வெற்றியை நோக்கி பயணிக்கும் இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி

903

தென்னாபிரிக்க வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிக்கும் இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிக்கும் இடையிலான நான்கு நாட்கள் கொண்ட முதலாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவடைந்திருக்கின்றது.

மூன்றாம் நாளில் இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி விருந்தினர்களான தென்னாபிரிக்க வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியினை இரண்டாம் இன்னிங்ஸில் சுழல் வீரர்களின் பங்களிப்புடன் 109 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தியிருந்ததுடன் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 310 ஓட்டங்களை பெற இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடி 157 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது.

இரண்டாம் நாள் ஆதிக்கம் தென்னாபிரிக்க வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி வசம்

தென்னாபிரிக்க வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிக்கும், இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிக்கும் இடையிலான…

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி, இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியுடன் இரண்டு உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகள் ஆகியவை கொண்ட தொடர்களில் ஆடுகின்றது.

தென்னாபிரிக்க வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப் பயணத்தின் முதற்கட்டமாக இரண்டு போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடர் நடைபெறுகின்றது. உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் இந்த முதலாவது போட்டி கடந்த வியாழக்கிழமை (26) கட்டுநாயக்க மேரியன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது.

போட்டியின் இரண்டு நாட்களிலும் ஆதிக்கம் செலுத்தியிருந்த தென்னாபிரிக்க வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியினர், தமது முதல் இன்னிங்ஸில் 394 ஓட்டங்களினை குவித்திருந்ததோடு இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியினரை 194 ஓட்டங்களுக்குள் முதல் இன்னிங்ஸில் சுருட்டியிருந்தனர்.

பின்னர், இரண்டாம் நாள் ஆட்ட நிறைவில் தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை மீண்டும் ஆரம்பித்த தென்னாபிரிக்க வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி ஆரோக்கியமான முன்னிலை (210) ஒன்றுடன் 10 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் அவ்வணியின் தலைவர் டொனி டி சொர்ஸி 4 ஓட்டங்களுடனும், ககிஸோ றபுலானா 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இன்று போட்டியின் மூன்றாம் நாளில் தமது முன்னிலையை அதிகரித்து சவாலான வெற்றி இலக்கொன்றை கொடுக்கும் கனவில் இருந்த தென்னாபிரிக்க வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியின் கனவை இலங்கை சார்பிலான அணியின் சுழல் வீரர்களான மலிந்த புஷ்பகுமார மற்றும் கமிந்து மெண்டிஸ் கலைத்தனர்.

தமது சிரேஷ்ட அணி இலங்கை சிரேஷ்ட கிரிக்கெட் அணியிடம் அண்மைய டெஸ்ட் தொடரில் சுழலில் தடுமாறியது போன்று தடுமாற ஆரம்பித்த தென்னாபிரிக்க வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி 45.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 109 ஓட்டங்களை மாத்திரமே இரண்டாம் இன்னிங்சுக்காக பெற்றுக் கொண்டது. அவ்வணியில் செபாங் டித்தோல மாத்திரம் அதிகபட்சமாக 34 ஓட்டங்களை சேர்க்க ஏனைய துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரேனும் கூட இருபது ஓட்டங்களை எட்டாமல் போயிருந்தனர்.

இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி சார்பாக பந்துவீச்சில், இப்போட்டியின் முதல் இன்னிங்சிலும் 6 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்த இடதுகை சுழல் வீரரான மலிந்த புஷ்பகுமார இந்த இன்னிங்சிலும் மீண்டும் ஒரு தடவை 6 விக்கெட்டுக்களை வெறும் 45 ஓட்டங்களுக்கு சாய்த்திருந்தார். இதேநேரம், இரண்டு கைகளினாலும் பந்துவீசும் திறமை கொண்ட கமிந்து மெண்டிஸ் 46 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 310 ஓட்டங்களை அடைய இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி, சற்று தடுமாற்றத்தை காட்டிய போதிலும் அணித்தலைவர் கெளஷால் சில்வாவின் அரைச்சதத்தோடு நல்ல நிலையை அடைந்து மூன்றாம் நாள் நிறைவில், 157 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது.

டெஸ்ட் தொடரில் சாதித்த இலங்கை ஒரு நாள் தொடரிலும் சாதிக்குமா?

விருந்தினர்களாக இலங்கைக்கு வந்த தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் தொடரில் வைட்வொஷினை…

 

இலங்கை வளர்ந்து அணியின் துடுப்பாட்டத்தில் அரைச்சதம் தாண்டிய கெளஷால் சில்வா 86 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் இருப்பதுடன், சம்மு அஷான் 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது இருந்து நம்பிக்கை தருகின்றார்.

இதன்படி, போட்டியின் நாளைய (29) இறுதி  நாளில் வெற்றி பெறுவதற்கு இலங்கை வளர்ந்துவரும் அணிக்கு ஏழு விக்கெட்டுக்கள் மீதமாகவிருக்க இன்னும் 153 ஓட்டங்களே தேவையாக உள்ளது.

போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.

ஸ்கோர் விபரம்

 

  >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<