டெஸ்ட் தொடரில் சாதித்த இலங்கை ஒரு நாள் தொடரிலும் சாதிக்குமா?

1086

விருந்தினர்களாக இலங்கைக்கு வந்த தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் தொடரில் வைட்வொஷினை பரிசளித்த இலங்கை அணி, “யாரையும் எளியோர் என்று எண்ணிவிடாதே” என்ற முதுமொழியை உண்மைப்படுத்தியிருக்கின்றது.

கிரிக்கெட்டின் நீண்ட ஓவர்கள் கொண்ட வகைப் போட்டிகளில் இப்படியாக மிகவும் திறமையாக இருக்கும் கிரிக்கெட் அணியொன்றை தோற்கடித்த இலங்கை அணிக்கு, மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளிலும் தமது திறமையை நிரூபிக்க தென்னாபிரிக்க அணியுடனான ஒரு நாள் தொடர் மூலம் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.

தென்னாபிரிக்காவை வீழ்த்த தந்திரோபாயங்களை கையாளுகிறதா இலங்கை?

அந்தவகையில், இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர், ஞாயிற்றுக்கிழமை (29) தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

ஒரு நாள் தொடர் பற்றி

நம்பிக்கையான முறையில் துடுப்பாடக்கூடிய அணித்தலைவர், வியூகங்களை கட்டமைத்துக் கொடுக்கும் பயிற்றுவிப்பாளர், அணி முகாமையாளர் யாருமின்றி தென்னாபிரிக்க அணியை இளம் வீரர்களுடன் 2-0 என வைட் வொஷ் செய்த இலங்கை அணியின் திறமை இன்னுமொரு தடவை இந்த ஒரு நாள் தொடர் மூலம் பரீட்சித்துப் பார்க்கப்படவுள்ளது.

கடந்த ஆண்டு இலங்கை அணிக்கு மிகவும் மோசமானதாக அமைந்திருந்த போதிலும், அப்போது விட்ட தவறுகளை திருத்தி மீண்டும் தமது வழமையான ஆட்டத்திற்கு மீள முயற்சிக்கும் இலங்கை அணி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒரு நாள் உலகக் கிண்ணத்தை வெல்லும் கனவுகளுடனும் காணப்படுகின்றது.

அடுத்த உலகக்கிண்ணத்தில் எப்படியான இக்கட்டான நிலைமைகள் உருவாகினாலும் அவற்றை சமாளித்து அணியை மீட்கும் திறமை கொண்ட வீரர்களை தமக்கென எதிர்பார்க்கும் இலங்கை அணி, புதிய வீரர்கள் சிலருக்கு தென்னாபிரிக்க ஒரு நாள் தொடரில் வாய்ப்புத் தந்திருக்கின்றது.

இதேநேரம், ஒரு நாள் அணிகளுக்கான தரவரிசையில் எட்டாம் இடத்தில் உள்ள இலங்கை வீரர்கள் தமது நிலையை முன்னேற்றிக் கொள்ளவும், இந்த ஒரு நாள் தொடரில் முயற்சி செய்யவுள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக கடைசியாக  2015 ஆம் ஆண்டிலேயே, ஒரு நாள் தொடர் ஒன்றை தமது சொந்த மண்ணில் வைத்து கைப்பற்றிய இலங்கை அணி அதன் பின்னர் அவுஸ்திரேலியா, இந்தியா போன்ற நாடுகளுடன் ஒரு நாள் தொடர்களில் மோசமான தோல்வியை சந்தித்த நிலையில் ஜிம்பாப்வே, பங்களாதேஷ் போன்ற பலம் குறைந்த அணிகளுக்கு எதிராக கூட இலங்கையில் வைத்து ஒரு நாள் தொடர்களை கைப்பற்ற தவறியிருந்தது.  ஆனால், இலங்கை அணி தற்போது சில மாற்றங்களுக்கு உட்பட்டிருக்கும் காரணத்தினால் சொந்த மண்ணில் இலங்கை அணியின் இப்படியான நிலை தென்னாபிரிக்க தொடரில் மாறும் என எதிர்பார்க்க முடியும்.

மறுமுனையில், ஐ.சி.சி. ஒரு நாள் அணிகளுக்கான தரவரிசையில் மூன்றாம் இடத்தில் காணப்படும் அணியே, இந்த ஒரு நாள் தொடரில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்ப்பாக உள்ளது.

2014 ஆம் ஆண்டில் இறுதியாக இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த தென்னாபிரிக்கா அப்போது இடம்பெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என கைப்பற்றியிருந்ததுடன், கடந்த ஆண்டு தமது சொந்த மண்ணில் வைத்து நடைபெற்ற ஒரு நாள் தொடரிலும் இலங்கை அணியை 5-0 என வைட் வொஷ் செய்திருந்தது.

எனினும், நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர்களை சமாளிப்பதில் தென்னாபிரிக்க அணி மிகவும் தடுமாற்றம் காட்டியிருந்தது. இது நடைபெறவுள்ள ஒரு நாள் தொடரில் தென்னாபிரிக்க அணியின் ஆதிக்கம் இருக்கும் எனக்கூறப்படும் செய்தியை பொய்யாக்கி விடுமோ என எண்ணத் தோன்றுகின்றது.

  • இலங்கை அணி

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் போட்டித்தடையின் காரணமாக தினேஷ் சந்திமாலுக்கும், இலங்கை கிரிக்கெட் சபையின் போட்டித்தடை காரணமாக தனுஷ்க குணத்திலக்கவுக்கும் தென்னாபிரிக்க அணியுடனான ஒரு நாள் தொடரில்  விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால், திறமையாக ஆடக்கூடிய இரண்டு துடுப்பாட்ட வீரர்களை இலங்கை அணி இந்த ஒரு நாள் தொடரில் இழக்கின்றது.

இதேநேரம், அடுத்த உலகக் கிண்ணத்திற்கு சரியான வீரர்களை இனம் காண பல இளம் வீரர்கள் தென்னாபிரிக்க அணியுடனான ஒரு நாள் தொடரில் அடக்கப்பட்டிருக்கின்றனர்.

பயிற்சி போட்டியில் வென்று ஒருநாள் தொடரில் நம்பிக்கையுடன் களமிறங்கவுள்ள தென்னாபிரிக்கா

நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான அஞ்செலோ மெதிவ்ஸ் இத்தொடரின் மூலம், மீண்டும் இலங்கை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட அணியின் தலைவராக பொறுப்பெடுத்துக் கொள்கின்றார். இறுதியாக பங்களாதேஷில் நடைபெற்ற முக்கோண ஒரு நாள் தொடரின் போது காயத்திற்கு ஆளாகிய மெதிவ்ஸ் அதன் பின்னர் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகள் எதிலும் இலங்கை அணிக்காக விளையாடியிருக்கவில்லை. ஒரு நாள் போட்டிகளில் 5,000 இற்கும் மேற்பட்ட ஓட்டங்களை குவித்திருக்கும் மெதிவ்ஸின் அனுபவம் இலங்கை அணிக்கு, துடுப்பாட்டத்தில் பலம் சேர்க்கும் விடயம் ஒன்றாகும்.

மெதிவ்ஸ் போன்று அனுபவமிக்க மற்றுமொரு துடுப்பாட்ட வீரரான உபுல் தரங்கவையும் இலங்கை அணி கொண்டிருக்கின்றது. இத்தொடரில் இருக்கின்ற இலங்கை வீரர்களில் ஒரு நாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்திருக்கும் தரங்க, தென்னாபிரிக்க அணிக்கெதிராக இதுவரையில் ஒரு சதம், மூன்று அரைச்சதங்கள் என்பவற்றினையும் விளாசியிருக்கின்றார்.

தரங்க, மெதிவ்ஸ் ஆகியோரோடு இலங்கை அணி குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, நிரோஷன் திக்வெல்ல ஆகியோருடன் இன்னும் பலம் பெறுகின்றது. இதேவேளை தனஞ்சய டி சில்வா, ஷெஹான் ஜயசூரிய ஆகியோருக்கு துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பம்  வழங்கப்பட்டிருக்கின்றது.

திசர பெரேரா, தசுன் சானக்க ஆகியோர் இலங்கை அணிக்கு இத்தொடரில் சகலதுறைகளிலும் பங்களிப்புச் செய்யக்கூடியவர்களாக காணப்படுகின்றனர். இதில், தசுன் சானக்க உள்ளூர் போட்டிகளில் திறமையை நிரூபித்த காரணத்தினால் 2016 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையின் ஒரு நாள் அணியில் மீண்டும் உள்வாங்கப்பட்டிருக்கின்றார்.

தென்னாபிரிக்க அணி சுழலுக்கு தடுமாறும் ஒரு அணி, என்பதால் மூன்று முழு நேர சுழல் பந்துவீச்சாளர்கள் தொடருக்கான இலங்கை அணியில் இணைக்கப்பட்டிருக்கின்றனர். இதில் அகில தனஞ்சய பிரதானமானவராக இருப்பதோடு லக்ஷான் சந்தகன், ப்ரபாத் ஜயசூரிய ஆகியோர் அகில துணையாக அணியின் சுழல் துறையை முன்னெடுக்கவுள்ளனர். அறிமுக வீரரான ப்ரபாத் ஜயசூரிய லிஸ்ட் A என அழைக்கப்படும் உள்ளூர் ஒரு நாள் போட்டிகள் 25 இல் விளையாடி, 36 விக்கெட்டுக்களை சாய்த்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சுதுறையை எடுத்து நோக்கும் போது, சுரங்க லக்மால் முதன்மையானவராக இருக்கும் நிலையில் லஹிரு குமார, கசுன் ராஜித ஆகியோர் லக்மாலுடன் அணியின் வேகப்பந்துவீச்சு துறைக்கு பலம் சேர்க்கவுள்ளனர்.

தென்னாபிரிக்க அணிக்கெதிராகவே ஒரு நாள் போட்டிகளில் அறிமுகமாகிய லஹிரு குமார மற்றும் கசுன் ராஜித ஆகிய இருவரும் அண்மைய மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயற்பட்டதே அவர்களை ஒரு நாள் அணியில் இணைக்க காரணமாக இருக்கின்றது.  

இலங்கை குழாம் 

அஞ்செலோ மெதிவ்ஸ் (அணித்தலைவர்), தசுன் சானக்க, குசல் ஜனித பெரேரா, தனஞ்சய டி சில்வா, உபுல் தரங்க, குசல் மெண்டிஸ், திசர பெரேரா, நிரோஷன் திக்வெல்ல, சுரங்க லக்மால், லஹிரு குமார, கசுன் ராஜித, அகில தனஞ்சய, லக்ஷான் சந்தகன், ஷெஹான் ஜயசூரிய


  • தென்னாபிரிக்க அணி

ஏ.பி.டி. வில்லியர்ஸ் மற்றும் மோர்னே மோர்க்கல் ஆகிய சிரேஷ்ட வீரர்களின் ஓய்வுக்குப் பின்னர் தென்னாபிரிக்க அணி விளையாடுகின்ற முதலாவது ஒரு நாள் தொடராக, இலங்கை அணியுடனான போட்டிகள் அமைகின்றன.

எனினும், வெள்ளைப் பந்து பயன்படுகின்ற இந்த ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் தென்னாபிரிக்க அணி மிகவும் திறமை வாய்ந்த குழாம் ஒன்றினையே களமிறக்கவுள்ளது. ஐ.சி.சி. இன் ஒரு நாள் தரவரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் இருக்கும் இரண்டு துடுப்பாட்ட வீரர்களையும், ஒரு பந்துவீச்சாளரையும் அவ்வணி கொண்டிருக்கின்றது.

இதன்படி, முதல் பத்து இடங்களுக்குள் இருக்கும் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான பாப் டு ப்ளேசிஸ் தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டத்துறைக்கு மிகவும் பலம் சேர்க்க கூடிய ஒருவராக இருக்கின்றார். பாப் டு ப்ளேசிஸ் உடன் சேர்த்து ஒரு நாள் போட்டிகளில் 50 இற்கு மேலான துடுப்பாட்ட சராசரியை வைத்திருக்கும் ஹஷிம் அம்லா இலங்கையில் நடைபெற்ற ஒரு நாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் (353) குவித்த தென்னாபிரிக்க அணி வீரராக இருப்பது குறிப்பிடத்தக்கது. அம்லாவுடன் தென்னாபிரிக்க அணி இன்னும் பலம் பெறுகின்றது.

இதேநேரம், ஐ.சி.சி. இன் ஒரு நாள் தரவரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் இருக்கும் ஏனைய துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான குயின்டன் டி கொக், இலங்கை அணிக்கெதிராக இதுவரையில் 13 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இரண்டு சதங்கள், இரண்டு அரைச்சதங்கள் அடங்கலாக 538 ஓட்டங்களை சேர்த்திருக்கின்றார். இந்தப் பதிவுகள் அவர் இலங்கை அணியுடனான கடந்த காலப் போட்டிகளில் சிறப்பான முறையில் செயற்பட்டிருந்தார் என்பதைக் காட்டுகின்றது.

அத்துடன் டேவிட் மில்லர், ஜே.பி. டுமினி, எய்டன் மார்க்ரம் போன்றவர்கள் தென்னாபிரிக்க அணிக்காக துடுப்பாட்டத்தில் ஜொலிக்க கூடிய ஏனைய வீரர்களாக காணப்படுகின்றனர்.

அவ்வணியின் பந்துவீச்சை எடுத்து நோக்கும் போது, அது அதி திறமையான சுழல் வீரர்களையும், உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களையும் அடக்கியிருக்கின்றது. இதில் சுழல் பந்துவீச்சுத்துறையை பார்த்தால் இலங்கை அணிக்கு டெஸ்ட் தொடரில் நெருக்கடி தந்த கேசவ் மஹராஜை தென்னாபிரிக்கா ஒரு நாள் தொடரில் அறிமுகப்படுத்தவிருக்கும் நிலையில் தப்ரைஸ் சம்சி அவ்வணியின் நம்பிக்கை தரக்கூடிய சுழல் வீரராக உள்ளார். இன்னும் பகுதிநேர சுழல் பந்துவீச்சாளராக செயற்படும் ஜே.பி. டுமினியின் சேவையும் இத்தொடரில் தென்னாபிரிக்காவுக்கு கிடைக்கின்றது.

தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர்களாக ககிஸோ றபாடா, அன்டைல் பெஹ்லுக்வேயோ, லுங்கி ன்கிடி ஆகியோர் நம்பிக்கை தருகின்றனர். இவர்களில் ஐ.சி.சி. ஒரு நாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஒன்பதாவது இடத்தில் காணப்படும் ககிஸோ றபாடா இலங்கை அணிக்கு அழுத்தம் தரக்கூடிய பந்துவீச்சாளர்களில் முக்கியமானவராக கருதப்படுகின்றார்.

தென்னாபிரிக்க அணி அண்மைக்காலமாக உள்ளூர் T20 போட்டிகளில் சிறந்த முறையில் செயற்பட்டுவரும் வேகப்பந்து வீச்சாளரான ஜூனியர் டல இலங்கையுடனான ஒரு நாள் தொடரில் அறிமுகம் செய்யவுள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இரண்டாம் நாள் ஆதிக்கம் தென்னாபிரிக்க வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி வசம்

தென்னாபிரிக்க அணி 

பாப் டு ப்ளேசிஸ் (அணித்தலைவர்), ஹஷிம் அம்லா, ஜூனியர் டல, குயின்டன் டி கொக், ஜே.பி. டுமினி, ரீசா ஹென்ரிக்ஸ், ஹென்ரிச் க்ளஸ்ஸன், கேசவ் மஹராஜ், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், வில்லியம் முல்டர், லுங்கி ன்கிடி, அன்டைல் பெஹ்லுக்வெயோ, ககிஸோ றபாடா, தப்ரைஸ் சம்ஷி

ஆடுகளங்கள் பற்றி

இந்த ஒரு நாள் தொடரின் போட்டிகள் யாவும் தம்புள்ளை, கண்டி, கொழும்பு ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன. மூன்று இடங்களிலும் உள்ள ஆடுகளங்கள் பொதுவாக பந்துவீச்சாளர்களுக்கு குறிப்பாக சுழல் வீரர்களுக்கு சாதகமாக இருக்கும் என்றே கிரிக்கெட் வல்லுனர்களினால் எதிர்வு கூறப்பட்டிருக்கின்றது.

ஒரு நாள் தொடர் அட்டவணை

  • ஜுலை 29 – முதல் ஒரு நாள் போட்டி – ரங்கிரி தம்புள்ளை மைதானம், தம்புள்ளை (பகல் போட்டி)
  • ஆகஸ்ட் 1 – இரண்டாவது ஒரு நாள் போட்டி – ரங்கிரி தம்புள்ளை மைதானம், தம்புள்ளை (பகலிரவுப் போட்டி)
  • ஆகஸ்ட் 5 – மூன்றாவது ஒரு நாள் போட்டி – பல்லேகல சர்வதேச மைதானம், கண்டி (பகல் போட்டி)
  • ஆகஸ்ட் 8 – நான்காவது ஒரு நாள் போட்டி – பல்லேகல சர்வதேச மைதானம், கண்டி (பகலிரவுப் போட்டி)
  • ஆகஸ்ட் 12 – ஐந்தாவது ஒரு நாள் போட்டி – ஆர்.பிரேமதாச மைதானம், கொழும்பு (பகலிரவுப் போட்டி)

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<