2026ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 13ஆவது லீக் போட்டியில், அயர்லாந்து இளையோர் அணியுடன் 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிக இலகுவாக வீழ்த்திய இலங்கை அணி, தொடரில் தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
>>இலங்கை கிரிக்கெட்டுடன் கைகோர்க்கும் IFS நிறுவனம்
நமீபியாவின் விண்ட்ஹோக் மைதானத்தில் திங்கட்கிழமை (19) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை இளம் அணியானது, முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தது.
பின்னர் நாணய சுழற்சிக்கு அமைய நிதானமாக துடுப்பாட்டத்தினை தொடங்கிய இலங்கை இளம் அணி, அணித்தலைவர் விமத் தின்சாராவின் சிறப்பான ஆட்டத்தால் வலுவான நிலையை எட்டியது. அதன்படி இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 267 ஓட்டங்களைக் குவித்தது.
விமத் டின்சார 6 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 102 பந்துகளில் 95 ஓட்டங்களை விளாசி சதத்தைத் ஐந்து ஓட்டங்களால் தவறவிட்டிருந்தார். அவருக்கு உறுதுணையாக இருந்த கவிஜ கமகே 49 ஓட்டங்களையும், இறுதி நேரத்தில் அதிரடியாக விளையாடிய சாமிக ஹீனட்டிகல ஆட்டமிழக்காமல் 4 பௌண்டரிகளுடன் 51 ஓட்டங்களையும் பெற்றார். அயர்லாந்து இளம் அணியின் பந்துவீச்சில் ஒலிவர் ரைலி 51 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் 268 ஓட்டங்கள் என்ற சவாலான இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணிக்கு ஆரம்பம் தொடக்கம் அதிர்ச்சியாக அமைந்தது. இலங்கை பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அந்த அணி 40.1 ஓவர்களில் 161 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து போட்டியில் தோல்வியடைந்தது. அயர்லாந்து துடுப்பாட்டம் சார்பில் கெல்லம் ஆர்ம்ஸ்ட்ராங் அதிகபட்சமாக 39 ஓட்டங்களை எடுத்தார்.
>>பாகிஸ்தான் T20 தொடரிற்கான அவுஸ்திரேலிய குழாம் அறிவிப்பு
இலங்கை இளம் அணியின் பந்துவீச்சு சார்பில் துல்னித் சிகார 4 விக்கெட்டுக்களையும், ரசித் நிம்சார 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர். போட்டியின் ஆட்ட நாயகனாக இலங்கைத் தரப்பின் தலைவரான விமத் டின்சார தெரிவு செய்யப்பட்டார்.
இந்த வெற்றி மூலம் குழு A இல் தனது முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றிகளைப் பதிவு செய்துள்ள இலங்கை இளையோர் அணி, அடுத்ததாக தொடரில் அவுஸ்திரேலியாவினை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23) எதிர்கொள்கின்றது.






















