இலங்கைக்கும் தென்னாபிரிக்காவுக்கும்  இடையிலான 5 ஒருநாள் சர்வேதேச கிரிக்கெட் போட்டிகளைக் கொண்ட தொடரில், முதலாவது ஒருநாள் சர்வேதேச கிரிக்கெட் போட்டி இன்று போர்ட் எலிசபத், புனித ஜோர்ஜஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.

மூன்று போட்டிகளை கொண்ட T20 போட்டித் தொடரில் இலங்கை அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், புது உற்சாகத்துடன் களமிறங்கிய இலங்கை அணியை எதிர்கொள்ள, T20 போட்டிகளில் ஓய்வளிக்கப்பட்டிருந்த ஹஷிம் அம்லா, டு ப்லெசிஸ் மற்றும் குவிண்டன் டி கொக் ஆகிய அதிரடி வீரர்களை உள்ளடக்கி தென்னாபிரிக்க அணி முழு பலத்துடன் களமிறங்கியது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

அஞ்சலோ மெதிவ்சையும் உபாதை காரணமாக இழந்த இலங்கை அணி அனுபவ ரீதியில் மிகவும் பின் தங்கிய ஒரு அணியாக களமிறங்கியது. இரண்டாவது ஒவேரிலேய ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான நிரோஷன் திக்வெல்லவை வேன் பார்னல்லின் பந்துவீச்சில் பறிகொடுத்த இலங்கை அணி நான்காவது ஒவேரில் தன் முதல் போட்டியில் பல கனவுகளுடன் களமிறங்கிய சந்துன் வீரக்கொடியையும் இழந்தது. மூன்றாவது விக்கெட்காக இணைந்த குசல் மெண்டிசும் தினேஷ் சந்திமாலும் 72 ஓட்டங்களை மிகவும் பொறுமையுடன் இணைப்பாட்டமாக பெற்றனர். இம்ரான் தாஹிரின் சுழல் பந்தை எதிர்கொள்ள தடுமாறிய சந்திமால் 55 பந்துகளுக்கு முகம்கொடுத்து 22 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். பொறுமையாக ஒரு பக்கத்தில் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த குசல் மெண்டிசும் இம்ரான் தாஹிரின் சுழல் பந்தில் சிக்கி தன் விக்கெட்டை 62 ஓட்டங்கள் பெற்ற நிலையில் பறிகொடுத்தார். அடுத்து இலங்கை அணியின் தலைவராக களமிறங்கிய உபுல் தரங்க இம்ரான் தாஹிரின் பந்துவீச்சில் டுமினியிடம் பிடிகொடுத்து தன் விக்கெட்டை இழந்தார். சற்று நிதானமாக துடுப்பெடுத்தாடிய தனஞ்சய டி சில்வா சிறப்பாக துடுப்பாடி அணியை மீட்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அவரும் வேன் பார்னலின் பந்துவீச்சில் டு ப்லெஸிசிடம் பிடிகொடுத்து 28 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து வந்த ஏனைய துடுப்பாட்ட வீரர்களும் தன் விக்கெட்டை மிகவும் இலகுவாக தென்னாபிரிக்க வீரர்களிடம் தொடர்ச்சியாக பறிகொடுக்க இலங்கை அணி 48.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 181 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இலங்கை அணி சார்பாக குசல் மெண்டிஸ் அதிகபட்சமாக 62 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பாக இம்ரான் தாஹிர் மற்றும் வேன் பார்னல் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர். மேலும் கிறிஸ் மோரிஸ் இரண்டு விக்கெட்டுகளையும் ககிஸோ றபாட ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

182 ஓட்டங்களை இலக்காக கொண்டு களமிறங்கிய தென்னாபிரிக்க அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ஹஷிம் அம்லா மற்றும் குயிண்டன் டி கொக் ஆகியோர் மிகவும் சிறப்பாக துடுப்பாடி சொற்ப ஓவர்களில் 71 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். குயிண்டன் டி கொக் 34 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் லக்‌ஷான் சந்தகனின் பந்துவீச்சில் சந்துன் வீரக்கொடியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இரண்டாவது விக்கெட்டுக்காக இணைந்த டு ப்லெசிஸ் அம்லாவுடன் நிதானமாக துடுப்பாடி 60 ஓட்டங்களை குவித்தனர். அடுத்து அசேல குணரத்ன வீசிய பந்தில் அவரிடமே பிடிகொடுத்து ஹஷிம் அம்லா 57 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்தி களமிறங்கிய அணித்தலைவரும் ”மிஸ்டர் 360” என்றும் வர்ணிக்கப்படும் எ.பி .டீ வில்லியர்ஸ் விரைவாக ஓட்டங்களை குவிக்க தென்னாபிரிக்க அணி 34.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 185 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.

தென்னாபிரிக்க அணி சார்பாக ஹஷிம் அம்லா 71 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்ஸர் அடங்கலாக 57 ஓட்டங்களையும் டு ப்லெசிஸ் 68 பந்துகளில் 5 பவுண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 55 ஓட்டங்களையும் பெற்றனர்.

இப்போட்டியை வெற்றி கொண்டதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில் 1-0 என தென்னாபிரிகா முன்னிலை வகிக்கின்றது.

இப்போட்டியின் ஆட்ட நாயகனாக 10 ஓவர்கள் வீசி 26 ஓட்டங்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய இம்ரான் தாஹிர் தெரிவு செய்யப்பட்டார். 

போட்டியின் சுருக்கம்

இலங்கை: 181 (48.3) – குசல் மெண்டிஸ் 62(94), தனஞ்சய டி சில்வா 28(53), தினேஷ் சந்திமால் 22(55), வேன் பார்னல் 3/48, இம்ரான் தாஹிர் 3/26

தென்னாபிரிக்கா: 185/2 (34.2) – ஹஷிம் அம்லா 57(71), டு ப்லெசிஸ் 55*(68), குயிண்டன் டி கொக் 34(40)

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி டர்பனில் நடைபெறும்.