இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட மற்றும் இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணிகளுக்கிடையில் மொறட்டுவையில் நடைபெற்ற ஐந்தாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டியில் இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணி யசஷ்வி ஜெய்ஸ்வாலின் கன்னி சதத்தின் உதவியுடன் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
இரண்டு அணிகளுக்குமிடையிலான ஒருநாள் தொடரில் நான்கு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றிருந்தன. இந்த நிலையில் தொடரை தீர்மானிக்கக்கூடிய இறுதிப்போட்டியில் சிறப்பான சகலதுறை வெளிப்பாட்டினால் இந்திய கனிஷ்ட அணி தொடரை 3-2 என கைப்பற்றியது.
இலங்கை இளையோர் அணியை வீழ்த்தி தொடரை தக்க வைத்த இந்திய தரப்பு
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை இளையோர் அணித் தலைவர் நிபுன் தனஞ்சய முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார். இதன்படி களமிறங்கிய நிபுன் மதுஷ்க மற்றும் நவோத் பர்ணவிதான ஆகியோர் ஓரளவு சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர். எனினும் இலங்கை அணி 32 ஓட்டங்களுக்கு தங்களது முதல் விக்கெட்டை இழந்தது. நவோத் பர்ணவிதான 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய அணித் தலைவர் நிபுன் தனஞ்சய முதல் பந்திலேயே ரன்-அவுட் மூலம் துரதிஷ்டவசமாக ஆட்டமிழக்க, தொடர்ந்து இணைந்த நிபுன் மதுஷ்க மற்றும் நுவனிது பெர்னாண்டோ ஜோடி சிறப்பாக துடுப்பெடுத்தாடியது. இருவரும் 101 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற, அரைச்சதம் கடந்த நுவனிது பெர்னாண்டோ 56 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த பசிந்து சூரிய பண்டார 20 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய ஏனைய இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, சதத்தை நெருங்கிய நிபுன் மதுஷ்க தனியாளாக 95 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து துரதிஷ்டவசமாக சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். இவரின் இந்த ஓட்ட எண்ணிக்கையின் உதவியுடன் இலங்கை கனிஷ்ட அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 212 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இந்திய கனிஷ்ட அணி சார்பில் மொஹித் ஜங்கரா 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, இலங்கை கனிஷ்ட அணி தவறவிட்ட பிடியெடுப்பு மற்றும் களத்தடுப்பின் பிழைகளால் இலகுவாக ஓட்டங்களை குவித்தது. ஆரம்ப விக்கெட்டுக்காக 71 ஓட்டங்கள் பகிரப்பட்ட நிலையில் டெவ்டுட் படிக்கல் 38 ஓட்டங்களுடன் அவிஷ்க லக்ஷானின் பந்து வீச்சில் வெளியேறினார். எனினும் அவருடன் களமிறங்கிய யசஷ்வி ஜெய்ஸ்வால் மற்றும் பவன் ஷாஹ் ஆகியோர் இந்திய அணிக்கு வலுவான இணைப்பாட்டத்தை பெற்றுக்கொடுத்தனர்.
ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய யசஷ்வி ஜெய்ஸ்வால் தனது கன்னி அரைசத்சதத்தை கடந்து துடுப்பெடுத்தாட, பவன் ஷாஹ்வும் அவருடன் இணைந்து இந்திய அணிக்கு இலகுவாக ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பின்னர், மானசிங்கவின் பந்து வீச்சில் பவன் ஷாஹ் 36 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க, இந்திய கனிஷ்ட அணி 143 ஓட்டங்களுக்கு தங்களது இரண்டாவது விக்கெட்டை இழந்தது.
திமுத், சதீர ஆகியோரின் அபார துடுப்பாட்டத்தினால் இலகு வெற்றி பெற்ற இலங்கைத் தரப்பு
எனினும் அடுத்து ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்த அணித் தலைவர் அர்யான் ஜுயல் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். போட்டியின் இறுதிவரை களத்தில் நின்ற யசஷ்வி ஜெய்ஸ்வால், தனது கன்னி இளையோர் சதத்தை மூன்றாவது போட்டியிலேயே கடந்திருந்தார். 128 பந்துகளுக்கு முகங்கொடுத்த இவர், 8 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 114 ஓட்டங்களையும், அர்யான் ஜுயல் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, இந்திய இளையோர் அணி 42.4 ஓவர்களில் 214 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது.
இந்திய இளையோர் அணி இரண்டு போட்டிகள் கொண்ட இளையோர் டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியிருந்ததுடன், ஒருநாள் தொடரை 3-2 என கைப்பற்றி, வெற்றியுடன் நாடு திரும்பவுள்ளது.
ஸ்கோர் விபரம்
- போட்டியின் ஆட்டநாயகன் – யசஷ்வி ஜெய்ஸ்வால்
- தொடரின் ஆட்டநாயகன் – நிஷான் மதுஷ்க
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க