காலியில் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரை ஆரம்பிக்கவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி

1820

இரண்டாவது பருவகாலத்திற்கான சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC) உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் (2021-2023) போட்டிகளை காலியில் வைத்து இலங்கை மேற்கிந்திய தீவுகளுடன் இந்த ஆண்டின் நவம்பர் மாதம் ஆரம்பிக்கவிருப்பதாக ThePapare.com இற்கு அறியக்கிடைக்கின்றது.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து மொயின் அலி ஓய்வு

அந்தவகையில் ICC இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மேற்கிந்திய தீவுகளுடன் இலங்கை அணி விளையாடவுள்ளதோடு, இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி காலி சர்வதேச மைதானத்தில் நவம்பர் மாதம் 21ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரையிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் மாதம் 28ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 02ஆம் திகதி வரையிலும் நடைபெறவிருக்கின்றது.

இதற்கு முன்னர் நடைபெற்ற  ICC இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் (2019-2021) தொடரில் இலங்கை அணி எட்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டதோடு, குறித்த தொடரில் சம்பியன் பட்டம் வென்ற நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்பட்டிருந்தது.

அதேநேரம், இந்த தொடரில் பங்கேற்ற இலங்கை அணிக்கும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் பரிசாக தலா 100,000 அமெரிக்க டொலர்கள் கிடைத்திருந்தன. இதேநேரம், கடந்த உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக இலங்கையும், மேற்கிந்திய தீவுகள் அணியும் ஆடியிருந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சமநிலை அடைந்திருந்தது.

அதேநேரம் இலங்கை – மேற்கிந்திய தீவுகள் இடையிலான டெஸ்ட் தொடர், ஐக்கிய அரபு இராச்சியத்தில் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நிறைவடையவுள்ள 2020ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத்தின் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணி விளையாடவுள்ள முதல் சர்வதேச தொடராகவும் அமைகின்றது.

IPL இல் புதிய மைல்கல்லை எட்டிய கோஹ்லி, ஹர்ஷல்

மேற்கிந்திய தீவுகள் – இலங்கை அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் நிறைவடைந்த பின்னர் டிசம்பர் மாதம் 04ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி வரையில் லங்கா பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது பருவகாலத்திற்கான போட்டிகள் இடம்பெறுகின்றன.

இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வாளர்கள் டெஸ்ட் போட்டிகளுக்கான இலங்கை அணியின் வீரர்களான திமுத் கருணாரத்ன, லஹிரு திரிமான்ன, சுரங்க லக்மால், லசித் எம்புல்தெனிய மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோருக்கு மேற்கிந்திய தீவுகளுக்கான டெஸ்ட் தொடருக்கு பயிற்சி வழங்கும் நோக்கில், அவர்களுக்கு பாகிஸ்தான் A கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தில் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அடுத்த மாதம் இலங்கை வரும் பாகிஸ்தான் A கிரிக்கெட் அணி நான்கு நாட்கள் கொண்ட முதல்தரப் போட்டிகள் இரண்டு மற்றும் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டிகள் ஐந்து ஆகியவற்றில் விளையாடவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிகள் விபரம்

  1. எதிர் மேற்கிந்திய தீவுகள் – 2 டெஸ்ட் போட்டிகள் (இலங்கை) – நவம்பர்/டிசம்பர் 2021
  2. எதிர் இந்தியா – 2 டெஸ்ட் போட்டிகள் (இந்தியா) – பெப்ரவரி/மார்ச் 2022
  3. எதிர் பங்களாதேஷ் – 2 டெஸ்ட் போட்டிகள் (பங்களாதேஷ்) – மே 2022
  4. எதிர் அவுஸ்திரேலியா – 2 டெஸ்ட் போட்டிகள் (இலங்கை) – ஜூன்/ஜூலை 2022
  5. எதிர் பாகிஸ்தான் – 2 டெஸ்ட் போட்டிகள் – ஜூலை/ஒகஸ்ட் 2022
  6. எதிர் நியூசிலாந்து – 2 டெஸ்ட் போட்டிகள் – நவம்பர்/டிசம்பர் 2022

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…