கண்டியுடனான பரபரப்பான மோதலில் சுப்பர் ஓவரின் பின்னர் வென்ற கொழும்பு

2193

SLC டி-20 லீக் தொடரின் கண்டி மற்றும் கொழும்பு அணிகளுக்கு இடையிலான மிகவும் பரபரப்பான மோதல் சமநிலை பெற, சுப்பர் ஓவரும் சமநிலையடைந்ததன் பின்னர் கொழும்பு அணி வெற்றி பெற்றது.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (22) நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களுக்கும் 5 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களை குவித்தது.

பிரியஞ்சனின் சதத்தோடு T20 லீக் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த தம்புள்ளை

இலங்கை கிரிக்கெட் சபை மாகாண அணிகளுக்கு இடையில் ஒழுங்கு…..

மீண்டும் ஒருமுறை சிறப்பாக துடுப்பெடுத்தாடிய உபுல் தரங்க 62 ஓட்டங்களை விளாசியதோடு மத்திய வரிசையில் செஹான் ஜயசூரிய 63 ஓட்டங்களை குவித்தார்.

இலங்கை கிரிக்கெட் சபையால் நடத்தப்படும் நான்கு அணிகளுக்கு இடையிலான இந்த தொடரில் உபுல் தரங்க நேற்று நடைபெற்ற காலி அணிக்கு எதிரான முதல் போட்டியில் 67 பந்துகளில் ஆட்டமிழக்காது 124 ஓட்டங்களை பெற்று கொழும்பு அணியை வெற்றிபெறச் செய்த நம்பிக்கையுடனேயே இன்றைய மோதலிலும் களமிறங்கினார்.

இதன்போது கண்டி அணிக்காக ஏழு பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தப்பட்டதோடு லசித் மாலிங்க தனது 4 ஓவர்களுக்கும் 28 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து விக்கெட் வீழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாலிங்க தொடரில் இதுவரை ஒரு விக்கெட்டை மாத்திரம் வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் சவாலான இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய கண்டி அணி ஓட்ட வேகத்திற்கு ஏற்ப சிறப்பாக துடுப்பெடுத்தாடி வெற்றியை நெருங்கியது. ஆரம்ப வீரராக வந்த லஹிரு திரிமான்ன 36 பந்துகளில் 5 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 50 ஒட்டங்களை விளாசினார். அணித்தலைவராக செயற்பட்ட தசுன் ஷானக்க 16 பந்துகளில் 30 ஓட்டங்களை குவித்தார்.

இதன்படி கண்டி அணி வெற்றி பெற கடைசி ஓவருக்கு 4 விக்கெட்டுகள் கைவசம் இருக்க 14 ஓட்டங்களை பெற வேண்டி ஏற்பட்டது. வேகப்பந்து வீச்சாளர் லஹிரு மதுஷங்க வீசிய அந்த ஓவரின் முதலாவது மற்றும் நான்காவது பந்துகளுக்கு சாமிக்க கருணாரத்ன பௌண்டரிகளைப் பெற்று நம்பிக்கை தந்தார். இதன்படி கடைசி பந்துக்கு வெற்றிபெற இரண்டு ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலையில் இரண்டாவது ஓட்டத்தை பெறமுயன்றபோது மலிந்த புஷ்பகுமார ரன் அவுட் ஆனார்.

இதனால் கண்டி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து சரியாக 188 ஓட்டங்களை பெற்றது. இதன்படி போட்டியின் வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்கு இரு அணிகளுக்கும் சுபர் ஓவர் வழங்கப்பட்டது.

அதில் முதலில் துடுப்பாடிய கண்டி வீரர்கள் ஜீவன் மென்டிஸின் ஓவருக்கு இரண்டு விக்கெட்டுக்களையும் இழந்து 5 ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர். பின்னர் பதிலுக்கு ஆடிய கொழும்பு அணியினரும் லசித் மாலிங்கவின் மிகச் சிறந்த பந்து வீச்சுக்கு மத்தியில் தமது ஒரு விக்கெட்டினை இழந்து 5 ஓட்டங்களையே பெற்றனர். பின்னர், போட்டியில் இரு அணியினதும் வீழ்த்தப்பட்ட விக்கெட்டுக்கள், பெறப்பட்ட பௌண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் அடிப்படையில் கொழும்பு அணிக்கு வெற்றி கிடைத்தது.

இதன்படி, தினேஷ் சந்திமால் தலைமையிலான கொழும்பு அணி தனது இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

போட்டியின் சுருக்கம்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<