நேபாளத்தில் நடைபெற்ற 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவுக்கு பங்கேற்றச் சென்ற இலங்கை வீரர்கள் எவ்வாறு டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டார்கள் என்ப்தை ஆராயும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும நேற்றுமுன்தினம் (09) கொழும்பு சுகததாச விளையாட்டரங்;கின் ஹோட்டலுக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது சுகததாச விளையாட்டரங்கின் நிர்வாகிகளுடன் சேர்ந்து ஹோட்டல் அமைந்துள்ள சுற்றுச் சூழலை அமைச்சர் கண்காணித்துடன், டெங்குக் காய்ச்சலை ஏற்படுத்துகின்ற பெருமளவான கழிவுகளும், பிளாஸ்டிக் போத்தல்களும் இனங்காணப்பட்டன.
இந்த நிலையில், இலங்கையில் வைத்து டெங்குக் காய்ச்சலுக்கு உள்ளாகிய அனைத்து வீரர்களிடமும் தான் மன்னிப்புக் கேட்பதாகத் தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர், அவர்ளுக்கு அரசாங்கத்தினால் விரைவில் நஷ்டஈடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
நேபாளத்தில் நேற்று நிறைவுக்கு வந்த 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான இலங்கை அணியில் இடம்பிடித்த பதக்கங்களை வெல்கின்ற ஒருசில முன்னணி வீரர்கள் டெங்குக் காய்;ச்சலினால் பாதிக்கப்பட்டு கத்மண்டுவில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த வீரர்களில் ஒருவர் தீவிர சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன், இன்னும் 10 வீரர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக இலங்கை அணியின் வைத்திய அதிகாரி லால் ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இதில் இலங்கை மெய்வல்லுனர்களான அமாஷா டி சி;ல்வா, உபுல் குமார, எஸ்.பி குமார மற்றும் கபடி வீரரொருவரும் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்த நிலையில், இலங்கை வீரர்கள் நேபாளம் புறப்பட்டு செல்வதற்கு முன்னர் சுகததாச விளையாட்டரங்;கில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தனர். இதன்போது தான் அவர்களுக்கு டெங்குக் நுளம்பின் தான் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இதனையடுத்தே விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும நேற்று சுகததாச விளையாட்டரங்குக்கு சென்று அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்து பார்த்தார்.
எனினும், குறித்த கண்காணிப்பு விஜயத்தின் போது உடைந்த பிளாஸ்டிக் கதிரைகள், பெருந்தொகையான பிளாஸ்டிக் போத்தலகள், கவனிப்பாரற்ற நிலையில் இருந்த வாகன தரிப்பிடம், டயர்கள் போன்ற டெங்கு நுளம்பை உருவாக்குகின்ற பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுஇவ்வாறிருக்க, குறித்த விடயம் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்ட விசேட ஊடக அறிக்கையில்,
இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் எமது வீரர்கள் 40 தங்கப் பதக்கங்களை இலங்கைக்கு பெற்றுக் கொடுத்துள்ளனர்.
எனினும், பதக்கம் வெல்கின்ற ஒருசில வீரர்களுக்கு இலங்கையில் வைத்து டெங்குக் காய்ச்சல் ஏற்பட்டது உண்மையில் கவலையளிக்கிறது. இதுதொடர்பில் அந்த வீரர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
அதேபோல இவ்வாறான சம்பவமொன்று நான் விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் போது நடக்கவில்லை என்று சொல்கின்ற மோசமான அரசியலை நான் ஒருபோதும் செய்யமாட்டேன்.
ஆனாலும், சுகததாச விளையாட்டரங்கில் இவ்வாறு டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு கடந்த 5 வருட காலங்களில் இருந்த நிர்வாகிககள் மற்றும் தலைவர்கள் தான் பொறுப்புக்கூற வேண்டும்.
அதிலும் குறிப்பாக கடந்த 5 வருடங்களில் ஐந்து தலைவர்கள் மற்றும் 3 நிறைவேற்று அதிகாரிகள் நியமிக்கபபட்டுள்ளனர். இவர்களது மோசமான நிர்வாகத்தினால் தான் இன்று எமது வீரர்கள் டெங்குக் காய்ச்சலுக்கு ஆளாகியிருக்கின்றனர்.
எனவே இதுதொடர்பில் ஜனாதிபதியை விரைவில் சந்தித்து சுகததாச விளையாட்டரங்கிற்கு புதியதொரு தலைவரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளேன் என தெரிவித்தார்.
அத்துடன், டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட அனைத்து வீரர்களுக்கும் அரசாங்கத்தினால் நஷ்டஈடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர், தெற்காசிய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்ற அனைத்து வீரர்களையும் கௌரவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
























