இலங்கை டெஸ்ட் குழாத்தில் மீண்டும் வனிந்து ஹஸரங்க!

Sri Lanka tour of Bangladesh 2024

90
Sri Lanka tour of Bangladesh 2024

பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான டெஸ்ட் தொடரில் இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர் வனிந்து ஹஸரங்க இணைக்கப்பட்டுள்ளார்.

வனிந்து ஹஸரங்க கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் ஓய்விலிருந்து திரும்பி மீண்டும் பங்களாதேஷ் தொடருக்கான டெஸ்ட் குழாத்தில் இணைந்துள்ளார்.

>>ஒரு நாள் தொடரினை கைப்பற்றிய பங்களாதேஷ் அணி

அதேநேரம், வலதுகை சுழல் பந்துவீச்சாளர் நிசான் பீரிஸ் முதன்முறையாக இலங்கை தேசிய அணியில் இணைக்கப்பட்டுள்ளார். இவர் முதற்தர போட்டிகளில் சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்தி வரும் நிலையில் அணியில் இடம்பிடித்துள்ளார். இவர் 37 முதற்தரப் போட்டிகளில் 153 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

மேற்குறித்த இரண்டு வீரர்கள் அணியில் இணைக்கப்பட்டுள்ளதுடன், ஆப்கானிஸ்தான் தொடருக்கான குழாத்தில் இணைக்கப்பட்டிருந்த மிலான் ரத்நாயக்க அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்த மாற்றங்களை தவிர்த்து ஆப்கானிஸ்தான் தொடரில் விளையாடிய ஏனைய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளன. அணித்தலைவராக தனன்ஜய டி சில்வா, உப தலைவராக குசல் மெண்டிஸ் ஆகியோருடன், அஞ்செலோ மெதிவ்ஸ், திமுத் கருணாரத்ன, தினேஷ் சந்திமால், பிரபாத் ஜயசூரிய மற்றும் ரமேஷ் மெண்டிஸ் போன்ற முன்னணி வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இதேவேளை உபாதையிலிருந்து மீண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடிய லஹிரு குமார மீண்டும் டெஸ்ட் குழாத்தில் இடம்பெற்றுள்ளார்.

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகளில் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 22ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை டெஸ்ட் குழாம்

தனன்ஜய டி சில்வா (தலைவர்), குசல் மெண்டிஸ், திமுத் கருணாரத்ன, நிசான் மதுஷ்க, அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால், சதீர சமரவிக்ரம, கமிந்து மெண்டிஸ், லஹிரு உதார, வனிந்து ஹஸரங்க, பிரபாத் ஜயசூரிய, ரமேஷ் மெண்டிஸ், நிசான் பீரிஸ், கசுன் ராஜித, விஸ்வ பெர்னாண்டோ, லஹிரு குமார, சாமிக குணசேகர

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<