இலங்கை கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர்களை மாற்றுவதில் புதிய திருப்பம்

2483

தற்போது இடம்பெற்று வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சி குழுவினர் தொடர்பான விவகாரத்தில் புதிய திருப்பமாக, விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவின் உத்தரவை முன்னெடுப்பதற்கு அவகாசம் கோரி இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அமைச்சரிடம் வெள்ளிக்கிழமை (02) புதிதாக வேண்டுகோள் விடுத்துள்ளது. 

“தேசிய அணியின் பயிற்சி குழுவினை மாற்றுவது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் சபைக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் கௌரவ ஹரீன் பெர்னாண்டோ விடுத்த உத்தரவை செயற்படுத்துவதற்கு நியூசிலாந்து தொடர் முடியும் வரை அவகாசம் தரும்படி இலங்கை கிரிக்கெட் நிறைவேற்றுக்கு குழு நேற்று (2) அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தது” இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்ட ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.     

இலங்கை – நியூசிலாந்து போட்டி அட்டவணையில் மாற்றம்

நியூசிலாந்து அணியின் இலங்கைக்கான சுற்றுப்பயணத்தின் போட்டி…

அண்மையில் முடிவுற்ற பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் சர்வதேச தொடருக்கு முன்னதாக விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீர் பெர்னாண்டோ கிரிக்கெட் சபைக்கு அனுப்பிய கண்டிப்பான ஒரு கடிதத்தில், தேசிய அணியின் பயிற்சி அமைப்பில் முழுமையான சீரமைப்பு ஒன்றுக்காக கோரப்பட்டிருந்தது. 

எவ்வாறாயினும் இலங்கை அணி சொந்த மண்ணில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்வதற்கு இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலமே இருப்பதால், தலைமை பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்க விவகாரத்தில் எந்த முடிவுக்கும் வரவில்லை. ஹதுருசிங்கவின் ஒப்பந்தக் காலம் முடிவதற்கு இன்னும் 16 மாதங்கள் இருப்பதோடு அவர் தனது பதவியை ராஜினாமா செய்யவும் தயாராக இல்லை. 

இரண்டு டெஸ்ட் போட்டிகளுடன் தொடங்கும் நியூசிலாந்துடனான போட்டிகள் எதிர்வரும் ஆகஸ்ட் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 

கடந்த 2017 டிசம்பர் மாதம் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்ற ஹதுருசிங்கவின் ஒப்பந்தம் பற்றி இலங்கை கிரிக்கெட் சபை தெளிவாகவே அதிருப்தியில் உள்ளது. எவ்வாறாயினும் ஹதுருசிங்கவின் ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டால் அதற்காக இலங்கை கிரிக்கெட் சபை இழப்பீடுகள் வழங்க வேண்டி ஏற்படும் நிலையில் இது தொடர்பில் இரு தரப்புக்கும் தொடர்ந்து இணக்கப்பாடு ஒன்றுக்கு வர முடியாமல் உள்ளது.     

“எனக்கு இன்னும் 16 மாதங்கள் உள்ளன” என்று கடந்த மாதம் இங்கிலாந்தில் உலகக் கிண்ணத்திற்கு பின்னர் இலங்கை திரும்பிய பின் ஹதுருசிங்க செய்தியாளர்களிடம் குறிப்பிட்டிருந்தார். 

எனினும் உலகக் கிண்ண முடிவுக்குப் பின் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை பயிற்சியாளர் ஸ்டீவ் ரோட்ஸின் ஒப்பந்தத்தை நீடிக்காத நிலையில் மீண்டும் பங்களாதேஷ் பயிற்சியாளராக செல்வது குறித்து ஹதுருசிங்க அந்நாட்டு கிரிக்கெட் சபையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக நம்பகமான வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது. 

“நாம் தொழில்முறையாளர்களுடன் செயற்பட்டுக்கொண்டு இருக்கிறோம். இதில் ஒப்பந்தக் கட்டுப்பாடுகள் உள்ளன. பயிற்சியாளர்களை நியமிப்பது மற்றும் நீக்குவதாக செயற்பட்டால் எமக்கு பாதகமான பெயரைத் தரும் என்பதோடு சரியான முறையில் நாம் இதற்கு தீர்வு காண வேண்டும்” என்று இலங்கை கிரிக்கெட் சபை செயலாளர் மொஹான் டி சில்வா பங்களாதேஷ் தொடருக்கு முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.   

களத்தடுப்பு பயிற்சியாளர் மற்றும் துடுப்பாட்ட பயிற்சியாளர் பொறுப்புகளில் இருக்கும் முறையே ஸ்டீவ் ரிக்சன் மற்றும் ஜோன் லுவிஸ் இருவரது ஒப்பந்தம் 2019 உலகக் கிண்ணம் முடியும் வரை மாத்திரமே இருந்தது. இந்த இருவரும் பங்களாதேஷுக்கு எதிரான போட்டிகளில் பயிற்சியாளர் குழாத்தில் இடம்பெறவில்லை. 

“அணிக்குள் ஏற்பட்டிருக்கும் போட்டித் தன்மை வரவேற்கத்தக்கது” – திமுத்

இலங்கை கிரிக்கெட் அணிக்குள் புதிதாக உள்வாங்கப்படும் வீரர்கள் சிறப்பாக செயற்படுவது…

நியூசிலாந்து தொடரில் ஹதுருசிங்க பயிற்சியாளராக செயற்படுவதோடு ருமேஷ் ரத்னாயக்க தொடர்ந்து பந்துவீச்சாளர்களுக்கு பயிற்சி அளிப்பார் மனோஜ் அபேவிக்ரம களத்தடுப்பு பயிற்சியாளராக தொடர்ந்து நீடிக்கவுள்ளார். அதேபோன்று உடற்பயிற்சியாளராக நிக் லீ நீடிக்கவுள்ளார்.  

இதேவேளை இலங்கை கிரிக்கெட் சபை புதிய பயிற்சியாளர் ஒருவரை தொடர்ந்து தேடி வருவதோடு, நியூசிலாந்து தொடருக்குப் பின்னர் அது பற்றி முடிவு எடுக்கப்படவுள்ளது. டீன் ஜோன்ஸ், கிரான்ட் பிளவர், டொம் மூடி, ரசல் டொமிங்கோ மற்றும் மிக்கி ஆர்தர் ஆகிய அனைத்து பெயர்களும் இலங்கை கிரிக்கெட் சபையால் ஆராயப்பட்டு வருவதாக ThePapare.com இற்கு நம்பகமான வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது.  

“இலங்கை கிரிக்கெட் சபையுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தாம் இன்னும் தயாரில்லை என்று மஹேல ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். எனக்குத் தெரிந்தவரை, தற்போதைய நிலையில் இலங்கை கிரிக்கெட் சபை மூன்று-நான்கு பயிற்சியாளர்களிடம் பேசியுள்ளது. ஒரு பயிற்சியாளர் சுதந்திரமாக இருப்பதோடு எந்த நேரத்திலும் வரத் தயாராக இருந்தபோதும் சிறந்தவர்கள் ஏனைய கட்டுப்பாடுகள் காரணமாக மேலும் கால அவகாசங்கள் தேவைப்படுகின்றன. அடுத்த ஒருசில வாரங்களில் புது மாற்றங்களை கொண்டுவர எம்மால் முடியுமாக இருக்கும் என்று நான் உறுதியாக உள்ளேன்” என்று விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ வெள்ளிக்கிழமை (2) ஊடகங்களுக்கு குறிப்பிட்டார்.     

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<