இலங்கை அணிக்கு பல வெளிநாட்டு பயிற்சியாளர்களை நியமிக்க திட்டம்

75

இலங்கை கிரிக்கெட அணியில் தற்போது இருந்து வரும் பயிற்சியாளர்களுக்கான வெற்றிடங்களை அடுத்த மாதம் நிரப்புவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை (SLC) திட்டமிட்டுள்ளது. 

இலங்கை அணி மூன்று போட்டிகளைக் கொண்ட டி-20 தொடருக்காக தற்போது அவுஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில், வரும் டிசம்பரில் நடைபெறவிருக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னர் இலங்கை அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது

இலங்கை கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து ஹதுருசிங்க நீக்கம்

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை ……..

கடந்த ஓகஸ்டில் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்னர் சந்திக்க ஹத்துருசிங்க நீக்கப்பட்டது தொடக்கம், முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ருமேஷ் ரத்னாயக்க இடைக்கால தலைமை பயிற்சியாளராக இலங்கை அணியை வழிநடத்தி வருகிறார்

ஹத்துருசிங்கவின் ஒப்பந்தம் இலங்கை கிரிக்கெட் சபையால் ஏற்கனவே நீக்கப்பட்டிருப்பதோடு அதற்கு எதிராக அவர் சுவிட்சர்லாந்தில் உள்ள விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.   

உலகக் கிண்ணத்திற்கு பின்னர் துடுப்பாட்ட பயிற்சியாளர் ஜோன் லுவிஸ் மற்றும் களத்தடுப்பு பயிற்சியாளர் ஸ்டீவ் ரிக்ஸன் உட்பட பல வெளிநாட்டு பயிற்சியாளரின் ஒப்பந்தங்களை இலங்கை கிரிக்கெட் சபை புதுப்பிக்கவில்லை. இந்நிலையில் கடந்த ஒருசில மாதங்களாக 49 வயதான முன்னாள் இலங்கைAஅணி வீரரான ருவின் பீரின் துடுப்பாட்ட பயிற்சியாளராக செயற்பட்டு வருவதோடு மனோஜ் அபேவிக்ரம தேசிய அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக தொடர்கிறார்.     

தேசிய அணியின் பயிற்சியாளர்கள் உள்ளடக்கத்தில் முக்கியமாக மூன்று ஆண்டுகளுக்கு பின் அனுபவம் வாய்ந்த ஜரொம் ஜயரத்ன இணைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். ஒரு ஆலோசனை பயிற்சியாளராக கடந்த இரண்டு மாதங்களில் வீரர்களிடையே இவர் அமைதி, நம்பிக்கை மற்றும் சுய நம்பிக்கையை ஏற்படுத்துவதில் கணிசமான பங்காற்றியுள்ளார்.    

இலங்கை கிரிக்கெட் சபையில் தலைமை செயற்பாட்டு அதிகாரியின் தரத்தில் ஒரு நிர்வாகியாக செயற்பட்ட ஜயரத்ன 2000களில் ஆரம்பம் தொடக்கம் பயிற்சியாளர் குழாத்தில் பல்வேறு நிலைகளை வகித்துள்ளார்

SAG தொடருக்கான இலங்கையின் கிரிக்கெட் அணிகள் அறிவிப்பு

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் (SAG) …..

ஒரு நிர்வாகியை விடவும் ஒரு பயிற்சியாளராக ஜயரத்ன பொருத்தமானவர் என்று இலங்கை கிரிக்கெட் சபை நம்பும் நிலையில் கெத்தாராமவில் இலங்கை கிரிக்கெட் சபை பயிற்சியாளர் பிரிவில் உயர் செயல்திறன் முகாமையாளராக அவர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் இந்த பதவியை அசங்க குருசிங்க வகித்த நிலையில் இலங்கை கிரிக்கெட் சபையில் இருந்து அவருக்கு புதிய ஒப்பந்தம் ஒன்று கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.    

வெற்றிடம் ஏற்பட்டிருக்கும் நிலைகளை நிரப்பும் செயற்பாட்டில் இன்னும் நாம் ஈடுபட்டுள்ளோம். எவ்வாறாயினும் எமது தேசிய அணிக்கு சிறந்ததை கொண்டு வருவதில் நாம் தெளிவாக இருக்கிறோம். தேசிய அணி, அதேபோன்று எமதுAஅணி, வளர்ந்துவரும் அணி மற்றும் தேசிய கிரிக்கெட் கட்டமைப்புடன் தொடர்புபட்டவர்களுக்கு உதவ வேகப் பந்துவீச்சு, சுழற் பந்துவீச்சு மற்றும் களத்தப்புக்காக ஆலோசனை பயிற்சியாளர்களை கொண்டுவர நாம் எதிர்பார்த்துள்ளோம் என்று இலங்கை கிரிக்கெட் சபையின் மூத்த அதிகாரி ஒருவர் ThePapare.com இற்கு தெரிவித்தார்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்ட பயிற்சியாளரும் வீரருமான மார்க் ராம் பிரகாஷை இலங்கையின் அடுத்த தலைமை பயிற்சியாளராக நியமிப்பது குறித்து இலங்கை கிரிக்கெட் சபை இறுதிக் கட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதாக தெரியவருகிறது.

தலைமை பயிற்சியாளர் வேட்டையில் அந்த பொறுப்பை ஏற்க மைக் ஹேசன், டொம் மூடி, ரசல் டொமிங்கோ, போல் பெப்ராஸ் மற்றும் டீன் ஜோன்ஸ் போன்றோர் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் இலங்கை கிரிக்கெட் சபை கடந்த ஒருசில ஆண்டுகளில் பயிற்சியாளர்களை நியமித்து பின் நீக்கும் வழக்கத்தை கொண்டிருப்பது மோசமான கருத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர்களுடன் சாதகமான உடன்படிக்கை ஒன்றுக்கு வர ஷம்மி சில்வா தலைமையிலான கிரிக்கெட் நிறைவேற்றுக் குழுவினால் முடியாமல் போயுள்ளது.  

அண்மை வரை இங்கிலாந்து கிரிக்கெட் சபையுடன் ஒப்பந்தம் செய்திருந்த 50 வயதான ராம்பிரகாஷ் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் துடுப்பாட்ட பயிற்சியாளர் பொறுப்பு வகித்து  மார்ச் மாதம் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் இங்கிலாந்து சார்பில் 1991 தொடக்கம் 2002 வரை 52 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 18 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார்.           

இலங்கை கிரிக்கெட் சபை ராம் பிரகாஷ் உடனான ஒப்பந்தத்தை உறுதி செய்தால் ருமேஷ் ரத்னாயக்க பந்துவீச்சு பயிற்சியாளர் பெறுப்பை மீண்டும் ஏற்க வாய்ப்பு உள்ளது

இதற்கு மாறாக, முன்னாள் அவுஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் பிரெட் லீ இலங்கை அணியின் வேகப்பந்து பயிற்சியாளராக நியமிக்கப்படவிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபையின் நம்பகமான வட்டாரங்கள் மூலம் செய்தி வெளியாகியுள்ளது. எனினும், அவரது ஏனைய பணிகளுக்கு இடையே ஒரு ஒப்பந்த அடிப்படையில் வேகப்பந்து ஆலோசகராக மாத்திரம் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

42 வயதுடைய பிரெட் லீ உடன் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் ஒப்பந்தம் ஒன்றுக்கு வந்தால் அவர் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வசீம் அக்ரமுடன் சேர்ந்து இலங்கையில் வேகப்பந்து வீச்சின் வளர்ச்சிக்காக பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பார். கிரிக்கெட் வரலாற்றில் தோன்றிய மிகச்சிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான வசீம் அக்ரம் இதற்கு முன்னர் 2016 ஆம் ஆண்டு இலங்கை வேகப்பந்து ஆலோசகராக செயற்பட்டுள்ளார்.   

மறுபுறம், கிரிக்கெட் வரலாற்றில் தோன்றிய மிகச் சிறந்த களத்தடுப்பாளர்களில் ஒருவரான ஜொன்டி ரோட்ஸ் அண்மையில் இந்திய களத்தடுப்பு பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த நிலையில் கடந்த ஒருசில மாதங்களாக இலங்கை கிரிக்கெட் சபையுடன் தெடர்பில் உள்ளார். இலங்கையில் சில பயிற்சி நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுவதோடு இலங்கை கிரிக்கெட்டின் ஒட்டுமொத்த அமைப்பின் களத்தடுப்பு தரத்தை மேம்படுத்துவதற்கு ஆலோசனை பயிற்சியாளராகவும் அவர் பணியாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அடுத்த 24 மாதங்களில் இரு டி20 உலகக் கிண்ணங்கள் இருக்கும் நிலையில் வேகமான துடுப்பாட்டம் தொடர்பில் பிரபலம் பெற்ற இங்கிலாந்தின் 50 வயதுடைய ஜூலியன் வூட்டை ஒப்பந்தம் செய்யவும் இலங்கை கிரிக்கெட் சபை எதிர்பாத்துள்ளது. அவர் கடந்த இரண்டு ஆண்டுகளில் இங்கிலாந்து கிரிக்கெட்டுடன் அடிக்கடி பணியாற்றி வருகிறார்

SAG தொடருக்கான இலங்கையின் கிரிக்கெட் அணிகள் அறிவிப்பு

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் (SAG) …..

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னணி சுழற்பந்து பயிற்சியாளராக பணியாற்றிய பியல் விஜேதுங்கவின் ஒப்பந்தத்தை இலங்கை கிரிக்கெட் சபை நீடிக்கவில்லை. பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக்கை ஆலோசனை பயிற்சியாளராக பயன்படுத்த இலங்கை கிரிக்கெட் சபை எதிர்பார்த்துள்ளது.     

ஒருநாள் கிரிக்கெட்டில் தனது நாட்டுக்காக 496 விக்கெட்டுகளை வீழ்த்திய 42 வயதான சக்லைன் முஷ்டாக் உலகக் கிண்ணம் வென்ற இங்கிலாந்து அணியுடன் அண்மையில் சுழற்பந்துவீச்சு ஆலோசகராக பணியாற்றினார்.  

புதிய பயிற்சியாளர் நியமனங்கள் குறித்து இலங்கை கிரிக்கெட் சபையால் இதுவரை எந்த உத்தியோகபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. நவம்பரில் தேசிய அணியின் இந்த வெற்றிடங்கள் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நவம்பர் முதலாம் திகதி நடைபெறவிருக்கும் மூன்றாவது டி-20 போட்டிக்குப் பின் டிசம்பர் இரண்டாவது வாரம் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர் வரை இலங்கை தேசிய அணிக்கு எந்த சர்வதேச போட்டிகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த பயிற்சியாளர் நியமனங்கள் குறித்த மேலும் பல புதிய செய்திகளை எதிர்பார்த்து ThePapare.com உடன் இணைந்திருங்கள்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<