இலங்கை மற்றும் சைனீஸ் தாய்பேய் கால்பந்து அணிகள் இடையில் நடைபெற்று முடிந்திருக்கும் விறுவிறுப்பான இன்றைய (10) போட்டியில் இலங்கை சைனீஸ் கால்பந்து அணியினை 3-1 என்கிற கோல்கள் கணக்கில் வீழ்த்தியுள்ளது.
>>17 வயதின் கீழான கால்பந்து வீரர்களுக்கு தேசிய கால்பந்து அணியில் இணைய வாய்ப்பு
ஆசிய கால்பந்து சம்மேளனக் (AFC) கிண்ண தகுதிகாண் தொடரில் குழு D இல் காணப்படும் இலங்கை சைனீஸ் தாய்பேய் அணியினை எதிர் கொண்ட போட்டி முன்னதாக கொழும்பு குதிரைப்பந்தயத் திடல் மைதானத்தில் ஆரம்பமாகியது.
போட்டியின் முதல் நிமிடங்களில் இலங்கை கால்பந்து வீரர்கள் கோல் பெறுவதற்கான எதிர்பார்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் பந்தினை கையாண்ட போதிலும், அவர்களுக்கு, தம்மை விட கால்பந்து அணிகள் தரவரிசையில் முன்னிலையில் காணப்படும் பலமிக்க சைனீஸ் தாய்பேய் வீரர்களின் தடுப்பினை தாண்டுவது மிகவும் சிரமமாக அமைந்திருந்தது.
பின்னர் இரு அணிகளும் கோல்கள் எதுவும் பெறாத நிலையில் முதல் பாதி ஆட்டம் நிறைவுக்கு வந்தது. போட்டியின் இரண்டாம் பாதி ஆரம்பித்து 49ஆவது நிமிடத்தில் போட்டியின் முதல் கோலினை ஆதவன் ராஜமோகன் டில்லோன் டி சில்வா பரிமாறிய பந்தின் உதவியோடு பெற்றுக் கொடுத்தார்.
>>சைனீஸ் தாய்பேயிற்கு எதிரான இலங்கை கால்பந்து குழாம் அறிவிப்பு
தொடர்ந்து சிறிது நேரத்தில் இரண்டாவது கோல் இலங்கை கால்பந்து அணிக்காக டில்லோன் டி சில்வா மூலம், சைனீஸ் தாய்பேய் அணியின் பின்களத்தினை தகர்த்து பெறப்பட்டது.
மீண்டும் சரிவு நிலையில் காணப்பட்ட எதிரணியின் பின்களத்தினை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட வசீம் ராசிக் மூன்றாவது கோலினை இலங்கை கால்பந்து அணிக்காக போட்டியின் 58ஆவது நிமிடத்தில் பெற்றார்.
இதனையடுத்து சிறந்த முன்னிலையுடன் போட்டியின் பிந்திய நிமிடங்களை கடந்த இலங்கை கால்பந்து அணிக்கு எதிராக முதல் கோல் ஹூவாங்க் வேய்ச் சேய் ஊடாக பெறப்பட்டது. எனினும் அவரின் இந்த கோல் போட்டியில் முழு ஆதிக்கத்தினை வெளிப்படுத்திய இலங்கை கால்பந்து அணியினை வீழ்த்த போதுமாக இருக்கவில்லை.
முழு நேரம்: இலங்கை 3 – 1 சைனீஸ் தாய்பேய்
கோல் பெற்றவர்கள்
இலங்கை
ஆதவன் ராஜமோகன் – 49’
டில்லோன் டி சில்வா – 53’
வசீம் ராசிக் – 58’
சைனீஸ் தாய்பேய்
ஹூவாங்க் வேய்ச் சேய் – 70’
மஞ்சல் அட்டைகள்
ஜேக் ஹிங்கேர்ட் (55’) – இலங்கை