சுற்றுலா இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி, இன்றைய ஆட்ட நேர முடிவில் 227 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது. அதேநேரம், போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற வேண்டுமாயின் 3 விக்கெட்டுகள் கைவசமிருக்க 75 ஓட்டங்களை பெறவேண்டும்.

நேற்றைய ஆட்ட நேர முடிவில் 324 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்து அணி, இன்றைய தினம் 346 ஓட்டங்களை பெற்றதுடன், இலங்கை அணிக்கு 301 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

ஜோ ரூட்டின் சதத்தையும் தாண்டி சுழல் பந்துவீச்சால் மிரட்டிய அகில தன்னஜய

கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட்…

ஜேம்ஸ் எண்டர்சன் மற்றும் பென் போக்ஸ் ஜோடி, இன்றைய தினம் மேலதிகமாக 22 ஓட்டங்களை பகிர்ந்த நிலையில், ஜேம்ஸ் எண்டர்சன் 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். எனினும், இறுதிவரை களத்தில் இருந்த பென் போக்ஸ் ஆட்டமிழக்காமல் 65 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பல்லேகலை ஆடுகளத்தை பொருத்தவரையில் மிகவும் கடினமான வெற்றி இலக்கை இங்கிலாந்து அணி நிர்ணயித்திருக்க, இலங்கை அணி  தங்களது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது. துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி ஆரம்பத்திலிருந்து தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

முக்கியமாக, நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஆரம்ப துடுப்பாட்ட வீரருக்கான இடத்தை பிடித்திருந்த கௌஷால் சில்வா, வெறும் நான்கு ஓட்டங்களை பெற்று, ஆட்டமிழந்தார். இவரை அடுத்து களம் நுழைந்த தனன்ஜய டி சில்வாவை அற்புதமான பிடியெடுப்பின் மூலம் கீடொன் ஜென்னிங்ஸ் வெளியேற்றினார். அதேநேரம், கடந்த சில மாதங்களாக துடுப்பாட்டத்தில் சிக்கலை எதிர்கொண்டு வரும் குசால் மெண்டிஸ், ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, இலங்கை அணி 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலைக்கு முகங்கொடுத்தது.

தொடர்ந்தும் களத்தில் நின்று தற்காப்பு ஆட்டத்தினை வெளிப்படுத்திய திமுத் கருணாரத்ன மற்றும் அனுபவ வீரர் அஞ்செலோ மெதிவ்ஸ் அணியின் ஓட்ட எண்ணிக்கையை கட்டியெழுப்பினர். திமுத் கருணாரத்ன இந்த போட்டியின் இரண்டாவது அரைச்சதத்தை பூர்த்தி செய்ய, இலங்கை அணி மதிய போசண  இடைவேளையின் போது 3 விக்கெட்டுகளை இழந்து 93 ஓட்டங்களை பெற்றது.

மதிய போசண இடைவேளைக்கு பின்னர் சுழல் பந்தி்ல் மிரட்டிய இங்கிலாந்து அணி அரைச்சதம் கடந்திருந்த திமுத் கருணாரத்னவின் விக்கெட்டினை கைப்பற்றியது. 57 ஓட்டங்களை பெற்றிருந்த திமுத் கருணாரத்ன, இங்கிலாந்து அணியின் மற்றுமொரு அற்புத பிடியெடுப்பின் மூலம் ஓய்வறைக்கு அனுப்பப்பட்டார். இவரின் ஆட்டமிழப்பின் பின்னர் இலங்கை அணி மேலும் நெருக்கடியை எதிர்கொண்டது.

இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு உந்துசக்தியாக இருந்த ரொஷேன் சில்வா, மெதிவ்ஸுடன் இணைந்து ஓட்டங்களை பகிர, அஞ்செலோ மெதிவ்ஸ் தனது அரைச்சதத்தை கடந்தார். இவர்கள் இருவரும் 5 வது விக்கெட்டுக்காக 73 ஓட்டங்கள் என்ற சிறந்த இணைப்பாட்டத்தை பகிரந்ததுடன், மொயின் அலியின் பந்து வீச்சில் ரொஷேன் சில்வா துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.

ரொஷேன் சில்வாவின் இடத்தை நிரப்புவதற்காக வருகைத்தந்த நிரோஷன் டிக்வெல்ல, தனக்கே உரிய பாணியில் துடுப்பெடுத்தாடி, வேகமாக ஓட்டங்களை குவித்தார். இவருடன் அஞ்செலோ மெதிவ்ஸும் சிறப்பாக ஆட இலங்கை அணி 200 ஓட்டங்களை கடந்தது. இதன்படி தேநீர் இடைவேளையை நெருங்கிய போது இலங்கை அணி, 219 ஓட்டங்களை பெற்று, போட்டியின் போக்கினை மாற்றிக்கொண்டது.

Photos: Sri Lanka Vs England | 2nd Test – (Day 04)

ThePapare.com | Waruna Lakmal | 17/11/2018 Editing and re-using images without permission of ThePapare.com…

எனினும், தேநீர் இடைவேளையின் பின்னர், இங்கிலாந்து அணி தங்களது ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியது. இலங்கை சார்பில் சிறப்பாக ஓட்டங்களை குவித்து வந்த அஞ்செலோ மெதிவ்ஸ் துரதிஷ்டவசமாக 88 ஓட்டங்களுடன் மொயீன் அலியின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்து வருகை தந்த டில்ருவான் பெரேரா  2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதனைத் தொடர்ந்து போட்டியில் மழை குறுக்கிட்ட நிலையில் ஆட்டம் நிறுத்தப்பட்டதுடன், இலங்கை அணி இக்கட்டான சூழ்நிலைக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இன்றைய ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 227 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன், இலங்கை வெற்றிபெற வேண்டுமாயின் 75 ஓட்டங்களை பெறவேண்டும் என்பதுடன், இங்கிலாந்து அணி வெற்றிபெற 3 விக்கெட்டுகள் மாத்திரமே தேவைப்படுகிறது.

இலங்கை அணி சார்பில் நிரோஷன் டிக்வெல்ல 27 ஓட்டங்களுடன் களத்தில் இருப்பதுடன், சுரங்க லக்மால், அகில தனன்ஜய மற்றும் மலிந்த புஷ்பகுமார ஆகிய ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை பொருத்தவரை ஜெக் லீச் 4 விக்கெட்டுகளையும், மொயீன் அலி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

ஸ்கோர் விபரம்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<