கடற்படை, SLPACC அணிகளுக்கு இலகு வெற்றி : எதிர்பார்ப்பிற்கு மாற்றமாக முடிந்த மற்றொரு போட்டி

383
Club Cricket

நடைபெற்றுக் கொண்டிருக்கும் இலங்கை பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று B மட்ட கழக அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இதில் தமது சிறப்பான ஆட்டங்கள் மூலம் இலங்கை கடற்படை விளையாட்டுக் கழக அணி மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழக அணி ஆகியவை இலகு வெற்றியினை சுவீகரித்துள்ளன.  

விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த களுத்துறை பெளதீக கலாசார அணி மற்றும் பொலிஸ் அணிகளுக்கு இடையிலான மற்றைய போட்டி சமநிலையில் நிறைவுற்றுள்ளது.

களுத்துறை நகர கழகம் எதிர் இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம்

இரண்டு நாட்களின் முன்னர் மக்கோன சர்ரேய் ஆடுகளத்தில் ஆரம்பாகியிருந்த இப்போட்டியில் களுத்துறை நகர கழக அணி 143 ஓட்டங்களுடன் தமது முதல் இன்னிங்சினையும், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை கடற்படை அணி 350 ஓட்டங்களுடன் தமது முதல் இன்னிங்சினையும் நிறைவு செய்து கொண்டிருந்தன.

பின்னர் தமது இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த களுத்துறை நகர கழகம், நேற்றைய ஆட்டநேர நிறைவின்போது 5 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

போட்டியின் இறுதி நாளான இன்று, தமது ஆட்டத்தினை தொடர்ந்த களுத்துறை நகர கழக அணியின் பின்வரிசை வீரர்கள் ஆடுகளம் வந்து மிக வேகமாக ஆட்டமிழந்ததன் காரணமாக இன்றைய நாளில் அவ்வணி வெறும் 49 ஓட்டங்களினை மாத்திரம் பெற்றது. எனவே சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து இரண்டாவது இன்னிங்சுற்காக 214 ஓட்டங்களினை  மாத்திரமே களுத்துறை நகர கழகம் பெற்றுக்கொண்டது.

களுத்துறை நகர கழக அணியின் துடுப்பாட்டத்தில், நேற்று அரைச்சதம் கடந்த நிபுனே கமகேவுடன் (50) சேர்ந்து தரிந்து சிறிவர்தன 45 ஓட்டங்களை குவித்திருந்தார். கடற்படை அணி சார்பாக பந்து வீச்சில், சுதாரக்க தக்ஷின 67 ஓட்டங்களைக் கொடுத்து நான்கு  விக்கெட்டுக்களை வீழ்த்தியதுடன் இஷான் அபயசேகர மூன்று விக்கெட்டுக்களை பதம் பார்த்திருந்தார்.  

பின்னர், வெற்றி இலக்காக வழங்கப்பட்ட 8 ஓட்டங்களைப் பெறுவதற்கு ஆடுகளம் நோக்கி விரைந்த கடற்படை அணி, 1.3 ஓவர்களில் எந்தவொரு விக்கெட் இழப்பும் இன்றி 10 ஓட்டங்களைப் பெற்று இப்போட்டியில் 10 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றுக்கொண்டது.

போட்டியின் சுருக்கம்

களுத்துறை நகர கழகம் (முதல் இன்னிங்ஸ்): 143 (42.4) – தரிந்து சிறிவர்தன 33, கிரிஷேன அபோன்சு 22, சுதரக்க தக்ஷின 9/4, அஷான் ரணசிங்க 16/2, இஷான் அபேசேகர 24/2

இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்): 350 (85.2) – தினுஷ்க மாலன் 113, இஷான் அபேசேகர 80*, அஷான் ரணசிங்க 79, மங்கல குமார 98/7

களுத்துறை நகர கழகம்(இரண்டாவது இன்னிங்ஸ்): 214 (59.4) நிபுனே கமகே 50, தரிந்து சிறிவர்தன 45, யோஹன் டி சில்வா(ரஷ்மிக்க) 31, சுதாரக்க தக்ஷின 67/4, இஷான் அபயசேகர 21/3

இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம்(இரண்டாவது இன்னிங்ஸ்): 10/0(1.3)

போட்டி முடிவு – இலங்கை கடற்படை விளையாட்டுக் கழக அணி  10 விக்கெட்டுக்களால் வெற்றி

இப்போட்டியின் மூலம் அணிகள் பெற்றுக்கொண்ட புள்ளிகள்

இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம் 16.8

களுத்துறை நகர கழகம் 3.285


இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் எதிர் லங்கன் கிரிக்கெட் கழகம்

நேற்றைய இரண்டாவது நாளில், யோஹன் டி சில்வா(90), இஷான் ரங்கன(70), கிஹான் ரூபசிங்க ஆகியோரின் சிறப்பான ஆட்டங்களுடன் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 228 ஓட்டங்களைக் குவித்திருந்த இலங்கை துறைமுக அதிகார சபை அணி, இன்றைய நாளின் ஆரம்பத்திலேயே குறுகிய இடைவெளிகளில் விக்கெட்டுக்களை பறிகொடுக்க, 65.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 259 ஓட்டங்களினை குவித்திருந்த போது தமது இரண்டாவது இன்னிங்சினை நிறுத்திக்கொண்டது.

பந்து வீச்சில், லங்கன் கிரிக்கெட் கழகத்திற்காக சானக்க ருவன்சிறி, ரஜீவ வீரசிங்க, நவீன் கவிகர ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

இப்போட்டியின் முதல் இன்னிங்சுக்காக இலங்கை துறைமுக அதிகார சபை அணி, 248 ஓட்டங்களினையும் லங்கன் கிரிக்கெட் கிரிக்கெட் கழகம் 108 ஓட்டங்களினையும் குவித்திருந்த காரணத்தினால், தமது இரண்டாவது இன்னிங்சினை, 399 ஓட்டங்கள் பின்தங்கி ஆரம்பித்த லங்கன் கிரிக்கெட் கழக அணி, மோசமான துடுப்பாட்டம் காரணமாக, 30.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 147 ஓட்டங்களினை மாத்திரம் பெற்றுக்கொண்டு, இலங்கை துறைமுக அதிகார சபையிடம் 252 ஓட்டங்களினால் படுதோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் லங்கன் கிரிக்கெட் கழகம் சார்பாக இரண்டு வீரர்கள் மாத்திரமே 30 ஓட்டங்களைத் தாண்டியதுடன், அதில் ஒருவரான லால் குமார் 50 பந்துகளில் அரைச்சதம் கடந்து 53 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

பந்து வீச்சில், சாணக்க கோமசரு, ரனேஷ் பெரேரா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியதோடு, சமிகர எதிரிசிங்க, கனேகம ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றி இலங்கை துறைமுக அதிகார சபையின் வெற்றிக்கு பங்காற்றினர்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை துறைமுக அதிகாரசபை (முதல் இன்னிங்ஸ்): 248 (81.2) – இஷான் ரங்கன 69, சமிகர எதிரிசிங்க 44, ரஜீவ வீரசிங்க 87/4

லங்கன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்): 108 (37.3) – சாணக்க ருவன்சிரி 43, சஷீன் பெர்னாந்து 34, சாணக்க கோமசாரு 16/4, சமிந்த பண்டார 56/3

இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம்(இரண்டாவது இன்னிங்ஸ்): 259/6d (65.4) யோஹன் டி சில்வா 90, இஷான் ரங்கன 70, கிஹான் ரூபசிங்க 40, நவீன் கவிகர 65/2, சாணக்க ருவன்சிரி 65/2, ரஜீவ வீரசிங்க  97/2

லங்கன் கிரிக்கெட் கழகம்(இரண்டாவது இன்னிங்ஸ்): 147 (30.3) லால் குமார் 53, ரஜீவ வீரசிங்க 32, ரனேஷ் பெரேரா 28/3, சாணக்க கோமசரு 44/3

போட்டி முடிவு – இலங்கை துறைமுக அதிகாரசபை அணி 252 ஓட்டங்களால் வெற்றி

இப்போட்டியின் மூலம் இரண்டு அணிகளும் பெற்றுக்கொண்ட புள்ளிகள்

இலங்கை துறைமுக அதிகார சபை அணி 17.535

லங்கன் கிரிக்கெட் கழகம் 3.675


களுத்துறை பெளதீக கலாசார அணி எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

BRC மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இப்போட்டியில், ஏற்கனவே நிறைவடைந்த பொலிஸ் கழக அணியின் முதலாவது மற்றும் இரண்டாவது இன்னிங்ஸ்கள், களுத்துறை பெளதீக கலாசார அணியின் முதல் இன்னிங்ஸ் என்பவற்றின் காரணமாக, களுத்துறை பெளதீக கலாசார அணிக்கு 182 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில், அவ்வணி தமது இரண்டாவது இன்னிங்சுக்காக 2 விக்கெட்டுக்களை இழந்து 41 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது இப்போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேரம் நிறைவிற்கு வந்தது.

இதனையடுத்து போட்டியின் கடைசி நாளான இன்று, வெற்றியிலக்கிற்காக மேலும்  141 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் ஆட ஆரம்பித்த களுத்துறை பெளதீக கலாச்சார அணி, தமிது அஷான் பெற்றுக்கொண்ட அரைச்சதத்தின்(56) உதவியுடன் வெற்றியிலக்கினை நோக்கி சீரான பாதையிலேயே பயணித்துக்கொண்டிருந்தது.

இந்த வேளையில், பொலிஸ் அணியின் சுழல் பந்து வீச்சாளர் சுவஞ்சி மதநாயக்கவின் சுழல் மூலம் பறிபோன விக்கெட்டுக்கள் காரணமாக, போட்டி மெதுவாக பொலிஸ் அணியின் பக்கம் சாதமாகியிருந்தது. இருப்பினும், பின்வரிசை துடுப்பாட்ட வீரரான ரசிக்க பெர்னாந்துவின், துரித கதியிலான ஓட்டக்குவிப்பு காரணமாக, இப்போட்டி மீண்டும் களுத்துறை நகர கழக அணியின் பக்கம் திரும்பியது.

இந்நிலையில், 9 விக்கெட்டுக்களை இழந்து 181 ஓட்டங்களினை பெற்று வெற்றி பெற ஒரு ஓட்டமே களுத்துறை அணிக்கு தேவைப்பட்ட போது, அந்த ஓட்டத்தினை பெறுவதற்கு முயற்சி செய்த ரசிக்க பெர்னாந்து  ரன் அவுட் முறையில் ஆட்டமிழப்பு செய்யப்பட்டதன் காரணமாக, இப்போட்டி சமநிலையில் நிறைவுற்றது. இதனால், களுத்துறை அணியின் வெற்றி பெறும் கனவு வெறும் ஒரு ஓட்டத்தினால் வீணாய் போனது.

துடுப்பாட்டத்தில், இறுதி வரை போராடியிருந்த களுத்துறை பெளதீக கலசார அணியின் ரசிக்க பெர்னாந்து 32 பந்துகளில் 9 பவுண்டரிகள் உள்ளடங்களாக 43 ஓட்டங்களினை விளாசியிருந்தார்.

பந்து வீச்சில், திருப்பு முனையாக அமைந்த இறுதி ரன் அவுட்டினையும் மேற்கொண்டிருந்த சுவஞ்சி மதநாயக்க 7 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

பொலிஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்): 235 (70.1) – சுவஞ்சி மதநாயக்க 96*, சமித் துஷாந்த 45, அகில லக்ஷான் 31, ஜெஸ்ஸி சிங்  38/4, தெனுக்க தனஞ்சய 47/3, ருச்சிர தரிந்த்ர 51/2

களுத்துறை பெளதீக கலாசார அணி (முதல் இன்னிங்ஸ்): 139 (67) – தமிது அஷான் 34, சுவஞ்சி மதநாயக்க 37/3, கல்யாண ரத்னப்பிரிய 45/3

பொலிஸ் விளையாட்டு கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்): 85 (25.3) – தரிந்து தில்ஷான் 27, ருச்சிர தரிந்த்ர 31/7, ஜெஸ்ஸி சிங் 29/2

களுத்துறை பெளதீக கலாசார அணி(இரண்டாவது இன்னிங்ஸ்): 181 (41.1) தமிது அஷன் 56, ரஷிக்க பெர்னாந்து 43, சுவஞ்சி மதநாயக்க 70/7

போட்டி முடிவு – போட்டி சமநிலையில் நிறைவுற்றது

இப்போட்டியிற்காக அணிகள் பெற்றுக்கொண்ட புள்ளிகள்

களுத்துறை பெளதீக கலாசார அணி 12.6

பொலீஸ் விளையாட்டு கழகம் 12.6