சவாலான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடும் பங்களாதேஷ் இளையோர் அணி

987

சுற்றுலா பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி ஆகியவை இடையே கட்டுநாயக்கவில்  நடைபெற்று வருகின்ற இளையோர் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று (25) நிறைவுக்கு வந்தது.

போட்டியின் மூன்றாம் நாள் நிறைவில் இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி வெற்றி இலக்காக நிர்ணயம் செய்த சவாலான 351 ஓட்டங்களை அடைய தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடி வரும் பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி நல்லதொரு ஆரம்பத்தை காட்டியுள்ளது.

பங்களாதேஷ் இளையோர் அணியை சுழலால் மிரட்டிய அஷான், ரொஹான் ஜோடி

இரண்டு அணிகளுக்கும் இடையிலான இளையோர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் இளையோர் கிரிக்கெட் அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை அடைந்த பின்னர், இரண்டு அணிகளுக்கும் இடையிலான இளையோர் டெஸ்ட் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டி கடந்த செவ்வாய்க்கிழமை (23) ஆரம்பமாகியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய இலங்கை இளையோர் கிரிக்கெட் அணி தமது முதல் இன்னிங்ஸில் 226 ஓட்டங்களைப் பெற்றதுடன் அதனை அடுத்து பங்களாதேஷ் இளையோர் கிரிக்கெட் அணி தமது முதல் இன்னிங்சில் 109 ஓட்டங்களுடன் சுருண்டது.

தொடர்ந்து, 117 ஓட்டங்கள் முன்னிலையோடு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை இளையோர் கிரிக்கெட் அணி 109  ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த போது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது. களத்தில் சொனால் தினுஷ 16 ஓட்டங்களுடனும், மொஹமட் சமாஸ் 12 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது இருந்தனர்.

இன்று போட்டியின் மூன்றாம் நாளில் பங்களாதேஷ் இளையோர் கிரிக்கெட் அணிக்கு சவாலான வெற்றி இலக்கொன்றை நிர்ணயிக்கும் நோக்குடன் மொத்தமாக 217 ஓட்டங்கள் முன்னிலையோடு தமது இரண்டாம் இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை இளையோர் கிரிக்கெட் அணியில் முதல் விக்கெட்டாக மொஹமட் சமாஸ் 14 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார்.

எனினும், மத்திய வரிசையில் துடுப்பாடிய சமிந்து விஜேசிங்க பெற்றுக் கொடுத்த அரைச்சதம் ஒன்றுடனும் சந்துன் மெண்டிஸ், சொனால் தினுஷ ஆகியோர் பெறுமதியான ஓட்டங்களுடனும் இலங்கை தரப்பிற்கு வலுச்சேர்த்தனர்.

இவர்களின் துடுப்பாட்ட உதவியோடு இலங்கை இளையோர் கிரிக்கெட் அணி தமது இரண்டாம் இன்னிங்சுக்காக 233 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த போது தமது ஆட்டத்தை இடை நிறுத்திக் கொண்டது.

இலங்கை இளையோர் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பாக அரைச்சதம் தாண்டிய சமிந்து விஜேசிங்க 8 பெளண்டரிகள் அடங்கலாக 55 ஓட்டங்களினையும், சொனால் தினுஷ 37 ஓட்டங்களினையும் சந்துன் மெண்டிஸ் 36 ஓட்டங்களினையும் குவித்திருந்தனர்.

இதேநேரம் பங்களாதேஷ் இளையோர் கிரிக்கெட் அணி சார்பான பந்துவீச்சில் இளம் இடதுகை சுழல் வீரரான  ரகிபுல் ஹசன் 93 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.

பின்னர் இலங்கை இளையோர் கிரிக்கெட் அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட கடின இலக்கான 351 ஓட்டங்களை அடைய தம்முடைய இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை பங்களாதேஷ் இளையோர் கிரிக்கெட் அணி ஆரம்பித்தது.

இதனை அடுத்து ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தன்ஷித் ஹசன் பெற்றுக் கொடுத்த 36 ஓட்டங்களோடு  போட்டியின் மூன்றாம் நாள் நிறைவில் 18 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து 75 ஓட்டங்களுடன் பங்களாதேஷ் இளையோர் அணி நல்ல ஆரம்பத்தை பெற்றுள்ளது.

ஏன் குசல் மென்டிஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது?; விளக்கும் சந்திமால்

பங்களாதேஷ் இளையோர் கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு இன்னும் 276 ஓட்டங்கள் தேவையாக இருப்பதுடன் போட்டியின் மூன்றாம் நாள் நிறைவுக்கு வரும் போது களத்தில் சஜித் ஹசன் 29 ஓட்டங்களுடனும், அணித்தலைவர் தவ்ஹீத் ரித்தோய் 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது நின்றிருந்தனர்.

இலங்கை இளையோர் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பாக ரொஹான் சஞ்சய பங்களாதேஷ் இளம் அணியில் பறிபோயிருந்த விக்கெட்டினை தனக்கென சொந்தமாக்கியிருந்தார்.

ஸ்கோர் விபரம்

போட்டியின் நான்காவதும் இறுதியுமான நாள் நாளை தொடரும்

 

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க