பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திற்கான 15 பேர் கொண்ட இலங்கை 17 வயதின்கீழ் கிரிக்கெட் அணியை இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
இத்தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக கொழும்பு றோயல் கல்லூரியின் ரெஹான் பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, அறிவிக்கப்பட்டுள்ள இந்தக் குழாத்தில் கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த 3 வீரர்கள், ரத்கம தேவபத்திராஜ கல்லூரி, கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி மற்றும் கல்கிஸ்ஸ புனித தோமியர் கல்லூரியைச் சேர்ந்த தலா 2 வீரர்கள் அதிகபட்சமாக இடம்பெற்றுள்ளனர்.
இதனிடையே, இத்தொடரில் யாழ். வீரர்கள் எவரும் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொடரானது சவாலானதாக இருக்கும் அதேவேளை, விலைமதிப்பற்ற அனுபவத்தை வழங்கும் சுற்றுப்பயணமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இது இளம் கிரிக்கெட் வீரர்களின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கியமான கட்டமாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>இளையோர் உலகக்கிண்ணத்துக்கான போட்டி அட்டவணை வெளியானது<<
இரண்டு 3 நாள் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் (50 ஓவர்) கொண்ட தொடரில் பங்கேற்க இலங்கை 17 வயதின்கீழ் கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் பங்களாதேஷ் செல்ல உள்ளது.
தொடரின் முதலாவது 3 நாள் போட்டி நவம்பர் 27 முதல் 29 வரை மீர்பூரில் நடைபெறும். இரண்டாவது 3 நாள் போட்டி டிசம்பர் 2 முதல் 4 வரை பஷுந்தர்வில் நடைபெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகளும் சிட்டகோங்கில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த போட்டிகள் முறையே டிசம்பர் 7, 9 மற்றும் 12 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளன.
போட்டி அட்டவணை
- நவம். 27 முதல் 29 வரை – முதல் மூன்று நாள் போட்டி மீர்பூரில்
- டிசம். 2 முதல் 4 வரை – இரண்டாவது மூன்று நாள் போட்டி பஷுந்தர்வில்
- டிசம். 7 – முதல் ஒருநாள் போட்டி சிட்டகோங்கில்
- டிசம். 9 – இரண்டாவது ஒருநாள் போட்டி சிட்டகோங்கில்
- டிசம். 12 – மூன்றாவது ஒருநாள் போட்டி சிட்டகோங்கில்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















