இலங்கையின் தேசிய அணியின் வீரர்கள் உட்பட உள்ளூர் வீரர்கள் பங்கேற்கும் SLC T-20 லீக்கின், இன்றைய முதல் போட்டியில் உபுல் தரங்கவின் கன்னி சதத்தின் உதவியுடன் கொழும்பு அணி 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவுசெய்துள்ளது.
கொழும்பு, கண்டி, தம்புள்ளை மற்றும் காலி ஆகிய நான்கு அணிகள் மோதும் SLC T-20 கிரிக்கெட் லீக் இன்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. இன்றைய தினம் இரண்டு போட்டிகள் நடைபெறும் நிலையில், முதல் போட்டியில் தினேஸ் சந்திமால் தலைமையிலான கொழும்பு அணியும், சுராங்க லக்மால் தலைமையிலான காலி அணியும் பலப்பரீட்சை நடத்தின.
எதிரணிக்கு சவாலாக இருக்கும் அகிலவின் மாய சுழல்
பல்லேகலை மைதானத்தில் கடந்த வாரம் தென்னாபிரிக்க அணியுடனான ஒரு நாள் தொடரின் போது ஊடகவியலாளர்……
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அந்த அணி சார்பில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக தினேஸ் சந்திமால் மற்றும் உபுல் தரங்க ஆகியோர் களமிறங்கினர்.
தினேஸ் சந்திமால் ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்து வெளியேற, உபுல் தரங்க அணியின் துடுப்பாட்டத்தை வழிநடத்தினார். அடுத்துவந்த வீரர்களும் சொற்ப ஓட்டங்களுடன் வெளியேற, உபுல் தரங்க மாத்திரம் அதிரடியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். உபுல் தரங்கவுடன் இணைந்து செஹான் ஜயசூரிய சிறிய இணைப்பாட்டமொன்றை வழங்க, உபுல் தரங்க அரைச்சதத்தை கடந்தார். தொடர்ந்து செஹான் ஜயசூரியவும் ஆட்டமிழக்க, தனித்து நின்று துடுப்பெடுத்தாடிய தரங்க பந்துகளை எல்லைக்கோட்டுக்கு வெளியே செலுத்தினார்.
ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற இவர், 67 பந்துகளை எதிர்கொண்டு 11 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 124 ஓட்டங்களை விளாசினார்.இன்றைய 124 என்ற ஓட்ட எண்ணிக்கையானது இவரின் அதிகூடிய T-20 ஓட்ட எண்ணிக்கையாக பதிவாகியதுடன், முதல் T-20 சதமாகவும் பதியப்பட்டது.
உபுல் தரங்கவுடன் இறுதிவரை பங்களிப்பு வழங்கிய ஜீவன் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 13 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 30 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, கொழும்பு அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 195 ஓட்டங்களை குவித்தது.காலி அணிசார்பில் கசுன் ராஜித மற்றும் நிசான் பீரிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் ஆப்கானிஸ்தானுக்கு முதல் வெற்றி
அயர்லாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, பேர்டி மைதானத்தில் நேற்று (20) நடைபெற்ற……
பின்னர், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய காலி அணி, குசல் மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல, தனஞ்சய டி சில்வா மற்றும் திமுத் கருணாரத்ன போன்ற சிறந்த துடுப்பாட்ட வீரர்களை கொண்டிருந்த போதும் ஆரம்பத்திலிருந்து தடுமாறியது.
குசால் மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் தலா ஒரு ஓட்டத்துடன் வெளியேற, தனஞ்சய டி சில்வா 9 ஓட்டங்களுடன் ஏமாற்றமளித்தார். அணியின் சார்பில், அஞ்சலோ பெரேரா மாத்திரம் அரைச்சதத்தை பெற்றுக்கொடுக்க, ஏனைய வீரர்களும் ஏமாற்றமளித்தனர்.
எனவே, 19.2 ஓவர்கள் வரை தாக்குபிடித்த காலி அணி வெறும் 107 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து, 90 ஓட்டங்களால் படுதோல்வியை சந்தித்தது. அணிக்காக அஞ்சலோ பெரேரா 54 ஓட்டங்களை பெற, அவருக்கு அடுத்தபடியாக அசேல குணரத்ன 18 ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் அகில தனன்ஜய 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், லஹிரு மதுசங்க 2 விக்கெட்டுளையும் வீழ்த்தினர்.
போட்டி சுருக்கம்




















