மைதான ஈரத்தன்மை காரணமாக கைவிடப்பட்ட முதல் ஒருநாள் போட்டி

855
Sri Lanka vs England

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டி, மைதானத்தின் ஈரத்தன்மையை கருத்திற்கொண்டு வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இன்றைய போட்டியில் வெறும் 15 ஓவர்கள் மாத்திரம் வீசப்பட்ட நிலையில், மழை குறுக்கிட்டதால் போட்டி இடைநிறுத்தப்பட்டது. தொடர்ந்து சுமார் 4 மணித்தியாலங்கள் போட்டி மழையால் தடைப்பட, இரவு எட்டு மணியளவில் மைதானம் போட்டிக்காக தயார்படுத்தப்பட்டது. எனினும் மைதானத்தை ஆராய்ந்த நடுவர்கள் மைதானத்தின் சில பகுதிகளில் ஈரத்தன்மை (Wet) அதிகமாக இருப்பதால் போட்டியை கைவிடுவதாக அறிவித்தனர்.

பகலிரவு போட்டியாக ஆரம்பித்த இந்த போட்டியின், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமால் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார். இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஆரம்ப ஜோடியான ஜொனி பெயார்ஸ்டோவ் மற்றும் ஜேசன் ரோய் ஆகியோர் நேர்த்தியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர்.

>> இங்கிலாந்தை வீழ்த்த அவுஸ்திரேலியரின் உதவியை பெறும் இலங்கை

இவர்கள் இருவரும் இணைந்து 48 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த நிலையில், நுவன் பிரதீப்பின் பந்து வீச்சில் பெயார்ஸ்டோவ் 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அடுத்த ஓவரில் ஜேசன் ரோய் (25), அகில தனன்ஜய  பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் ஜோ ரூட் மற்றும் அணித் தலைவர் இணைந்து ஆட்டத்தை கட்டியெழுப்பினர்.

இதன்போது 15 ஆவது ஓவர் நிறைவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 92 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டது. இதன்போது ஜோ ரூட் 25 ஓட்டங்களையும், இயன் மோர்கன் 14 ஓட்டங்களையும் பெற்றிருந்ததுடன், இலங்கை அணி சார்பில் நுவன் பிரதீப் மற்றும் அகில தனன்ஜய ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

பிற்பகல் 3.40 மணிக்கு நிறுத்தப்பட்ட இந்த போட்டியானது, இரவு 8.15 வரை  சுமார் 4 மணித்தியாலங்களுக்கு, சீரற்ற காலநிலையால் தடைப்பட்டது. இரவு 8.15 இற்கு மைதானம் மீண்டும் தயார்படுத்தப்பட்ட போதும், மைதானத்தின் ஒருசில பகுதிகளில் ஈரத்தன்மை (Wet) அதிகமாக இருந்ததால் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுசெய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

இதனால், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 13 ஆம் திகதி தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

போட்டி சுருக்கம்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<