இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சினை வலுப்படுத்தும் நோக்கில், முன்னாள் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் லசித் மாலிங்காவை குறுகியகால ஒப்பந்த அடிப்படையில் வேகப்பந்துவீச்சு ஆலோசகராக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நியமித்துள்ளது.
>>துடுப்பாட்டத்தில் போராடியும் இலங்கை மகளிருக்கு தோல்வி
சர்வதேச கிரிக்கெட்டில் சுமார் 500 விக்கெட்டுக்களுக்கு மேல் கைப்பற்றி உலகின் பல்வேறு T20 லீக்குகளில் ஆடிய பரந்த அனுபவம் கொண்டிருக்கும் லசித் மாலிங்க, T20 உலகக் கிண்ணத் தொடரிற்கு இலங்கை கிரிக்கெட் அணியினை தயார்படுத்தும் வகையிலையே வேகப்பந்துவீச்சு பயிற்சி ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.
அதன்படி மாலிங்கவின் பதவிக்காலம் டிசம்பர் 15, 2025 தொடக்கம் ஜனவரி 25, 2026 (40 நாட்கள்) என இருக்கும் SLC வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பின்னர் பிறகு பயிற்சியாளர் பணிகளில் ஆர்வம் காட்டி வரும் மாலிங்கா, ஏற்கனவே ஐ.பி.எல் தொடரின் முன்னணி அணிகளான ராஜஸ்தான் ரோயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகியவற்றின் பயிற்சியாளர் குழாத்திலும் காணப்பட்டிருப்பதோடு, இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுடனும் முன்னர் ஆலோசக பயிற்சிகளை வழங்கியது சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.
அதேவேளை பெப்ரவரி மாத ஆரம்பத்தில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கும் T20 உலகக் கிண்ணத் தொடரில், இலங்கை தமது முதல் போட்டியில் கொழும்பில் வைத்து அயர்லாந்தினை எதிர்கொள்ளவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















