மீண்டும் இவ்வருடம் இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் T-20

2923

இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதவுள்ள சுதந்திரக் கிண்ண முத்தரப்பு T-20 தொடரினால் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ள வருமானத்தினைப் பயன்படுத்தி 5 வருடங்களாக நடைபெறாமல் தடைப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் (SLPL) T-20 போட்டிகளை இவ்வருடத்திலிருந்து மீண்டும் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.

[rev_slider LOLC]

சுதந்திரக் கிண்ண முத்தரப்பு T-20 தொடரினால் இலங்கைக்கு 100 கோடி ரூபா வருமானம்

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும்….

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் முகமாக இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளசுதந்திரக் கிண்ணம்‘ (நிதஹஸ் குசலான) முத்தரப்பு T-20 தொடருடன் கைகோர்த்துள்ள உத்தியோகபூர்வ அனுசரணையாளர்களை அறிமுகப்படுத்தும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று(08) கொழும்பு ஜெய்க் ஹில்டன் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

இந்த முத்தரப்பு T-20 தொடரின் மூலம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு நிகர வருமானமாக நூறு கோடி ரூபா கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம். இதனைக் கொண்டு ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் T-20 தொடரை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் T-20 போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. எனினும், ஆசியாவில் இவ்வாறான தொடரொன்றை நடத்தாத ஒரேயொரு நாடாக நாம் இருந்து வருகின்றோம். எனவே, அத்தொடரை இவ்வருடத்திலிருந்து மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம். தரமான முறையில் அப்போட்டிகளை நடத்தி உள்ளூர் கிரிக்கெட்டினை மேலும் வலுப்படுத்துவதற்கும், வீரர்களுக்கு அதிகளவான வருமானத்தைப் பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

2015 உலகக் கிண்ணப் போட்டிகளின் பிறகு, இலங்கை அணி அனைத்துவகையான கிரிக்கெட் போட்டிகளிலும் தடுமாறி வருவதுடன், தரவரிசையிலும் பின்னடைவை சந்தித்து வந்தது.

அதிலும் குறிப்பாக இதுவரையான காலப்பகுதியில் டெஸ்ட், ஒரு நாள் மற்றும் T-20 போட்டிகளுக்காக பல வீரர்களை ஒவ்வொரு தொடருக்காகவும் பரீட்சார்த்தம் செய்துவந்த தெரிவுக்குழுவினர் கடந்த 2 வருடங்களாக உறுதியான அணியொன்றை கட்டியெழுப்ப தவறிவிட்டனர். மேலும், இலங்கை அணியின் இந்த தொடர்ச்சியான பின்னடைவுக்கு போட்டித் தன்மையற்ற உள்ளூர் முதற்தரப் போட்டிகளில் காணப்படுகின்ற குறைபாடுகள் தான் முக்கிய காரணம் என பல முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா அணிகளின் அண்மைக்கால வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக அந்நாடுகளில் நடாத்தப்படுகின்ற முதற்தரப் போட்டிகள் மற்றும் T-20 தொடர்கள் அமைகின்றன என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, இந்தியன் பிரீமியர் லீக் எனப்படுகின்ற .பி.எல் T-20 தொடர் ஆரம்பமாகி 5 வருடங்களுக்குப் பிறகு, அதாவது 2012ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் முதற்தடவையாக ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் என்ற பெயரில் (SLPL) T-20 தொடர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எனினும், குறித்த தொடரை 2011இல் நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை திட்டமிட்டிருந்தாலும், தவிர்க்க முடியாத காரணத்தினால் அது 2012ஆம் ஆண்டுதான் நடைபெற்றது. இதனையடுத்து, இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள், உட்பூசல்கள் மற்றும் குறித்த தொடரினால் போதியளவு இலாபத்தை ஈட்டிக்கொள்ள முடியாது போனமை உள்ளிட்ட காரணங்களால் குறித்த தொடரை தொடர்ந்து நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன. இதனையடுத்து மாகாணங்களுக்கிடையிலான உள்ளூர் T-20 தொடரை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் தொடர் அல்லது அதேபோன்ற மற்றுமொரு லீக் தொடரை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் உறுதிப்படுத்தினார்.

டெஸ்ட் விளையாடும் இளம் வீரர்களுக்காக களத்தில் குதித்த சங்கக்கார

டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளைச் சேர்ந்த..

இந்நிலையில், ஐசிசி வெளியிட்டுள்ள எதிர்கால போட்டித் தொடர் அட்டவணையின் படி 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இலங்கை அணிக்கு 3 வார இடைவெளி வழங்கப்பட்டுள்ளது. இந்த காலத்தை பயன்படுத்தி குறித்த தொடரை நடத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக கிரிக்கெட் சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த போட்டித் தொடரில் தொலைக்காட்சி உரிமம் மற்றும் ஏனைய விளம்பரப்படுத்தல் நடவடிக்கைகளை சர்வதேச லீக் போட்டிகள் அளவில் முன்னெடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சர்வதேச வீரர்களை தொடரில் இணைத்துக்கொள்வது மட்டுமன்றி இந்திய வீரர்களையும் தொடரில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி குறித்த காலப்பகுதியில் வீரர்களை அணியிலிருந்து விடுவிக்கவும் இந்திய கிரிக்கெட் சபையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திறமையான இளம் வீரர்களை இனங்கண்டு அவர்களை சர்வதேசத்துக்கு அறிமுகப்படுத்தவும், வெளிநாட்டு வீரர்களை பங்கேற்கச் செய்து அதிகளவான வருவமானங்களைப் பெற்றுக்கொள்ளவும் சிறந்த வழியாக உலகின் கிரிக்கெட் விளையாடுகின்ற அனைத்து நாடுகளும் பின்பற்றிவருகின்ற இந்த வகை கிரிக்கெட் தொடர்களை இனிமேலும் பிற்போடாமல் நீண்டகால திட்டங்களுடன் நடைமுறைப்படுத்துவதற்கு கிரிக்கெட் அதிகாரிகள் முன்வர வேண்டும் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பாகும்.