உள்ளூர் மெய்வல்லுனர் போட்டித் தொடர்கள் ஆகஸ்ட்டில் ஆரம்பம்

160
Sri lanka National Athletics

கட்டாரில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் மற்றும் டிசம்பர் மாதம் நேபாளத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழா ஆகியவற்றை இலக்காகக் கொண்டு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் இம்மாதம் கொழும்பில் நடைபெறவுள்ளது. 

அதன்படி, 97ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் இம்மாதம் 16, 17 மற்றும் 18ஆம் திகதிகளில் கொழும்பு சுகததாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது

தெற்காசிய விளையாட்டு விழாவில் மெய்வல்லுனர்களுக்கு கட்டுப்பாடு

நேபாளத்தில் இவ்வருட இறுதியில் இடம்பெறவுள்ள ………

இம்முறை போட்டித் தொடரில் அனைத்து தேசிய மட்ட வீரர்களும் பங்குபற்றவுள்ளதுடன், அதில் திறமைகளை வெளிப்படுத்தி முதலிடத்தைப் பெற்றுக் கொள்கின்ற வீரர்களுக்கு மாத்திரம் இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் அறிவித்துள்ளது

இதேவேளை, கட்டாரில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி முதல் ஒக்டோபர் 6ஆம் திகதி வரை நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடருக்காக இதுவரை எந்தவொரு மெய்வல்லுனர் வீரரும் தகுதிபெறவில்லை

எனினும், அமெரிக்காவில் வசித்து வருகின்ற இலங்கை அரை மரதன் ஓட்ட தேசிய சம்பியனான ஹிருனி விஜேரத்ன, இம்முறை உலக சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்குபற்றுகின்ற வாய்ப்பை ஏற்கனவே பெற்றுக் கொண்டார்

இதன்படி, உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரிற்காக அறிவிக்கப்பட்டுள்ள அடைவுமட்டத்தினை இலங்கை மெய்வல்லுனர்களுக்கு இதன்மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என நம்பப்படுகின்றது.  

எனவே இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் மிகவும் போட்டித் தன்மை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுஇவ்வாறிருக்க, கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தீவிரவாத தாக்குதல் காரணமாக முக்கிய போட்டித் தொடர்கள் பிற்போடப்பட்டன. எனினும், தற்போது நாட்டில் சுமுகமான நிலை ஏற்பட்டுள்ளதால் பிற்போடப்பட்ட போட்டித் தொடர்களை நடத்துவதற்கு ஒவ்வொரு சங்கங்களும், விளையாட்டு மற்றும் கல்வி அமைச்சும் மும்முரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன

இதன்படி, இம்மாதத்திலிருந்து 3 பாடசாலை மட்டப் போட்டித் தொடர்களும், 5 தேசிய மட்ட போட்டித் தொடர்களும் நடைபெறவுள்ளன

இதில் முதலாவதாக வருடாந்தம் இடம்பெறும் சேர். ஜோன் டார்பட் கனிஷ் மெய்வல்லுனர் போட்டிகள் இன்று (02) முதல் நடைபெறவுள்ளன. 3 கட்டங்களைக் கொண்டதாக நடைபெறவுள்ள இப்போட்டித் தொடரின் முதல் கட்டம் 02ஆம், 03ஆம் திகதிகளில் கண்டி, திகனவிலும், 2ஆம் கட்டப் போட்டிகள் 08ஆம், 09ஆம் திகதிகளில் வென்னப்புவ எல்பட் எப் பீரிஸ் மைதானத்திலும், இறுதிக் கட்டம் எதிர்வரும் 11 முதல் 13 வரை மாத்தறை, கொடவில மைதானத்திலும் நடைபெறவுள்ளன

இந்த நிலையில், வருடாந்தம் நடைபெறுகின்ற 36ஆவது வர்த்தக சேவை மெய்வல்லுனர் போட்டித் தொடர் இம்மாதம் 10ஆம், 11ஆம் திகதிகளில் கொழும்பு சுகததாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது

இதேநேரம், இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் 97ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் இம்மாதம் 16ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை கொழும்பு சுகததாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தேசிய மெய்வல்லுனர் அணியின் பயிற்சியாளராக சுனில் குணவர்தன

அண்மைக்காலமாக வெற்றிடமாக இருந்து ………..

இதனையடுத்து இலங்கை இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 5ஆவது அஞ்சலோட்டப் போட்டித் தொடரையும் எதிர்வரும் 21ஆம் திகதி இதே சுகததாஸ மைதானத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

இதனிடையே, இலங்கை இராணுவத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படுகின்ற 56ஆவது இராணுவ மெய்வல்லுனர் சம்பயின்ஷிப் போட்டித் தொடர் இம்மாதம் 26ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை கொழும்பு சுகததாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது

இதேவேளை, இவ்வருடம் இலங்கை வீரர்கள் பங்கேற்கவுள்ள இறுதி சர்வதேச திறந்த மெய்வல்லுனர் போட்டித் தொடரான தென் கொரிய திறந்த மெய்வல்லுனர் போட்டித் தொடர் இம்மாதம் 25ஆம் 26ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுஇவ்வாறிருக்க, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த தேசிய கனிஷ் மெய்வல்லுனர் போட்டிகளை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் 4ஆம் திகதி வரை கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடத்துவதற்கு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<