இந்தப் பருவகாலத்திற்கான பாடசாலைகளுக்கு இடையிலான ரக்பி செவன்ஸ் தொடரின் இறுதிப் போட்டியில், அணித் தலைவர் நவீன் ஹெனக்கன்கனம்கேயின் அபார ஆட்டத்துடன் இசிபதன கல்லூரியை 19-14 என வீழ்த்திய புனித தோமியர் கல்லூரியானது தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக சம்பியனாக முடிசூடியுள்ளது.

கொழும்பு ரேஸ் கோர்ஸ் சர்வதேச மைதானத்தில் இடம்பெற்ற இந்த இறுதிப் போட்டியில் பங்கேற்ற புனித தோமியர் கல்லூரி, முன்னதாக காலிறுதியில் புனித பேதுரு கல்லூரி அணியை 17-12 எனவும், அரையிறுதியில் திரித்துவக் கல்லூரியை 21-14 எனவும் தோற்கடித்திருந்தது. அதேபோன்று, இசிபதன கல்லூரியானது அரையிறுதியில், 19-14 என கிங்ஸ்வூட் கல்லூரியையும், காலிறுதியில் 24-19 என புனித அந்தோனியார் கல்லூரியினையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தது.

பாடசாலைகளுக்கிடையிலான அணிக்கு எழுவர் கொண்ட ரக்பி சுற்றுப்போட்டியின் இறுதி நாள் இன்று

பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயதிற்கு உட்பட்ட அணிக்கு எழுவர்..

இறுதிப் போட்டியின் முதல் நிமிடத்தினை இசிபதன கல்லூரி அணி சிறப்பான ஆரம்பத்துடன் வெளிக்காட்டியது. எனினும், துரித கதியில் செயற்பட்டிருந்த டயன் டயஸ் போட்டியின் ஆதிக்கத்தினை புனித தோமியர் கல்லூரியின் பக்கம் மாற்றியிருந்ததோடு, போட்டியின் முதல் ட்ரையையும் வைத்திருந்தார். இந்த ட்ரைக்கான கன்வேர்சன் உதையினால் புள்ளிகள் பெறப்பட தோமியர் கல்லூரியானது, 7-0 என முன்னிலை அடைந்தது.

தொடர்ந்தும், தனது வேகமான செயற்பாட்டின் துணையுடன் டயஸ் இரண்டாவது ட்ரையினையும் வைத்தார். இந்த ட்ரை மயோன் ஜயவர்தன மூலம் புள்ளிகளாக மாற்றப்பட தோமியர் கல்லூரியானது 14 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டது.

இசிபதன கல்லூரிக்கு இந்தப் போட்டியில் ட்ரைகள் பெறுவது கடினமாக காணப்பட்டிருந்தது. எனினும், ஒருவாறாக நதீஷ சமிந்தவின் உதவியுடன் ட்ரை ஒன்றினைப் பெற்றுக்கொண்ட அவ்வணி அந்த ட்ரைக்கான கன்வேர்சனையும் சிறந்த முறையில் நிறைவு செய்து புள்ளிகளாக மாற்ற, முதல் பாதி நிறைவிற்கு வந்தது.

முதல் பாதி: புனித தோமியர் கல்லூரி 14 – 07 இசிபதன கல்லூரி

இசிபதன கல்லூரி அணியானது, இரண்டாம் பாதி ஆட்டத்தில் மீண்டு வர முயற்சித்திருந்தும் தோமியர் கல்லூரி அணி விவேகமாக செயற்பட்டிருந்த காரணத்தினால் அது இயலாமல் போயிருந்தது. இசிபதனவின் அனைத்து முயற்சிகளும் இந்த பாதியில் தோமியர் கல்லூரி வீரர்களினால் இலகுவாக முறியபடிக்கப்பட்டிருந்தன.  

இவ்வாறானதொரு நிலையில் அபார ஆட்டத்தினை வெளிக்காட்டியிருந்த நவீன் ஹெனக்கன்கனம்கே, தோமியர் அணிக்கு மேலதிக புள்ளிகளை சேர்த்துக் கொடுத்தார். இதன் மூலம் அவரது அணி, 19-07 என முன்னிலை பெற்றுக்கொண்டது.

எனினும், போட்டியின் இறுதி வரை போராடியிருந்த இசிபதன கல்லூரி அணி, ஆறுதல் ட்ரை  ஒன்றின் மூலம் புள்ளிகளைப் பெற்றிருந்த்து. எனினும், அது அவர்களை வெற்றியளராக்க போதுமாக இருக்கவில்லை. இதனால், புனித தோமியர் கல்லூரி அணியினர் இவ்வருடத்திற்கான ரக்பி செவன்ஸ் சம்பியன்களாக மாறியிருந்தனர்.

முழு நேரம்: புனித தோமியர் கல்லூரி 19 – 14 இசிபதன கல்லூரி

ThePapare.com இன் ஆட்ட நாயகன் – நவீன் ஹெனக்கன்கனம்கே (புனித தோமியர் கல்லூரி)

பிளேட் (Plate) சம்பியன்ஷிப்

புனித பேதுரு கல்லூரி 24 – 12 சயன்ஸ் கல்லூரி

தியத் பெர்னாந்துவின் சிறப்பான ஆட்ட உதவியுடன் இவ்வருடத்திற்கான பிளேட் இறுதிப் போட்டியில், சயன்ஸ் கல்லூரியினை வீழ்த்தியிருந்த புனித பேதுரு கல்லூரி வீரர்கள் இவ்வருடத்திற்கான பிளேட் வெற்றியாளர்களாக மாறியிருந்தனர்.

போல் (Bowl) சம்பியன்ஷிப்

புனித ஜோசப் கல்லூரி 26 –  வெஸ்லி கல்லூரி

இந்த வருடத்திற்கான ஜனாதிபதிக் கிண்ண வெற்றியாளர்களான புனித ஜோசப் கல்லூரி அணியினர் குழு நிலை ஆட்டத்தில்,  புனித தோமியர் கல்லூரியிடம் தோல்வியடைந்த காரணத்தினால், போல் சம்பியன்ஷிப் போட்டிகளிற்கே தெரிவாகினர். அதன் இறுதி ஆட்டத்தில் வெஸ்லி கல்லூரி அணியானது முதற்பாதியில் எதிரணிக்கு அச்சுறுத்தல் தந்திருப்பினும் இறுதியில் புனித ஜோசப் கல்லூரியிடம் வீழ்ந்தது.

நடப்புச் சம்பியன் இசிபதனவை வீழ்த்தி வரலாறு படைத்த புனித ஜோசப் கல்லூரி

கொழும்பு ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இரவுப் போட்டியாக நடைபெற்ற…

சீல்ட்  சம்பியன்ஷிப்

பிலியந்தலை மத்திய கல்லூரி 19 – 12 மொறட்டுவ வித்தியாலயம்

ஐந்து வீரர்களுடன் மாத்திரமே தமது முதற்பாதியில் விளையாடியிருந்த பிலியந்தலை மத்திய கல்லூரியானது மொறட்டுவ வித்தியாலய அணியை வீழ்த்தி சீல்ட் சம்பியனாகியிருந்தது.

இத்தொடரின் நாயகனாக தெரிவு செய்யப்பட்ட நவீன் ஹெனக்கன்கனம்கே ThePapare.com இடம் கருத்த தெரிவித்தபோது,

“நாங்கள் ஏனையவர்கள் போன்றே போட்டிகளில், எந்த அழுத்தமும் இன்றி விளையாடியிருந்தோம். இதனால், எமக்கு ஒரு நிலையாக செயற்பட முடிந்தது. இந்த வெற்றியுடன் நான் மகிழ்ச்சியடைகின்றேன். புதிய வீரர்கள் அணியில் சேர்ந்ததாலும், அணியில் இருந்தவர்கள் விலகிய காரணத்தினாலும் இத்தொடர் எமக்கு சற்று கடினமாக காணப்பட்டிருந்தது. எனினும், தொடர்ச்சியாக இரண்டு வருடங்கள் வெற்றியாளர் நாமத்தினை சூட்டிக்கொண்டமை மிகவும் சந்தோசமளிக்கின்றது. “ என கூறியிருந்தார்.