அவுஸ்திரேலியா பயணிக்கவுள்ள 19 வயதிற்கு உட்பட்ட இலங்கை கனிஷ்ட அணியின் 15 பேர் கொண்ட குழாம் இன்று இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழுவினால் அறிவிக்கப்பட்டது.

இவ்வணியின் தலைவராக ரிச்மண்ட் கல்லூரியின் வீரரும், கடந்த ஆண்டு இடம்பெற்ற கனிஷ்ட ஆசிய கிண்ணத்தின் போது இலங்கையின் தலைவராகவும் செயற்பட்ட கமிந்து மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மூன்று நாள் பயிற்சிப் போட்டியொன்றுடன் ஆரம்பமாகும் இத்தொடரில் இலங்கை கனிஷ்ட அணியும் அவுஸ்திரேலிய கனிஷ்ட அணியும் மூன்று நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி ஒன்றிலும், ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் மோதவுள்ளன.

திரித்துவக் கல்லூரியின் சகலதுறை வீரரான ஹசித போயகொட இலங்கை அணியின் உபதலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். க.பொ.த சாதாரண தரப்பரீட்சை காரணமாக கனிஷ்ட ஆசிய கிண்ணத் தொடரை தவறவிட்ட இசிபதன கல்லூரியின் அயன சிறிவர்தன மீண்டும் அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இக்குழாமில் உள்ளடக்கப்பட்டுள்ள அனைத்து வீரர்களும் 2018 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் இடம்பெறவுள்ள கனிஷ்ட உலகக்கிண்ண தொடரிற்கு தகுதியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பருவகாலத்தில் 1000 ஓட்டங்களை கடந்த புனித ஜோசப் கல்லூரியின் நிபுன் சுமனசிங்க, காலி மஹிந்த கல்லூரியின் வேகப் பந்துவீச்சாளரான நிபுன் மாலிங்க, 1000 ஓட்டங்களை கடந்துள்ள மற்றுமொரு வீரரான மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியின் லசித் குரூஸ்புள்ளே ஆகியோர் முதல் முறையாக இலங்கை கனிஷ்ட அணிக்கு தெரிவாகியுள்ளனர்.

இவ்வருடத்தின் ஆரம்பத்தில் தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற தொடரின் போது 25 விக்கெட்டுகளை கைப்பற்றி இலங்கை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற 17 வயதான வேகப் பந்துவீச்சாளர் நிபுன் ரஷ்மிக இத்தொடரின் போதும் மிக முக்கிய வீரராக காணப்படுவார். அவுஸ்திரேலியாவில் காணப்படும் வேகப்பந்துவீச்சிற்கு உசிதமான ஆடுகளங்களில் இவரது பந்துவீச்சு இலங்கை அணியின் வாய்ப்புக்களை தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும்.

அணியின் பயிற்றுவிப்பாளராக ரோய் டயஸ் கடமையாற்றுகின்றதுடன், இக்குழாம் எதிர்வரும் திங்கட்கிழமை (மார்ச் 27) அவுஸ்திரேலியா நோக்கி புறப்படவுள்ளது.

இலங்கை 19 வயதிற்கு உட்பட்ட குழாம்

கமிந்து மெண்டிஸ் (தலைவர் – ரிச்மண்ட் கல்லூரி, காலி)
ஹசித போயகொட (உபதலைவர் – திரித்துவக் கல்லூரி, கண்டி)
அஷென் பண்டார (புனித அலோசியஸ் கல்லூரி, காலி)
ஜெஹான் டேனியல் (புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு)
பிரவீன் ஜயவிக்ரம (புனித செபஸ்டியன் கல்லூரி, மொரட்டுவ)
விஷ்வ சதுரங்க (பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவ)
நிபுன் ரன்ஷிக (பி.டி.எஸ் குலரத்ன கல்லூரி, அம்பலாங்கொடை)
நிபுன் மாலிங்க (மஹிந்த கல்லூரி, காலி)
நிபுன் சுமனசிங்க (புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு)
லசித் குரூஸ்புள்ளே (மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு)
கிரிஷான் சஞ்சுல (டி மெசனட் கல்லூரி, கந்தானை)
அயன சிறிவர்தன (இசிபதன கல்லூரி, கொழும்பு)
ஹரீன் புத்தில (புனித அலோசியஸ் கல்லூரி, காலி)
திசரு டில்ஷான் (திரித்துவக் கல்லூரி, கண்டி)
திலான் பிரஷான் (புனித சேர்வேஷஸ் கல்லூரி, மாத்தறை)