இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் ஆரம்பித்துள்ள முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழைக்காரணமாக 20.4 ஓவர்கள் மாத்திரம் வீசப்பட்ட நிலையில் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.
டர்பன் கிங்ஸ்மீட் மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவுசெய்தது.
ஆடுகளத்தின் சாதகத்தன்மையை கருத்திற்கொண்டு இரண்டு அணிகளும் 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியிருந்தன. இதில் பந்துவீசிய இலங்கை அணி முதல் இரண்டு ஓவர்களில் சரியான இலக்கில் பந்துகளை வீசுவதற்கு சற்று தடுமாறியது.
எனினும் அடுத்த ஓவர்களில் மிகச்சிறப்பாக பந்துவீச ஆரம்பித்த இலங்கை அணியானது இன்று வீசிய 20.4 ஓவர்களில் 80 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்துள்ளது.
அசித பெர்னாண்டோ எய்டன் மர்க்ரமின் விக்கெட்டினை வீழ்த்தி ஆரம்பம் ஒன்றை கொடுக்க, டொனி டி ஷோர்ஷியின் விக்கெட்டினை விஷ்வ பெர்னாண்டோ கைப்பற்றினார்.
மறுபக்கம் லஹிரு குமார பந்துவீச அழைக்கப்பட்டு முதல் ஓவரில் 17 ஓட்டங்களை விட்டுக்கொடுத்த போதிலும், அடுத்த ஓவர்களை தன்னுடைய வேகத்தால் மிரட்டிய இவர் 4 ஓவர்கள் பந்துவீசி 35 ஓட்டங்களுக்கு ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ் மற்றும் டேவிட் பெடிங்கம் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதற்கிடையில் ஓட்டங்களின்றி தெம்பா பௌவுமா கொடுத்த பிடியெடுப்பொன்றினை திமுத் கருணாரத்ன தவறவிட அவர் முதல் நாளின் நிறைவில் 28 ஓட்டங்களை பெற்றுள்ளார். அதுமாத்திரமின்றி லஹிரு குமாரவின் பந்துவீச்சில் பௌவுமா விக்கெட் காப்பாளரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்த போதும், அது நோ-போலாக மாறியிருந்து அணிக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.
ஒட்டுமொத்தத்தில் தென்னாபிரிக்க மண்ணில் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர். எனினும் மதியபோசன இடைவேளை நெருங்கிய சந்தர்ப்பத்தில் ஆட்டத்தில் மழைக்குறுக்கிட்டது. தொடர்ந்தும் மழைக்குறுக்கிட்டுவர முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.