போராடித் தோல்வியை தவிர்த்த இலங்கை வளர்ந்து வரும் அணிக்கு தொடர் வெற்றி

699

தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணியுடனான இரண்டாவது மற்றும் கடைசி உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் கடுமையாக போராடி தோல்வியை தவிர்த்துக் கொண்ட இலங்கை வளர்ந்து வரும் அணி இந்த தொடரை 1-0 என கைப்பற்றியது.

அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியின் நான்காவது மற்றும் கடைசி நாளான இன்று (05) இலங்கை வளர்ந்து வரும் அணி 291 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸை துடுப்பெடுத்தாடியது. இதில் இலங்கை அணி வெற்றி இலக்கை நெருங்கியபோதும் ஆட்டநேரம் முடியும்போது கடைசி 2 விக்கெட்டுகளையும் காத்துக் கொண்டு தோல்வியை தவிர்த்தது.

சவாலான வெற்றி இலக்கை நோக்கி முன்னேறும் தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணி

இதன் மூலம் இந்த போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. எனினும் இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை வளர்ந்து வரும் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

கடந்த வியாழக்கிழமை (02) ஆரம்பமான இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணி முதல் இன்னிங்ஸில் 216 ஓட்டங்களையே பெற்றது.

இந்நிலையில் இலங்கை வளர்ந்து வரும் அணி சரித் அசலங்கவின் சதத்தின் மூலம் தனது முதல் இன்னிங்சுக்காக 319 ஓட்டங்களை பெற்றது.

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க தரப்புக்காக அணித்தலைவர் டோனி டி சொர்சி சதம் பெற்றதன் மூலம் அந்த அணி வலுவான நிலையை எட்டியது.

இந்நிலையில் 344 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணி மேலும் 49 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. இதன்படி தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 393 ஓட்டங்களை பெற்றது.

இதற்கமைய கடைசி நாள் ஆட்டத்தின் பகல் போசண இடைவேளைக்கு முன்னரே இலங்கை அணிக்கு 291 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எனினும் இலங்கை அணி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்ததால் தடுமாற்றம் கண்டது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சதீர சமரவிக்ரம 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததோடு அணித்தலைர் கௌஷால் சில்வா 49 ஓட்டங்களை பெற்ற நிலையில் வெளியேறினார். லஹிரு மலிந்த (21) மற்றும் சரித் அசலங்க (10) ஆகியோரும் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க இலங்கை வளர்ந்து வரும் அணி 124 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

எனினும் 5 ஆவது விக்கெட்டுக்கு இணைந்த பதும் நிஸ்சங்க மற்றும் சம்மு அஷான் 112 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டு அணியை நெருக்கடியில் இருந்து மீட்டனர். இதன்போது நிஸ்சங்க 115 பந்துகளில் 62 ஓட்டங்களை பெற்றதோடு மறுமுனையில் அபாரமாக ஆடிய சம்மு அஷான் 71 பந்துகளில் 71 ஓட்டங்களை பெற்றார்.

இந்நிலையில் இலங்கை வளர்ந்து வரும் அணி போட்டியின் கடைசி நேரத்தில் வேகமாக விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாற்றத்தை கண்டது. அந்த அணி வெறுமனே 8 ஓட்டங்களை பெறுவதற்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் மொத்தம் 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வி நெருக்கடியை சந்தித்தது.

எனினும் ஜெப்ரி வன்டர்சே மற்றும் நிசல தாரக்க கடைசி ஓவர்களில் தமது விக்கெட்டை காத்துக்கொண்டு இலங்கை அணியின் தோல்வியை தவிர்த்தனர். இதில் வன்டர்சே 20 பந்துகளில் ஆட்டமிழக்காது 4 ஓட்டங்களையும், நிசல தாரக்க 34 பந்துகளில் ஆட்டமிழக்காது 12 ஓட்டங்களையும் பெற்றனர்.

கிரிக்கெட் வாழ்வின் முடிவை நெருங்கும் ஹேரத்

கடைசி நாள் ஆட்டநேர முடிவின்போது இலங்கை வளர்ந்து வரும் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 260 ஓட்டங்களை பெற்றிருந்தது. எனினும் இலங்கை போட்டியில் வெற்றி பெற இன்னும் 31 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க வேண்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணி சார்பில் ஈதன் பொஸ்ச் மற்றும் நன்ட்ரே பர்கர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அடுத்து இலங்கை மற்றும் தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் சர்வதேச போட்டி ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 

ஸ்கோர் விபரம்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<