நேற்று (30) நிறைவுக்கு வந்த இலங்கை கிரிக்கெட் சபை (SLC) மேஜர் கழக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியில் கொழும்பு கிரிக்கெட் கழகம், பொலிஸ் விளையாட்டுக் கழகத்தினை 187 ஓட்டங்களால் அபாரமாக வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றுள்ளது.
>>இந்திய பயிற்சியாளர் – மைதானப் பராமரிப்பாளர் இடையே வாக்குவாதம்<<
கொழும்பு கிரிக்கெட் கழக அரங்கில் நடைபெற்ற தீர்மானம் கொண்ட இறுதிப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய கொழும்பு கிரிக்கெட் கழகம், ஆரம்பத்தில் தடுமாறி ஒரு கட்டத்தில் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட போதும் அவ்வணிக்கு பவன் ரத்நாயக்க அபார சதம் விளாசி கைகொடுத்தார். இதன் காரணமாக அவர்கள் 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 387 ஓட்டங்கள் குவித்தனர்.
கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் துடுப்பாட்டத்தில் பவன் ரத்நாயக்க 94 பந்துகளை முகம் கொடுத்து 9 சிக்ஸர்கள் மற்றும் 13 பௌண்டரிகள் அடங்கலாக 158 ஓட்டங்கள் பெற, நிஷான் மதுஷ்க 88 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 59 ஓட்டங்களையும், அணித்தலைவர் சொனால் தினுஷ 53 ஓட்டங்களையும் பெற்றனர்.
அதேவேளை பொலிஸ் பந்துவீச்சில் சாருக்க ப்ரமோத், சாருக்க ஜயத்திலக்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர். இதனையடுத்து போட்டியின் வெற்றி இலக்காக 388 ஓட்டங்களை டைய பதிலுக்கு ஆடிய பொலிஸ் விளையாட்டுக்கழகம் 40.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 200 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் படுதோல்வியடைந்தது.
பொலிஸ் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக பிரியமல் பெரேரா 57 ஓட்டங்களை எடுக்க, இனுக்க கரன்னகொட 32 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைச் சாய்த்து தனது தரப்பின் வெற்றியினை உறுதி செய்தார்.
போட்டியின் சுருக்கம்
கொழும்பு கி.க. – 387/5 (50) பவன் ரத்நாயக்க 158*, நிஷான் மதுஷ்க 88, கமிந்து மெண்டிஸ் 59, சொனால் தினுஷ 53, சாருக்க ஜயத்திலக்க 2/65
பொலிஸ் வி.க. – 200 (40.2) ப்ரியமால் பெரேரா 57, இனுக்க கரன்னகொட 4/32
முடிவு – கொழும்பு கிரிக்கெட் கழகம் 187 ஓட்டங்களால் வெற்றி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<