இலங்கை அணியை 110 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்திய தென்னாபிரிக்க அணி பந்து வீச்சாளர்கள்

874
SLvSA 2nd Test

சுற்றுலா இலங்கை அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்குமிடையிலான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 297 ஓட்டங்களை பெற்றிருந்தது. இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தை தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்ட வீரர்களான குவிண்டன் டி கொக் மற்றும் கைல் அப்போட் தொடர்ந்தனர்.

இன்றைய நாளின் முதலாவது விக்கெட்டாக கைல் அப்போட் முதல் நாள் ஆட்ட முடிவின்போது பெற்றிருந்த 16 ஓட்டங்களுடன் ரங்கன ஹேரத்தின் பந்து வீச்சில் விக்கெட் காப்பாளர் தினேஷ் சந்திமாலிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் துடுப்பாடிக் கொண்டிருந்த குவிண்டன் டி கொக் 11 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 101 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதோடு தென்னாபிரிக்க அணியை வலுவான நிலைக்கு எடுத்துச் சென்றார். இறுதியில் தென்னாபிரிக்க அணி தமது முதல் இன்னிங்சுக்காக 116 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 392 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. தென்னாபிரிக்க அணி சார்பாக டீன் எல்கர் மற்றும் குவிண்டன் டி கொக் ஆகியோர் சதத்தைப் பூர்த்திசெய்தனர்.

இலங்கை அணி சார்பாக பந்து வீச்சில் லஹிரு குமார 6 விக்கெட்டுகளையும் ரங்கன ஹேரத் மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அதே நேரம், இன்று கைல் அப்போட்டின் விக்கெட்டினை வீழ்த்திய ரங்கன ஹேரத் இலங்கை அணிக்காக கூடிய டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்து வீச்சாளராக பதிவானார். முதல் இடத்தில் 800 விக்கெட்டுகளுடன் முத்தையா முரளிதரனும் இரண்டாவது இடத்தில் 355 விக்கெட்டுகளுடன் சமிந்த வாசும் இருந்தனர். இன்று கைப்பற்றிய விக்கெட்டின் மூலம் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 356 விக்கெட்டினை கைப்பற்றி, சமிந்த வாசை முந்திச் சென்றார்.

பின்னர் தமது முதலாவது இன்னிங்சுக்காக துடுப்பாடக் களமிறங்கிய இலங்கை அணி இன்றைய நாள் மிகவும் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியதோடு 43 ஓவர்களில் 110 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

முதல் இன்னின்சுக்காக இலங்கை அணி சார்பாக உபுல் தரங்க 5 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 26 ஓட்டங்களையும் திமுத் கருணாரத்ன 3 பவுண்டரிகளுடன் 24 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட போதிலும் ஏனைய வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சென்றனர்.

தென்னாபிரிக்கா அணி சார்பாக பந்து வீச்சில் வெர்னன் பிலேண்டர் மற்றும் ககிஸோ றபடா ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதற்கு முன்னதாக 2001ஆம் ஆண்டு இதே மைதானத்தில் இலங்கை அணி 178 நிமிடங்கள் துடுப்பாடி 95 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார கூடிய ஓட்டங்களாக 32 ஓட்டங்களை பெற்றிருந்தார். குறித்த போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 229 ஓட்டங்களால் தோல்வியுற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

282 ஓட்டங்களால் முன்னிலை பெற்றிருந்த தென்னாபிரிக்க அணி மீண்டும் இலங்கை அணிக்கு துடுப்பாடும் வாய்ப்பை அளிக்கும் நிலை காணப்பட்ட போதிலும், அணித்தலைவர் டு ப்லெசிஸ் இரண்டாம் இன்னிங்சுக்காக தமது அணி துடுப்பாடுவதாக அறிவித்தார்.

அதனை தொடர்ந்து களமிறங்கிய தென்னாபிரிக்க அணி இரண்டாம் நாள் ஆட்ட நிறைவின் போது எவ்வித விக்கெட் இழப்புமின்றி 11 ஓவர்களுக்கு 35 ஓட்டங்களை பெற்ற்ள்ளறது. ஸ்டெபான் குக் மற்றும் டீன் எல்கர் முறையே ஆட்டமிழக்காமல் 15, 19 ஓட்டங்களுடன் களத்தில் இருகின்றனர்.

ஸ்கோர் விபரம்