இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு எதிரான இரண்டாவது இளையோர் டெஸ்ட் போட்டியில் தனது இரண்டாவது இன்னிங்ஸை பலோ-ஓன் (Follow on) செய்திருக்கும் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி இன்னிங்ஸ் தோல்வி ஒன்றை தவிர்க்கும் வகையில் துடுப்பெடுத்தாடி வருகிறது.
அம்பாந்தோட்டை, மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் இன்று (26) மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவின்போது தனது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பாடும் இலங்கை இளையோர் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 47 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதன்படி இலங்கை இளையோர் அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க ஆட்டத்தில் மேலும் ஒருநாள் எஞ்சியிருக்கும் நிலையில் 7 விக்கெட்டுகள் கைவசம் இருக்க 250 ஓட்டங்களைப் பெற வேண்டும்.
இந்திய அணியின் இமாலய ஓட்டங்களை எட்ட இலங்கை போராட்டம்
எனினும் மூன்றாவது நாளில் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணிக்காக கொழும்பு, றோயல் கல்லூரியின் வலதுகை துடுப்பாட்ட வீரர் பசிந்து சூரியபண்டார தனித்து சதம் ஒன்றை பெற்றார்.
இந்த இளையோர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பவன் ஷாஹ்வின் இரட்டைச் சதம் (282) மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அதர்வா டயிட்டின் சதத்தின் (177) உதவியோடு முதல் இன்னிங்ஸில் 613 ஓட்டங்களை பெற்றது.
இதனிடையே 140 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இன்று தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை இளையோர் அணிக்கு சூரியபண்டார மற்றும் சொனால் தினுஷ சத இணைப்பாட்டம் ஒன்றை பெற்றனர். இருவரும் ஐந்தாவது விக்கெட்டுக்கு 128 ஓட்டங்களை பகிர்ந்துகொள்ள இலங்கை இளையோர் அணியின் ஓட்டங்கள் 200ஐ தாண்டியது.
இலங்கை இளையோர் டெஸ்ட் அணிக்காக பெறப்பட்ட இரண்டாவது அதிகூடிய இணைப்பாட்ட ஓட்டங்கள் இதுவாகும். இதில் 2016 ஆம் ஆண்டு அஷேன் பண்டார மற்றும் பதும் நிஸ்ஸங்க இணைந்து பெற்ற பெற்ற 210 ஓட்டங்களே சாதனையாகும்.
இதன்போது 5 ஓட்டங்களுடன் மூன்றாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்த மஹாநாம கல்லூரியின் தினுஷ 144 பந்துகளுக்கு முகம்கொடுத்து 51 ஓட்டங்களை பெற்ற நிலையில் வலதுகை சுழல்பந்து வீச்சாளர் அயூஷ் பதோனியின் பந்துக்கு போல்டானார். தினுஷவின் கன்னி இளையோர் டெஸ்ட் போட்டி இதுவாகும்.
எனினும் மறுமுனையில் அபாரமாக துடுப்பாடிய சூரியபண்டார சதம் கடந்தார். 236 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 17 பௌண்டரிகளுடன் 115 ஓட்டங்களை பெற்றார். சூரியபண்டாரவின் இரண்டாவது இளையோர் டெஸ்ட் போட்டி இதுவாகும்.
இந்நிலையில் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியில் மத்திய பின்வரிசையில் வந்த சதுன் மெண்டிஸ் கடைசி நேரத்தில் ஓட்டங்களை அதிகரிக்க போராடினார். எனினும் மறுமுனையில் நிபுன் மாலிங்க 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததோடு யாழ் மத்திய கல்லூரி வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்தினால் 3 ஓட்டங்களையே பெறமுடிந்தது. அடுத்து வந்த கல்ஹார சேனாரத்ன 8 ஓட்டங்களை மாத்திரமே பெற சதுன் மெண்டிஸ் கடைசி விக்கெட்டுக்கு கலன பெரேராவுடன் இணைந்து இலங்கை அணியின் ஓட்டங்களை 300ஐ தாண்டச் செய்தார்.
இருவரும் 10 ஆவது விக்கெட்டுக்கு 38 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர். அரைச்சதத்தை பெற ஒரு ஓட்டம் தேவைப்படும் நிலையில் சதுன் மெண்டிஸ் ஆட்டமிழந்தார்.
இறுதியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து கௌரவமாக 316 ஓட்டங்களை பெற்றபோதும் அது தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடுவதை தவிர்க்க போதுமாக இருக்கவில்லை.
இதன்போது இந்திய இளையோர் அணி சார்பில் மொஹித் ஜங்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்படி மூன்றாவது நாள் ஆட்டத்தின் கடைசி நேரத்தில் தனது இரண்டாவது இன்னிங்ஸை பலோ-ஒன் செய்த இலங்கை இளையோர் அணி முதல் இரண்டு விக்கெட்டுகளையும் 21 ஓட்டங்களுக்கே பறிகொடுத்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கமில் மிஷார, சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரின் பந்துக்கு LBW முறையில் 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அடுத்து வந்த அணித்தலைவர் நிபுன் தனஞ்சய 8 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
இந்நிலையில் நிதானமாக ஆடிக்கொண்டிருந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் விக்கெட் காப்பாளருமான நிஷான் மதுஷங்க, அயுஷ் பதோனியின் பந்தில் சிக்கி 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் இலங்கை அணி இன்னிங்ஸ் தோல்வி ஒன்றை தவிர்க்க ஆட்டத்தின் நான்காவது மற்றும் கடைசி நாளான நாளை (27) தனது எஞ்சிய 7 விக்கெட்டுகளையும் காத்துக்கொண்டு ஆட்டநேரம் முடியும் வரை துடுப்பெடுத்தாட வேண்டிய நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளது. நுவனிது பெர்னாண்டோ 2 ஓட்டங்களுடனும் கல்ஹார சேனாரத்ன ஓட்டம் இன்றியும் களத்தில் உள்ளனர்.
ஸ்கோர் விபரம்
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<




















