விறுவிறுப்பான போட்டியில் திரில் வெற்றிபெற்ற இலங்கை இளையோர்

Sri Lanka U19 vs Bangladesh U19 2021

138
Sri Lanka Cricket
 

தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பங்களாதேஷ் 19 வயதின்கீழ் அணிக்கு எதிரான இரண்டாவது இளையோர் ஒருநாள் போட்டியில், இலங்கை 19 வயதின்கீழ் அணி ஒரு ஓட்டத்தால் திரில் வெற்றிபெற்று 2-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

முதல் போட்டியில் இலங்கை அணி இலகு வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப்பெற்றிருந்த நிலையில் இரண்டாவது போட்டி இன்றைய தினம் (18) நடைபெற்றது.

மாலிங்கவின் சாதனையை முறியடித்தார் சகிப் அல் ஹசன்

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. அதன்படி, முதல் போட்டியில் அரைச்சதம் கடந்திருந்த பவன் பத்திராஜ இந்த போட்டியிலும் அரைச்சதம் கடக்க, இவருடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய சதீஷ் ஜயவர்தன மற்றுமொரு அரைச்சதத்தை பெற்றுக்கொடுத்திருந்தார்.

இவர்கள் இருவரின் சிறந்த பங்களிப்புடன் இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 228 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அதிகபட்சமாக சதீஷ் ஜயவர்தன 58 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, பவன் பதிராஜ 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார்.

இவர்களுக்கு அடுத்தப்படியாக ஷெவோன் டேனியல் 34 ஓட்டங்கள், சமிந்து விக்ரமசிங்க 27 ஓட்டங்கள் மற்றும் ரவீன் டி சில்வா 25 ஓட்டங்கள் என தங்களுடைய பங்களிப்பை வழங்கினர். பங்களாதேஷ் அணிசார்பாக, ரிபோன் மொண்டல் 3 விக்கெட்டுகளையும், அஷிகூர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி மிகச்சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை குவித்த போதும், இறுதிநேர விக்கெட்டுகள் பறிகொடுப்பால் ஒரு ஓட்டத்தால் துரதிஷ்டவசமாக தோல்வியடைந்தது.

பங்களாதேஷ் அணி ஒரு கட்டத்தில் இலகுவாக வெற்றிபெறும் என்ற நிலை இருந்த போதும், மதீஷ பதிரன மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோர் பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஒரு கட்டத்தில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 204 ஓட்டங்களை பெற்றிருந்தது.

மூன்று ஓவர்களுக்கு 19 ஓட்டங்கள் மாத்திரமே தேவைப்பட்டட நிலையில், மதீஷ பதிரன 48வது ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு பலம் கொடுத்தார். எனினும், இறுதி விக்கெட்டுக்காக பங்களாதேஷ் அணி ஓட்டங்களை குவித்து வெற்றியிலக்கை நெருங்கியது.

மதீஷ பதிரனவின் இறுதி ஓவரில் 8 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், அஷிகூர் ரஹ்மான் பௌண்டரி அடிக்க, கடைசி 4 பந்துகளில் 2 ஓட்டங்கள் தேவை என்ற நிலை உருவானது. இதில், ரிபோன் மொண்டல் ஒரு ஓட்டத்தை பெற முயற்சிக்க, பத்திராஜ பந்தை விக்கெட்டுக்கு எறிந்து மொண்டலை ஆட்டமிழக்கச்செய்தார். இதன் காரணமாக, ஒரு ஓட்டத்தால் இலங்கை அணி திரில் வெற்றிபெற்றது.

பங்களாதேஷ் அணிசார்பாக அதிபட்சமாக மஹ்பிஜுல் இஸ்லாம் 75 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, இவருக்கு அடுத்தப்படியாக இப்திகார் ஹுசைன் 36 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் மதீஷ பதிரன மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்த, டிரிவீன் மெதிவ்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன்படி, இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்றதன் ஊடாக, 5 போட்டிகள் கொண்ட இளையோர் தொடரில் இலங்கை அணி, 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<