ஆட்ட நிர்ணய சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட முன்னாள் இலங்கை உள்ளூர் கிரிக்கெட் வீரர் சாலிய சமனுக்கு, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க ஐந்து ஆண்டுகள் தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு அபுதாபியில் நடைபெற்ற T10 கிரிக்கெட் லீக் தொடரில் போட்டிகளின் முடிவை மாற்றியமைக்கும் சூதாட்ட முயற்சியில் ஈடுபட்டதாக சாலிய சமன் உள்ளிட்ட எட்டு பேர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக ஐசிசியின் ஊழல் தடுப்பு தீர்ப்பாயம் விசாரணை நடத்தியதுடன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் (ECB) ஊழல் தடுப்பு விதிகளை சாலிய சமன் மீறியது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
அதன்படி, முழு விசாரணை, எழுத்துப்பூர்வ மற்றும் வாய்மொழி வாதங்களுக்குப் பிறகு, தீர்ப்பாயம் சாலிய சமன் பின்வரும் 3 குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என கண்டறிந்துள்ளது:
1 – அபுதாபி T10 லீக் 2021 தொடரின் போட்டிகளின் முடிவை மாற்றியமைக்கும் சூதாட்ட முயற்சிக்கு உடந்தையாக இருந்தது.
2 – சூதாட்டத்தில் ஈடுபடுவதற்காக மற்றொரு வீரருக்குப் பரிசு அல்லது வெகுமதி வழங்கியது.
3 – ஊழல் தடுப்பு விதிகளை மீறுமாறு பிற வீரர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தூண்டியது அல்லது ஊக்குவித்தது.
எனவே, மேற்குறிப்பிட்ட மூன்று குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சாலிய சமன் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க ஐந்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையானது, அவர் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்ட செப்டம்பர் 13, 2023 முதல் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மே.தீவுகள் செல்லும் இலங்கை U19 கிரிக்கெட் அணி
- குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ் அதிரடியில் கீரின்ஸ் சம்பியன்
- ஐசிசி தரவரிசையில் இலங்கைக்கு முன்னேற்றம்!
2021 அபுதாபி T10 லீக் தொடரில் புனே டெவில்ஸ் அணியுடன் தொடர்புடைய எட்டு பேர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவர்களில் ஒருவரான சாலிய சமனுக்கு தற்போது இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதில் பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரர் நசீர் ஹொசைனுக்கும் இதேபோன்ற குற்றச்சாட்டுகளுக்காக இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
101 முதல் தரப் போட்டிகள், 77 லிஸ்ட் A போட்டிகள் மற்றும் 47 T20I போட்டிகளில் விளையாடியுள்ள சகலதுறை ஆட்டக்காரரான 39 வயதான சாலிய சமன், இறுதியாக 2021 மார்ச் மாதம் இலங்கை கிரிக்கெட் சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளூர் T20I தொடரில் ஒரு போட்டியில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<