இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய உப தலைவர்களாக குசல் மெண்டிஸ் மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தசுன் ஷானக கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான உப தலைவராக குசல் மெண்டிஸ் மற்றும் T20I போட்டிகளுக்கான உப தலைவராக வனிந்து ஹஸரங்க நியமிக்கப்பட்டுள்ளமை இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலத்தை நோக்கிய பயணம் என தசுன் ஷானக கூறியுள்ளார்.
>> மீண்டும் ஆப்கானிஸ்தான் அணியின் தலைவராகும் ரஷீட் கான்!
மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20I போட்டிகளுக்கான இலங்கை குழாம் இன்று சனிக்கிழமை (31) புறப்பட்டுச் செல்வதற்கு முன்னர் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் ஷானக இதனை தெரிவித்துள்ளார்.
ஹஸரங்க மற்றும் மெண்டிஸின் பதவிகள் மற்றும் அவர்களுடைய ஆதரவு தொடர்பில் குறிப்பிட்ட இவர், “எப்படி இருந்தாலும் நல்ல ஆதரவு கிடைக்கும். இதுவொரு எதிர்காலத்தை நோக்கிய முடிவு. இருவரும் சிறந்த வீரர்கள். அவர்களால் நாட்டுக்காக நீண்ட நாட்கள் கிரிக்கெட் ஆட முடியும். சரியான முடிவொன்று எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய ஆதரவு எனக்கு கிடைக்கும். அவர்களும் ஏனைய வீரர்களின் ஆதரவுகளை பெறுவார்கள் என நம்புகிறேன்” என்றார்.
அதேநேரம் இந்திய தொடருக்கான ஆயத்தம் மற்றும் அதற்கான சவால்கள் தொடர்பிலும் குறிப்பிட்டார். “கடந்த காலங்களில் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் சிறப்பாக ஆடியுள்ளோம். ஆசியக்கிண்ணத்தில் நாம் அவர்களை வெற்றிக்கொண்டோம். ஆனால், அவர்களும் எமக்கு அதிக சவால்களை கொடுப்பார்கள். எனவே, அணியென்ற ரீதியில் நாம் ஆயத்தமாக உள்ளோம். அவர்களை சிறப்பாக எதிர்கொண்டு தொடரை வெற்றிக்கொள்ள நினைக்கிறோம்” என குறிப்பிட்டார்.
இதேவேளை புதிய வீரர்களுக்கு வாய்ப்புகளை கொடுப்பது தொடர்பில் கூறிய இவர், “நான் ஏற்கனவே கூறியதுபோன்று தேர்வாளர்கள் புதிய வீரர்களுக்கு வாய்ப்பை கொடுக்கின்றனர். நுவனிந்து பெர்னாண்டோ LPL தொடரில் திறமையை வெளிப்படுத்தியிருந்தார். அதற்கு முன்னரும் எம்முடைய T20I குழாத்தில் இருந்தார். தொடர்ச்சியாக பிரகாசிப்பதால், இவ்வாறான வீரர்கள் அணியில் உள்ளனர்” என்றார்.
சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடர் ஜனவரி 3ம் திகதி மும்பையில் ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<