ஆசிய இளையோர் பரா போட்டிகளில் 8 இலங்கையர் பங்கேற்பு

Asian Youth Para Games - 2021

140

பஹ்ரைனின் மனமா நகரில் அடுத்த மாதம் 2ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 4ஆவது ஆசிய இளையோர் பாரா விளையாட்டு விழாவில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 8 வீரர்கள் பங்குபற்றவுள்ளனர்.

32 ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 800 வீர வீராங்கனைகள் பங்குபற்றுகின்ற இம்முறை விளையாட்டு விழாவில் மெய்வல்லுனர் போட்டிகள் உள்ளிட்ட 9 வகையான போட்டி நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இதனிடையே, இம்முறை ஆசிய இளையோர் பாரா விளையாட்டு விழாவில் இலங்கை அணியின் தலைவராக நவீட் ரஹீம் நியமிக்கப்பட்டுள்ளார். 2017இல் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் பங்குகொண்ட பாரா நீச்சல் வீரரான நவீட் ரஹீம், ஆரம்ப வைபவத்தின்போது இலங்கை தேசியக் கொடியை ஏந்திச் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கை குழாமில் இடம்பெற்றுள்ள ஜேசன் ஜயவர்தன மீது பலரும் தங்களது பார்வையை திருப்பியுள்ளனர். அதற்கு காரணம் அவரின் குறைவான உயரமாகும். 18 வயதான ஜேசன், 130 சென்ரி மீட்டருக்கும் குறைவான உயரம் உடையவர்களுக்கான பிரிவில் பங்கேற்கவுள்ளார்.

இவர் ஆண்களுக்கான T41 100 மீட்டர் மற்றும் F41 ஆண்களுக்கான குண்டெறிதல், தட்டெறிதல் ஆகிய மூன்று வகையான போட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளமை விசேட அம்சமாகும்.

இம்முறை ஆசிய இளையோர் பாரா விளையாட்டு விழாவில் இலங்கை அணியின் முகாமையாளராக பிரியன்த பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளதுடன், லசந்தா ஸ்ரீயாகாந்தி வீராங்கனைகளுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதில் இலங்கையின் முன்னாள் நட்சத்திர நீச்சல் வீரர் ஜுலியன் போலிங் நீச்சல் அணியின் பயிற்சியாளராகவும், நலிந்த செனரத் மெய்வல்லுனர் அணியின் பயிற்சியாளராகவும் செயல்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிய இளையோர் பரா விளையாட்டு விழாவில் இலங்கை இதுவரை 3 தங்கப் பதக்கங்களையும், 3 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றுள்ளன.

இதில் 2009இல் ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற முதலாவது ஆசிய இளையோர் பரா விளையாட்டு விழாவில் ஒரேயொரு வெள்ளிப் பதக்கத்தை மாத்திரம் வென்றிருந்தது.

இதனையடுத்து 2013இல் மலேஷியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற இரண்டாவது அத்தியாயத்தில் இலங்கை 3 தங்கப் பதக்கங்களையும், 2 வெள்ளிப் பதக்கங்களையும் கைப்பற்றியிருந்து.

எனினும், ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் நகரில் கடைசியாக 2017இல் நடைபெற்ற 3ஆவது அத்தியாயத்தில் இலங்கைக்கு எந்தவொரு பதக்கத்தையும் கைப்பற்ற முடியாமல் போனது.

இதனிடையே, 4ஆவது ஆசிய பாரா விளையாட்டு விழாவில் பங்குபற்றுவதற்காக இலங்கைக்குழாம் நேற்றுமுன்தினம் (27) இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றது.

20 வயதுக்குட்பட்ட வீர வீராங்கனைகள் பங்கேற்கும் இந்த விளையாட்டு விழாவில் பங்கேற்கும் இலங்கை குழாமுக்கான பூரண அனுசரணையை முதல் தடவையாக விளையாட்டுத்துறை அமைச்சு வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆசிய இளையோர் பாரா விளையாட்டு விழாவில் பங்கேற்கும் இலங்கை குழாம் விபரம்

  1. நவீட் ரஹீம் (S10 ஆண்களுக்கான 50 மீட்டர் நீச்சல், 100 மீட்டர் நீச்சல்)
  2. ஜனனி தனஞ்சனா (T46 பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஒட்டம், நீளம் பாய்தல்)
  3. மொஹமட் சப்ரான் (T46 ஆண்களுக்கான நீளம் பாய்தல்)
  4. இசுரு ஹசங்க (T47 ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், நீளம் பாய்தல்)
  5. ஜேசன் ஜயவர்தன (T41 ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டம், F41 ஆண்களுக்கான குண்டெறிதல், தட்டெறிதல்)
  6. ரவிந்து சிரஞ்சய (பார்வை குறைபாடுடைவர்கள் பங்கேற்கும் T11 ஆண்களுக்கான 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர்)
  7. பன்சிலு பசன் – ரவிந்துவின் உதவியாளர் (T11 ஆண்களுக்கான 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர்)
  8. ஷலீனா பஸ்நாயக்க (S10 பெண்களுக்கான 50 மீட்டர் நீச்சல், 100 மீட்டர் நீச்சல், 400 மீட்டர் நீச்சல்)

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<