2016/17ஆம் பருவகால இலங்கை கிரிக்கெட் பிரீமியர் லீக் போட்டிகளின் B தரத்திலான அணிகளுக்கான மூன்று போட்டிகள் இன்று ஆரம்பமாகின. குறித்த போட்டிகளில் முதலாவது நாளில் பாணதுறை விளையாட்டுக் கழகம், துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் ஆகிய அணிகள் வலுவான நிலையில் உள்ளன.

முன்னைய போட்டி: சானக கோமசாரு பந்து வீச்சில் சுருண்ட விமானப் படை

பொலிஸ் விளையாட்டுக் கழகம் எதிர் இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம்

இலங்கை விமானப்படை அணியுடனான முதலாவது போட்டியிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அப்போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த சானக கோமசாரு இந்த போட்டியிலும் 35 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தினார்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் பொலிஸ் அணியை துடுப்பாடுமாறு பணித்தது. அதன்படி முதலில் துடுப்பாடிய பொலிஸ் விளையாட்டு கழகம் துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகத்தின் அசுர பந்து வீச்சை எதிர் கொள்ள முடியாமல் 5 ஓவர்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்து 103 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

பொலிஸ் விளையாட்டுக் கழக அணிக்காக கூடிய ஓட்டங்களாக மூன்று துடுப்பாட்ட வீரர்களே இரட்டை இலக்கங்களை பதிவு செய்தனர்.

பந்து வீச்சில் துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் சார்பாக சிறப்பாக பந்து வீசிய சானக கோமசாரு மற்றும் சமிக்கற எதிரிசிங்க முறையே 5, 4 விக்கெட்டுக்களை வீழ்த்திய அதேநேரம், சமிந்த பண்டார 14 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டினை வீழ்த்தினார்.

அதன் பின்னர் பதிலுக்கு துடுப்பாடிய துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் இன்றைய ஆட்ட நேரம் நிறைவின்போது எந்தவொரு விக்கெட்டு இழப்புமின்றி 39 ஓவர்களில் 117 ஓட்டங்களை பெற்ற அதேநேரம் 14 ஓட்டங்களால் முன்னிலை வகித்து மிகவும் வலுவான நிலையில் இருக்கிறது.

போட்டியின் சுருக்கம்

பொலிஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) : 103(50) – சமித் துஷந்த 26, துசிற மதனாயக்க 19, அசேல அழுத்கே 14, சானக கோமசாரு 35/5, சமிக்கற எதிரிசிங்க 29/4,

துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) : 117/௦ (39) ஹஷான் குணதிலக்க 78*, யோஹான் டி சில்வா 29*


லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் பாணதுறை விளையாட்டுக் கழகம்

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாணதுறை விளையாட்டுக் கழகம், லங்கன் கிரிக்கெட் கழகத்தை முதலில் துடுப்பாடுமாறு பணித்தது. அதனை தொடர்ந்து களமிறங்கிய லங்கன் கிரிக்கெட் கழகம் 34.1 ஓவர்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 163 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. கூடிய ஓட்டங்களாக சனக ருவன்சிரி 40 ஓட்டங்களையும் சரித் பெர்னாண்டோ 35 ஓட்டங்களையும் பதிவு செய்தனர்.

சிறப்பாக பந்து வீசிய லசித் பெர்னாண்டோ மற்றும் நிமேஷ் விமுக்தி முறையே 4, 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

அதன் பின்னர் களமிறங்கிய பாணதுறை விளையாட்டுக் கழகம் முதலிரண்டு விக்கெட்டுக்களை 5 ஓட்டங்களுக்குள் இழந்து தத்தளித்த போதிலும், தொடர்ந்து களமிறங்கிய முஹம்மத் சில்மி (75)  மற்றும் மிஷேன் சில்வா ஆகியோர் சிறந்த துடுப்பாட்டத்தின் காரணமாக அணியை வலுவான நிலைக்கு மீட்டனர்.

சிறப்பாக துடுப்பாடிய மிஷேன் சில்வா 13 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 15 ஓட்டங்களை பெற்றிருந்தபோது கவிக்கரவின் பந்து வீச்சில் ரோட்ரிகோவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

லங்கன் கிரிக்கெட் கழகம் சார்பாக சிறப்பாக பந்து வீசிய ரஜீவ வீரசிங்க 64 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், அவருடன், நவீன் கவிக்கர 83 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது பாணதுறை விளையாட்டு கழகம் 52.5 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 244 ஓட்டங்களை பெற்றதோடு, 81 ஓட்டங்களால் முன்னிலை வகிக்கிறது.

போட்டியின் சுருக்கம்

லங்கன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) : 163 (34.1) – சனக்க ருவன்சிரி 40, சரித பெர்னாண்டோ 35, லசித் பெர்னாண்டோ 29/4, நிமேஷ் விமுக்தி 48/3

பாணதுறை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) : 244/7 (52.5) – மிஷேன் சில்வா 105, முஹம்மத் சில்மி 75, சஞ்சய சதுரங்க 22*, ரஜீவ வீரசிங்க 64/4 நவீன் கவிக்கர 83/3


இலங்கை விமானப்படை விளையாட்டுக் கழகம் எதிர் இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம்

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை கடற்படை அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. தொடர்ந்து களமிறங்கிய அவ்வணி முதலிரண்டு விக்கெட்டுக்களை வெறும் 9 ஓவர்களுக்குள் இழந்து இக்கட்டான நிலையில் இருந்தது.

எனினும், அதனை தொடர்ந்து களமிறங்கிய மதுர மதுசங்க மற்றும் புத்திக்க ஹசரங்க இணைந்து நிதான ஆட்டத்தினை வெளிப்படுத்தியதோடு அணியின் ஓட்ட எண்ணிகையை உயர்த்தினர். இவ்விருவரும் 72 ஓட்டங்களை இணைப்பாட்டமாக கொண்டிருந்த வேளை, மதுர மதுசங்க 23 ஓட்டங்களுக்கு புத்திக்க சந்தருவானின் பந்து வீச்சில் லஹிறு லக்மாலிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

சிறப்பாக துடுப்பாடிய புத்திக்க ஹசரங்க 51 ஓட்டங்களுடனும், அவருடன் இணைந்து கொண்ட அணித் தலைவர் சமீர சந்தமல் 59 ஓட்டங்ளுடனும் ஆட்டமிழந்தனர். எழாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய  அஷான் ரணசிங்க 47 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை LBW முறையில் ஆட்டமிழந்தார்.

முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது, இலங்கை கடற்படை அணி 88.4 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிகு 268 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. சிறப்பாக பந்து வீசிய சஹான் ஜயவர்தன 61 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், புத்திக்க சந்தருவன் 52 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.    

போட்டியின் சுருக்கம்

இலங்கை கடற்படை அணி (முதல் இன்னிங்ஸ்) : 268/8 (88.4) – சமீர சந்தமல் 59*, புத்திக்க ஹசரங்க 51, அஷான் ரணசிங்க 47, டினுஷ்க மாலன் 38, சஹான் ஜயவர்தன 61/4, புத்திக்க சந்தருவன் 52/2,

SLC Premier League Tier B