இலங்கை இளையோர் மெய்வல்லுனர் அணி தென் கொரியா பயணம்

Asian U20 Athletics Championship 2023

155

20 வயதின்கீழ் ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கவுள்ள 11 பேர் கொண்ட இலங்கை மெய்வல்லுனர் குழாம் நேற்று முன்தினம் (30) தென் கொரியா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது.

20ஆவது ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் இம்மாதம் 4ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை தென் கொரியாவில் நடைபெறவுள்ளது. 45 ஆசிய நாடுகளைச் சேர்ந்த 1500 வீர, வீராங்கனைகள் இம்முறை போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ளனர்.

இதனிடையே, இம்முறை ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 8 வீர, வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். இதன்படி. தென் கொரியா சென்றுள்ள இலங்கை மெய்வல்லுனர் குழாத்தில் 4 வீரர்கள், 4 வீராங்கனைகள் மற்றும் 3 அதிகாரிகள் என 11 பேர் இடம்பெற்றுள்ளனர்.

ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் 1986 முதல் 2018 வரையான காலப்பகுதியில் இலங்கை 30 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 7 தங்கம், 14 வெள்ளி மற்றும் 9 வெண்கலப் பதக்கங்கள் அடங்குகின்றன. இறுதியாக கடந்த 2018இல் ஜப்பானின் கிபு நகரில் நடைபெற்ற ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணி 3 தங்கம், 4 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் உள்ளடங்கலாக 9 பதக்கங்களை சுவீகரித்தது.

ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பங்கேற்கவுள்ள இலங்கை குழாம் விபரம் பின்வருமாறு:

ஆண்கள்

மெரோன் ஜுலியன் விஜேசிங்க – 100 மீட்டர் ஓட்டம் (கொழும்பு ஆனந்த கல்லூரி), ஷெஹான் தில்ரங்க – 800 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் (வலல ரத்நாயக்க கல்லூரி), வினோத் ஆரியவன்ச – 400 மீட்டர் சட்டவேலி ஓட்டம் (புனித அலோசியஸ் கல்லூரி), கே.ஏ. மலித் யசிரு – முப்பாய்ச்சல் (கஹவத்தை மத்திய மகா வித்தியாலயம்)

பெண்கள்

தினாரா பண்டார – 100 மீட்டர் (கொழும்பு கேட்வே கல்லூரி), தருஷி கருணாரத்ன – 400 மீட்டர் மற்றும் 800 மீட்டர் (வலள ரத்நாயக்க கல்லூரி), எம்.எச் ஜயேஷி உத்தரா – 400 மீட்டர் (கம்பஹா திருச்சிலுவை கல்லூரி), ரனின்தி  ஷெஹன்சா கமகே – உயரம் பாய்தல் (பன்னிபிட்டி தர்மராஜா வித்தியாலயம்)

அதிகாரிகள்

சுசந்த பெர்னாண்டோ (முகாமையாளர்), ஜானக வசந்த குமார (பயிற்சியாளர்), இமல்கா ரணவீர (வீராங்கனைகளுக்கான பொறுப்பதிகாரி)

>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<