இலங்கை 19 வயதிற்கு உட்பட்ட ரக்பி அணியானது இன்று இலங்கை நேரப்படி முற்பகல் 11 மணிக்கு நடப்பு சம்பியனான ஹொங்கொங் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

ஹொங்கொங் அணியானது சைனீஸ் தாய்பே அணியை 54-08 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்றது. இவ்வருட ஹொங்கொங் அணியானது, சென்ற வருடம் சிம்பாப்வேயில் நடைபெற்ற கனிஷ்ட உலக கோப்பையில் வெற்றிபெற்ற சம்பியன் ஹொங்கொங் அணியில் இடம்பெற்ற 6 வீரர்களை உள்ளடக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஹொங்கொங் அணியின் தலைவர் மார்க் கோர்பர்க் சென்ற போட்டியில் இரண்டு அற்புதமான ட்ரைகளை வைத்து அசத்தினார். இவர் இலங்கை அணிக்கு கடும் சவாலாக அமைவார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் ஹொங்கொங் அணியின் நட்சத்திர வீரர், அவ் அணியின் பின் வரிசை வீரரான மத்தியூ வோர்லி ஆவார். சென்ற போட்டியில் அவர் ஒரு ட்ரை  வைத்ததோடு அனைத்து உதைகளையும் வெற்றிகரமாக உதைத்து ஹொங்கொங் அணியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றினார்.

ஹொங்கொக் அணியின் பயிற்றுவிப்பாளரான பீட்டர் ட்ருவேட் எம்மிடம் கருத்து தெரிவித்த பொழுது “இலங்கை அணியுடனான போட்டி கடினமானதொன்றாகும். இலங்கை அணியானது பலம் மிக்க மற்றும் கடும் சவால் விடுக்கக் கூடிய ஒரு அணியாகும். இலங்கை அணி சிறப்பாக பயிற்சி பெற்றுள்ளதால் இப்போட்டிகளில் பங்குகொள்ளும் சிறந்த அணியொன்றாகும்” எனக் குறிப்பிட்டார்.

19 வயதிற்குட்பட்ட ஆசிய ரக்பி போட்டிகளில் முதலாவது வெற்றியை இலங்கை அணி சுவீகரித்தது

மறுமுனையில் இலங்கை அணியானது மலேசிய அணியுடனான கடந்த போட்டியில் பலத்த போட்டியின் பின்னர் இறுதி நிமிட ட்ரையின் மூலமே வெற்றிபெற்றது. இலங்கை அணியின் தனுஜ மதுரங்கவின் இறுதி நிமிட அற்புத ட்ரையின் பின்னர் மைதானத்தில் மலேசிய ரசிகர்கள் அமைதி காத்தது குறிப்பிடத்தக்கது. சிறப்பாக விளையாடியதன் பின்னர் இறுதி நிமிடத்தில் மலேசிய அணி தோற்றமை கவலைக்குரியது.

இதுபற்றி இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் நிலுபர் இப்ராகிம் கருத்து தெரிவித்த பொழுது “நாங்கள் மலேசிய அணியிடம் இருந்து இவ்வாறான ஒரு சவாலை எதிர்பார்க்கவில்லை. மலேசிய முன் வரிசை வீரர்கள் சிறப்பாக விளையாடி போட்டியை அவர்கள் பக்கம் ஈர்த்தனர்” எனத் தெரிவித்தார்.

இன்றைய போட்டிக்கு மழையின் குறுக்கீடு காணப்படாது என்பதால் இப் போட்டி கடந்த போட்டியை விட வித்தியாசமாக அமையும். ரவின் யாப்பா (இசிபதன), ஹரித் பண்டார (இசிபதன), வஜிட் பஹ்மி (ஸாஹிரா), சயான் ஸாபர் (வெஸ்லி), சுபுன் டில்ஷான் (விஞ்ஞான கல்லூரி) மற்றும் மதுரங்க (விஞ்ஞான கல்லூரி) ஆகியோர் கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடி இருந்தனர்.

கடந்த போட்டியில் இலங்கை அணி சிறப்பாக முன் நோக்கி நகரவில்லை. குஷான் இந்துனில் மட்டும் சில முறை மலேசிய அணி வீரர்களைக் கடந்து முன் நகர்ந்தார். சந்தேஷ் ஜயவிக்ரம கடந்த போட்டியில் சுமாராக விளையாடிய பொழுதும் ஹொங்கொகாங் அணியுடனான போட்டியில் அவர் ஒரு முக்கிய வீரராக அமையக்கூடும். இலங்கை அணி ஹொங்கொங் அணியுடனான போட்டியில் சிறப்பாக தடுத்து விளையாட வேண்டும். இல்லையெனில் பெரும் தோல்வியை சந்திக்கக்கூடும்.

அதேவேளை இலங்கை அணி நேர்த்தியான விளையாட்டு மற்றும் முடிவு எடுத்தல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். கடந்த போட்டியில் 78 ஆவது நிமிடத்தில் 1 புள்ளியால் பின் தள்ளி காணப்பட்ட நிலையில் தமக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தும் அதை கம்பம் நோக்கி உதையாது, சுயமாக எடுத்து செல்லப்பட்டது. அதிர்ஷ்டமாக இலங்கை அணி ட்ரை வைத்த பொழுதும் வினைத்திறனற்ற தீர்மானம் எடுத்ததை அது வெளிப்படுத்தியது.

இலங்கை அணியானது பல ஆய்வுகள் மற்றும் பயிற்சியின் பின்னர் சிறந்த மனோ நிலையில் போட்டியை எதிர்கொள்ள காத்திருக்கிறது.

இலங்கை மற்றும் ஹொங்கொங் அணிகளுக்கிடையிலான போட்டியினை 14ஆம் திகதி காலை 10.50 மணி முதல் www.thepapare.com, டயலொக் TV இலக்கம் 1 அலைவரிசையில் மற்றும் அலைபேசியில் My TV APP மூலமும் கண்டு ரசிக்கலாம். மேலும் மலேசிய மற்றும் சைனீஸ் தாய்பே அணிகளுக்கிடையிலான போட்டியினை பிற்பகல் 12.50 மணி முதல் ThePapare.com இல் நேரடியாக கண்டுகளிக்கலாம்.

WATCH LIVE Sri Lanka v Hong-Kong – Asia Rugby | 14th Dec