங்க, இன்னிங்சில் இறுதியில் சிறப்பாக பந்துவீசி, 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மறுமுனையில் அமில அபோன்சோ 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் சவாலான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆரம்பத்திலிருந்து தடுமாற்றத்தை எதிர்கொண்டது. இங்கிலாந்து அணியின் ஜோ டென்லியின் முதல் ஓவரில் குசல் மெண்டிஸ் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். அவரது இரண்டாவது ஓவரில் டிக்வெல்ல 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து அணிக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் துடுப்பெடுத்தாடிய தினேஷ் சந்திமால் 20 பந்துகளுக்கு 26 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய அறிமுக வீரர் கமிந்து மெண்டிஸ் அதிரடியாக 14 பந்துகளுக்கு 24 ஓட்டங்களை விளாசி ஆட்டமிழந்தார். அதே ஓவரில் தனன்ஜய டி சில்வாவும் ஆட்டமிழக்க, இலங்கை அணி 75 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.

இறுதியாக இலங்கை அணித் தலைவர் திசர பெரேரா மாத்திரம் தனித்துப் போராட, ஏனைய வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுக்க இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 157 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 30 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது. இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக அணித் தலைவர் திசர பெரேரா 31 பந்துகளை எதிர்கொண்டு,  6 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 57 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இலங்கை கட்புலனற்றோர் அணியை வைட்-வொஷ் செய்த இந்திய கட்புலனற்றோர் அணி

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை பொருத்தவரை ஆதில் ரஷீட் சிறப்பாக பந்து வீசி, 11 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்த, ஜோ டென்லி  4 விக்கெட்டுகளையும், கிரிஸ் ஜோர்டன் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ஸ்கோர் விபரம்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க