இங்கிலாந்து அணிக்கு எதிராக கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி டக்வர்த் லூவிஸ் முறைப்படி 219 ஓட்டங்களால் வெற்றிபெற்று, அந்த அணிக்கு எதிரான மிகப்பெரிய வெற்றியை பதிவுசெய்துள்ளது.
இலங்கை அணி நிர்ணயித்திருந்த 367 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 26.1 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டதால் இலங்கை அணிக்கு வெற்றி வழங்கப்பட்டது.
ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் ஆறுதல் வெற்றியை தேடும் இலங்கை
இந்த வெற்றியானது, இங்கிலாந்து அணிக்கு எதிராக இலங்கை அணியால் பெறப்பட்ட மிகப்பெரிய ஒருநாள் போட்டி வெற்றியாக மாறியுள்ளது. 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியை 157 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியமையே மிகப்பெரிய வெற்றியாக அமைந்திருந்தது. எனினும் இன்று அந்த சாதனையை முறியடித்து, இலங்கை அணி டக்வர்த் லூவிஸ் முறைப்படி 219 ஓட்டங்களால் வெற்றியை சுவைத்துள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. நான்காவது போட்டியில் துடுப்பாட்டத்தை சற்று மேம்படுத்தியிருந்த இலங்கை, இந்த போட்டியில் அற்புதமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய நிரோஷன் டிக்வெல்ல மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக 137 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பெற்று அணிக்கு நேர்த்தியான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர். இந்த ஆரம்பமானது கடந்த 12 மாதங்களில் பெறப்பட்ட சிறந்த ஆரம்பமாகவும், முதல் சத இணைப்பாட்டமாகவும் பதிவாகியது.
எனினும் இதில் சதீர சமரவிக்ரம 54 ஓட்டங்களுடனும், துரதிஷ்டவசமாக சதத்தை தவறவிட்ட டடிக்வெல்ல 95 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். பின்னர் மத்திய வரிசையை பலப்படுத்திய குசல் மெண்டிஸ் மற்றும் தினேஷ் சந்திமால் அணிக்கு தேவையான இணைப்பாட்டமாக 102 ஓட்டங்களை பகிர்ந்தனர்.
இதனையடுத்து தசுன் சானக திசர பெரேரா, தனன்ஜய டி சில்வா மற்றும் அகில தனன்ஜய ஆகியோரின் சிறு இணைப்பாட்டங்களுடன் இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 366 ஓட்டங்களை குவித்தது. நிதானமாக ஆடிய தினேஷ் சந்திமால் 80 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 33 பந்துகளுக்கு 6 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 56 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் டொம் கரன் மற்றும் மொயின் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இலங்கை அணி பெற்ற ஓட்ட எண்ணிக்கையானது இந்த மைதானத்தில் பெறப்பட்ட இரண்டாவது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகும். கடந்த ஆண்டு இந்திய அணி, இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 375 ஓட்டங்களை குவித்திருந்தது.
பின்னர், மிக சவாலான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி ஆரம்பத்திலிருந்து தடுமாற்றத்தை எதிர்கொண்டது இங்கிலாந்து அணி நான்கு ஓட்டங்களை பெற்றிருந்த போது தங்களது மூன்று விக்கெட்டுகளை தொடர்ச்சியாக இழந்தது. ஜேசன் ரோய் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் பட்லர் ஓட்டங்களின்றி ஆட்டமிழந்தனர்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி கைது
தொடர்ந்து, 10 ஓட்டங்களை பெற்றிருந்த ஜோ ரூட், சதீர சமரவிக்ரமவின் அற்புதமான பிடியெடுப்பு மூலம் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியை சந்தித்தது. எனினும் அடுத்து ஜோடி சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் மற்றும் மொயின் அலி ஆகியோர் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் 79 ஓட்டங்களை பகிர்ந்த நிலையில், மொயின் அலி 37 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பின்னர் தனியாளாக போராடிய பென் ஸ்டோக்ஸ் 67 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இலங்கை அணி வெற்றியை நெருங்கியது.
அடுத்தவந்த இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இறுதியில் இங்கிலாந்து அணி 26.1 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழக்க, மழை குறுக்கிட்டது. போட்டியில் தொடர்ந்தும் மழை குறுக்கிட்டதால் இலங்கை அணிக்கு டக்வர்த் லூவிஸ் முறைப்படி 219 ஓட்டங்களால் வெற்றி வழங்கப்பட்டது. இலங்கை அணி சார்பில் அகில தனன்ஜய 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், துஷ்மந்த சமீர 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
எவ்வாறாயினும் இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என கைப்பற்றி தொடர் வெற்றியை சுவைத்துள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஒரு போட்டி கொண்ட T20 தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஸ்கோர் விபரம்
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















