ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 83 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தியுள்ளதுடன் தொடரிலும் 1-0 என முன்னிலை அடைந்துள்ளது.
துபாய் சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் உபுல் தரங்க முதலில் களத்தடுப்பினை தேர்வு செய்தார்.
டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றிய இலங்கை அணியில் இன்றைய போட்டியில் இரண்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. உபாதைக்கு உள்ளாகிய அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் நுவன் பிரதீப் ஆகிய வீரர்களுக்கு பதிலாக தினேஷ் சந்திமால் மற்றும் லஹிரு கமகே ஆகிய வீரர்கள் உள்வாங்கப்பட்டிருந்தனர்.
மறுமுனையில் பாகிஸ்தான் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. காயம் காரணமாக இந்த ஒரு நாள் தொடரில் விளையாடும் வாய்ப்பினை முழுமையாக இழந்த மொஹமட் அமீருக்கு பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் ரும்மான் ரயீஸ் அழைக்கப்பட்டிருந்தார்.
தொடர்ந்து பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் பாகிஸ்தான் வீரர்கள் தமது துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்திருந்தனர். பக்கர் ஷமான் மற்றும் அஹ்மட் ஷேசாத் ஆகியோரால் தொடங்கப்பட்ட பாகிஸ்தானின் இன்னிங்ஸ் ஆரம்பத்தில் மெதுவாகவே காணப்பட்டிருந்தது.
போட்டியின் நான்காவது ஓவரை வீசிய வலது கை வேகப்பந்து வீச்சாளரான லஹிரு கமகே பாகிஸ்தானின் முதல் விக்கெட்டினை அகில தனஞ்சயவின் பிடியெடுப்போடு பதம்பார்த்தார். இதனால் இலங்கை பந்து வீச்சாளர்களை சந்திக்க மிகவும் சிரமப்பட்ட அஹ்மட் ஷேசாத் ஓட்டமேதுமின்றி மைதானத்தை விட்டு வெளியேறினார். போட்டியின் ஆரம்பத்தில் கிடைக்கப்பெற்ற இந்த விக்கெட் இலங்கைக்கு நல்லதொரு ஆரம்பத்தை தந்தது.
இலங்கையின் வெற்றி வேட்கை ஒரு நாள் போட்டிகளிலும் தொடருமா?
ஆசியாவின் கிரிக்கெட் சகோதரர்களாகக்…
ஷேசாத்தின் விக்கெட்டினை அடுத்து மற்றைய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் புதிதாக களம் நுழைந்த பாபர் அசாமுடன் இணைந்து புதிய இணைப்பாட்டம் ஒன்றினை கட்டியெழுப்ப தொடங்கினார். 64 ஓட்டங்கள் வரையில் நீடித்த பாகிஸ்தானின் இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டம் அகில தனஞ்சயவினால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. தனஞ்சயவினால் பாகிஸ்தானின் இரண்டாம் விக்கெட்டாக போல்ட் செய்யப்பட்ட பக்கர் ஷமான் 45 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உள்ளடங்கலாக 43 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.
தொடர்ந்து சீரான இடைவெளியில் பாகிஸ்தான் தமது மூன்றாவது விக்கெட்டையும் பறிகொடுத்தது. எனினும் களத்தில் ஆட்டமிழக்காது நின்ற பாபர் அசாம் சொஹைப் மலிக்குடன் இணைந்து பெரியதொரு இணைப்பாட்டம் ஒன்றுக்கு வித்திட்டார். இந்த இரண்டு வீரர்களினாலும் பாகிஸ்தானின் நான்காம் விக்கெட்டுக்காக அதிவலுவான 139 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பகிரப்பட 50 ஓவர்கள் நிறைவில் பாகிஸ்தான் 6 விக்கெட்டுகளை இழந்து 292 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.
பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் பாபர் அசாம் தனது ஆறாவது ஒரு நாள் சதத்தோடு 131 பந்துகளில் 5 பவுண்டரிகள் அடங்கலாக 103 ஓட்டங்களை குவித்திருந்தார். அதேபோன்று அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய சொஹைப் மலிக் வெறும் 61 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 2 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கலாக 81 ஓட்டங்களை விளாசியிருந்தார்.
சற்று மோசமான களத்தடுப்பை காட்டிய இலங்கை அணியின் பந்து வீச்சில் சுரங்க லக்மால் 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் அகில தனஞ்சய, லஹிரு கமகே, திசர பெரேரா மற்றும் ஜெப்ரி வன்டர்சேய் ஆகிய வீரர்கள் தலா ஒரு விக்கெட் வீதமும் பதம்பார்த்திருந்தனர்.
தொடர்ந்து வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட சற்று சவாலான இலக்கான 293 ஓட்டங்களை 50 ஓவர்களில் பெற பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி நல்லதொரு ஆரம்பத்தைக் காட்டியிருந்த போதிலும் விரைவான முறையில் தமது முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களை இழந்தது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரரான நிரோஷன் திக்வெல்ல இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக வெறும் 19 ஓட்டங்களுடன் ரும்மான் ரயீஸினால் ஆட்டமிழக்கச் செய்யப்பட்டார். அதனையடுத்து களம் நுழைந்த தினேஷ் சந்திமாலும் மீண்டும் சிறப்பாக செயற்பட்ட அதே ரயீஸினால் வீழ்த்தப்பட்டிருந்தார். சந்திமாலின் விக்கெட்டுக்காக இலங்கை மூன்றாம் நடுவரின் உதவியை நாடிய போதிலும் அது பலன் தரவில்லை.
இலங்கையின் வெற்றி இலக்கை அடையும் பயணத்தில் விரைவான இரண்டு விக்கெட்டுகள் பறிபோக நிதானமான முறையில் இலங்கை வீரர்கள் செயற்படத்தொடங்கினர். எனினும் பாகிஸ்தான் அணியின் பகுதிநேர சுழல் வீரர் மொஹமட் ஹபீஸ் அணித்தலைவர் உபுல் தரங்கவினையும் போல்ட் செய்து மேலும் இலங்கைக்கு அழுத்தங்களை தந்தார். இதனால் ஏமாற்றமான 18 ஓட்டங்களுடன் இலங்கை அணித்தலைவரின் இன்னிங்ஸ் நிறைவடைந்தது.
இன்னும் போட்டியின் 16 ஆவது ஓவரை வீசிய வலதுகை வேகப்பந்து வீச்சாளரான ஹசன் அலி அந்த ஓவரில் தொடர்ச்சியாக குசல் மெண்டிஸ் மற்றும் மிலிந்த சிறிவர்தன ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றி இலங்கைக்கு அதிர்ச்சியளித்தார். இதனால் ஒரு கட்டத்தில் இலங்கை 67 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
சந்திமாலின் தலைமைத்துவத்தை பாராட்டும் குமார் சங்கக்கார
இப்படியான ஒரு தருணத்தில் ஜோடி சேர்ந்த லஹிரு திரிமான்ன மற்றும் திசர பெரேரா ஆகியோர் சிறிது நேரம் போராட்டத்தை வெளிப்படுத்தினர். இலங்கை அணியின் இந்த இணைப்பாட்டம் திசர பெரேராவின் விக்கெட்டோடு சுழல் வீரர் சதாப் கானினால் தடுத்து நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து லஹிரு திரிமான்னவும் அரைச்சதம் கடந்த நிலையில் ஆட்டமிழக்க 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்த இலங்கை அணி 209 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியடைந்ததுடன் ஒரு நாள் போட்டிகளில் தமது எட்டாவது தொடர்ச்சியான தோல்வியையும் பதிவு செய்துகொண்டது.
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக லஹிரு திரிமான்ன 74 பந்துகளினை எதிர்கொண்டு 3 பவுண்டரிகள் அடங்கலாக 53 ஓட்டங்களை குவித்திருந்தார். அத்தோடு பின்வரிசையில் ஆறுதல் தரும் விதமாக செயற்பட்ட அகில தனஞ்சய தனது கன்னி அரைச்சதத்துடன் மொத்தமாக 5 பவுண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழப்பின்றி காணப்பட்டிருந்தார். மேலும் தனஞ்சய இலங்கை அணியின் எட்டாம் விக்கெட்டுக்காக ஜெப்ரி வன்டர்சேய் உடன் இணைந்து 68 ஓட்டங்களை பகிர்ந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ரும்மான் ரயீஸ் மற்றும் ஹசன் அலி ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றி தமது அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
போட்டியின் ஆட்டநாயகன் விருது சொஹைப் மலிக்கிற்கு வழங்கப்பட்டது.
போட்டியின் சுருக்கம்
பாகிஸ்தான் – 292/6 (50) – பாபர் அசாம் 103(131), சொஹைப் மலிக் 81(61), பக்கர் சமான் 43(45), மொஹமட் ஹபீஸ் 32(38), சுரங்க லக்மால் 47/2(10)
இலங்கை – 209/8 (50) – லஹிரு திரிமான்ன 53(74), அகில தனஞ்சய 50(72), ஜெப்ரி வன்டர்சேய் 25(47), ஹசன் அலி 36/3(9), ரும்மான் ரயீஸ் 49/3(9)
முடிவு – பாகிஸ்தான் அணி 83 ஓட்டங்களால் வெற்றி