தோல்வியுறாத அணியாக T20 லீக்கில் முன்னேறும் கொழும்பு அணி

1010

இலங்கை கிரிக்கெட் சபை, மாகாண அணிகளுக்கு இடையில் ஒழுங்கு செய்து நடாத்தி வரும் T20 லீக் தொடரின் ஐந்தாவது ஆட்டத்தில் கொழும்பு அணி காலி அணியை 7 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருக்கின்றது.

இன்று (26) ரங்கிரி தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் தொடங்கியிருந்த இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற காலி அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன முதலில் துடுப்பாட்டத்தை தமது தரப்புக்காக தேர்வு செய்தார்.

தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியை சுவைத்த சந்திமாலின் கொழும்பு அணி

கண்டி அணியுடனான நேற்றைய (25) போட்டியில் 7 ஓட்டங்களால் த்ரில்லர் வெற்றியொன்றைப் பெற்று, T20 லீக் தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்த கருணாரத்ன தலைமையிலான காலி அணி தொடர்ந்து துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்தது.

மறுமுனையில், இந்த T20 லீக் தொடரில் எந்தவொரு தோல்வியையும் சந்திக்காத தினேஷ் சந்திமால் தலைமையிலான கொழும்பு அணி, காலி அணியின் சவாலை எதிர்கொண்டு களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

காலி அணிக்கு சிறந்த ஆரம்பம் கிடைக்கவில்லை. ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்த நிரோஷன் திக்வெல்ல ஓட்டமேதுமின்றி நுவான் பிரதீப்பின் வேகத்திற்கு இரையாகினார். இதேநேரம், கடந்த போட்டியில் அரைச்சதம் விளாசிய அணித்தலைவர் திமுத் கருணாரத்னவும் 5 ஓட்டங்களுடன் சோபிக்கத் தவறினார்.

இதன் காரணமாக, சற்று மெதுவாகவே காலி அணியின் துடுப்பாட்ட இன்னிங்ஸ் நகர்ந்தது. எனினும், காலி அணிக்காக குசல் மெண்டிஸ் 25 பந்துகளுக்கு 36 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா ஒரு சிக்ஸர் மற்றும் 6 பெளண்டரிகள் அடங்கலாக 30 பந்துகளுக்கு 40 ஓட்டங்களையும் எடுத்து பெறுமதி சேர்த்தனர்.

இவர்களின் துடுப்பாட்ட உதவியோடு, காலி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 131 ஓட்டங்களை பெற்றது.

கொழும்பு அணியின் பந்துவீச்சு சார்பாக, இளம் சுழல் வீரரான அகில தனஞ்சய 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

இதனையடுத்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 132 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய கொழும்பு அணி, ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்த அவிஷ்க பெர்னாந்துவின் விக்கெட்டை தொடக்கத்திலேயே பறிகொடுத்தது. 20 வயதேயான இளம் வீரரான அவிஷ்க பெர்னாந்து 6 ஓட்டங்களை மாத்திரமே பெற்று ஏமாற்றம் அளித்தார்.

எனினும், ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான உபுல் தரங்க அணித்தலைவர் தினேஷ் சந்திமாலுடன் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்காக நல்லதொரு இணைப்பாட்டத்தினை பகிர்ந்தார். 97 ஓட்டங்கள் வரையில் நீடித்த இந்த இணைப்பாட்டம் உபுல் தரங்கவின் விக்கெட்டோடு முடிவுக்கு வந்தது.

இந்த T20 லீக்கின் ஆரம்ப போட்டியில் தனது கன்னி T20 சதத்தை பதிவு செய்த உபுல் தரங்க, தொடரில் இரண்டாவது அரைச்சதத்தை பதிவு செய்து ஆட்டமிழந்தார். இப்போட்டியில் 41 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்ட உபுல் தரங்க 5 சிக்ஸர்கள் மற்றும் 8 பெளண்டரிகள் அடங்கலாக 81 ஓட்டங்களை விளாசியிருந்தார்.

T20 போட்டிகள் வரலாற்றில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த பாகிஸ்தான் வீரர்

தென்னாபிரிக்க அணியுடனான அண்மைய தொடரில் உபுல் தரங்க குறிப்பிடும்படியான சிறப்பான ஆட்டம் எதனையும் வெளிப்படுத்தாத நிலையில், இந்த T20 லீக்கில் நல்ல முறையில் செயற்படுவது அவர் தனது பழைய துடுப்பாட்ட பாணிக்கு மீண்டு வருகின்றார் என்பதையே காட்டுகின்றது.

இதனையடுத்து, சந்திமாலின் துடுப்பாட்ட உதவியுடன் கொழும்பு அணி போட்டியின் வெற்றி இலக்கை 16 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து அடைந்தது.

கொழும்பு அணியின் வெற்றிக்கு இறுதிவரை ஆட்டமிழக்காது களத்தில் இருந்து பங்களிப்புச் செய்த தினேஷ் சந்திமால் 38 ஓட்டங்களைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

காலி அணி போட்டியில் தோல்வியுற்ற போதிலும் அவ்வணியின் பந்துவீச்சு சார்பாக கசுன் ராஜித இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றி திறமையை வெளிக்காட்டியிருந்தார்.

இந்த வெற்றியுடன் கொழும்பு அணி இலங்கை கிரிக்கெட் சபையின் T20 லீக் தொடரில், நான்கு போட்டிகளை நிறைவு செய்து எந்தவொரு தோல்வியையும் சந்திக்காத அணியாக முன்னேறுகின்றது.

ஸ்கோர் விபரம்

 

முடிவு – கொழும்பு அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<