பதும் தில்ஷானின் அபார சதத்தினால் மிகப்பெரிய வெற்றியை சுவீகரித்த பதுளை

336

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் ஏற்பாட்டில் மாவட்ட அணிகளுக்கு இடையில் இடம்பெறும் ஒரு நாள் தொடரின் 7 போட்டிகள் இன்று நிறைவுற்றன.

கொழும்பு எதிர் கம்பஹா

கொழும்பு கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெற்றிருந்த இப்போட்டியில், தில்ஷான் முனவீரவின் சிறப்பாட்டத்துடன் கம்பஹா அணியை கொழும்பு மாவட்டம் 2 விக்கெட்டுக்களால் வெற்றி கொண்டது.

பிஷான் மற்றும் மலிந்துவின் அதிரடியில் முதலாவது நாளில் மஹாநாம கல்லூரி ஆதிக்கம்

முதலில் துடுப்பாடியிருந்த கம்பஹா அணி, மலித் கூரே மற்றும் லஹிரு விக்கிரமசிங்க ஆகியோர் பெற்றுக்கொண்ட அரைச்சதங்களுடன், எதிரணிக்கு 246 ஓட்டங்களினை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது.

இதனைப் பெறுவதற்கு களமிறங்கிய கொழும்பு அணியில் தில்ஷான் முனவீர 73 ஓட்டங்களினை குவித்ததோடு, அஷான் பிரியன்ஞனும் அரைச்சதம் தாண்ட (57) அவ்வணி, 248 ஓட்டங்களினைப் பெற்று வெற்றியலக்கினை அடைந்தது.

தோல்வியுற்றிருந்த கம்பஹா அணியில், சனுர பெர்னாந்து 28 ஓட்டங்களிற்கு 5 விக்கெட்டுக்களை சாய்த்து கொழும்பு அணிக்கு நெருக்கடி தந்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

கம்பஹா மாவட்டம் –  245/7 (50) மலித் கூரே 73, லஹிரு விக்ரமசிங்க 55, சிஹான் திலசிரி 30, சத்துரங்க குமார 2/35

கொழும்பு மாவட்டம்  – 248/8 (46.2) தில்ஷான் முனவீர 73, அஷான் பிரியன்ஞன் 57, சனுர பெர்னாந்து 5/28 


புத்தளம் எதிர் குருநாகல்

FTZ மைதானத்தில் நிறைவுற்ற இப்போட்டியில், வலுவான பந்து வீச்சினை வெளிக்கொணர்ந்த புத்தளம் அணியானது குருநாகல் அணியினரை 7 விக்கெட்டுக்களால் வீழ்த்தி இலகுவான வெற்றியினைப் பெற்றுக்கொண்டது.

முதலில் துடுப்பாடியிருந்த குருநாகல் அணி, ஓட்டங்களை சீராக குவித்திருந்தும் புத்தளப் பந்து வீச்சாளர்களை முகம் கொடுக்க முடியாமல் விக்கெட்டுக்களை வேகமாகப் பறிகொடுத்து 180 ஓட்டங்களுடன் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அவ்வணி சார்பாக தனுஷ்க தர்மசிரி அரைச்சதம் கடந்திருந்த இவ்வேளையில் ராஜிக தில்ஷான் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.

சவால் குறைந்த வெற்றியிலக்கினை எட்ட பதிலுக்கு ஆடிய புத்தள அணி, ரவீன் யசாஸ் மற்றும் ருக்ஷான் பெர்னாந்துவின் சிறப்பாட்டத்துடன் மூன்று விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியலக்கினை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

குருநாகல் மாவட்டம் – 180 (31.5) தனுஷ்க தர்மசிரி 57, கல்ப பண்டாரநாயக்க 35, ராஜிக தில்ஷான் 3/16, மலிந்த புஷ்பகுமார 2/20

புத்தளம் மாவட்டம் – 184/3 (36.3) ரவீன் யசாஸ் 71, ருக்ஷான் பெர்னாந்து 69*, இசுரு உதான 33, அனுருத்த ராஜபக்ஷ 1/24


யாழ்ப்பாணம் எதிர் வவுனியா

மக்கோன சர்ரேய் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் யாழ்ப்பாண அணியானது வவுனியாவை 4 விக்கெட்டுக்களால் வீழ்த்தி அதிர்ச்சியளித்திருந்தது.

நாணய சுழற்சிக்கு அமைவாக முதலில் துடுப்பாட்டத்தினை யாழ்ப்பாண அணி வவுனியாவிற்கு வழங்கியிருந்து. அதன்படி வவுனியா மாவட்டத்தினால் 136 ஓட்டங்களினை மாத்திரமே குவிக்க கூடியதாக இருந்தது.

அவ்வணியினை மட்டுப்படுத்த பெரும் பங்களிப்பினை வழங்கிய இஷார பிரஷான் நான்கு விக்கெட்டுக்களையும், இலங்கை அணி வீரர் ஜீவன் மெண்டிஸ் மூன்று விக்கெட்டுக்களையும் சரித்திருந்தனர்.

அஞ்சலோ பெரேரா தலைமையில் ஆசியக் கிண்ணத்திற்கு களமிறங்கும் இலங்கை இளையோர் அணி

பின்னர், இலக்கை எட்டிப்பிடிக்க மைதானம் விரைந்த வட மாகாண தலைநகர் அணியானது விரைவாக விக்கெட்டுக்களை இழந்திருப்பினும், ஒருவாறாக சமாளித்து 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டிருந்த நிலையில் 137 ஓட்டங்களுடன் வெற்றி பெற்றது.

இதில் சிறப்பாக பந்து வீசியிருந்த அசேல அளுத்கே 4 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

வவுனியா மாவட்டம் – 136 (27.3) கமல் புஷ்பகுமார 29, அசேல அளுத்கே 24, இஷாரா பிரஷான் 4/29, ஜீவன் மெண்டிஸ் 3/23

யாழ்ப்பாண மாவட்டம் –  137/6 (20.2) ரமித் ரம்புக்வெல்ல 36*, அசேல அளுத்கே 4/57


மொனராகலை எதிர் பதுளை

பத்தும் தில்ஷான் பெற்றுக்கொண்ட அபார சதத்தின் உதவியுடன் பணாகொட ராணுவ மைதானத்தில் முடிவுற்ற இப்போட்டியில் பதுளை மாவட்டம் 230 ஓட்டங்களால் அபார வெற்றியினை சுவீகரித்தது.

முதலில் துடுப்பாடியிருந்த பத்தும் தில்ஷான் வேகமான துடுப்பாட்டம் ஒன்றினை வெளிப்படுத்தி 132 ஓட்டங்களினை குவிக்க, 356 ஓட்டங்கள் என்கிற சவாலான வெற்றி  இலக்கு மொனராகலை அணிக்கு தீர்மானிக்கப்பட்டது.

பதிலுக்கு துடுப்பாடிய மொனராகலை அணி, வெறும் 125 ஓட்டங்களை மாத்திரமே பெற்று, போட்டியில் தோல்வியினை தழுவியது. பதுளை அணி சார்பாக சஞ்சிக்க றித்ம அதி சிறப்பான பந்து வீச்சினை வெளிக்கொணர்ந்து வெறும் 8 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

பதுளை மாவட்டம் – 355 (46) பத்தும் தில்ஷான் 132, தில்ஷான் டி சொய்ஸா 77, சலன வீரசிங்க 5/68

மொனராகலை மாவட்டம் – 125 (32.4) பிரசன்ன விக்கிரமசிங்க 39, சஞ்சிக்க றித்ம 4/08, ஜனித்  டி சில்வா 2/10


பொலன்னறுவை எதிர் மன்னார்

கோல்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில், இலங்கை அணி வீரர் லஹிரு திரிமான்னவின் மன்னார் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றியினை தம்வசப்படுத்தியது.

முதலில் ஆடியிருந்த பொலன்னறுவை அணியினர் 199 ஓட்டங்களிற்குள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டனர். அவ்வணி சார்பாக அதிகபட்சமாக நிப்புன கமகே 47 ஓட்டங்களினை குவித்திருந்ததோடு அக்ஸூ பெர்னாந்து, ஜனித் லியனகே மற்றும் உதார ஜயசுந்தர ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் மன்னார் அணிக்காக பெற்றுக்கொண்டிருந்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடியிருந்த மன்னார் அணி, சமீர சொய்ஸாவின் அரைச்சதத்துடன் 39 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியலக்கினை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

பொலன்னறுவை மாவட்டம் –  199 (50) நிப்புன கமகே 47, சுரேஷ் பீரிஸ் 25*, உதார ஜயசுந்தர 2/22, ஜனித் லியனகே 2/33, அக்ஸூ பெர்னாந்து 2/33

மன்னார் மாவட்டம் – 203/6 (39) சமீர சொய்ஸா 58, லஹிரு திரிமன்ன 37, திலக்ஷா சுமனசிரி 35, விஹங்க கல்கார 2/14, யோஹன் டி சில்வா 2/51

அவுஸ்திரேலிய தொடரில் இலங்கை 19 வயதிற்கு உட்பட்ட அணிக்கு தலைவராக கமிந்து மெண்டிஸ்


கண்டி எதிர் மாத்தளை

வெலிசரவில் இடம்பெற்றிருந்த இப்போட்டியில் 94 ஓட்டங்களால் கண்டி மாவட்டம் மற்றொரு மத்திய மாகாண மாவட்டங்களில் ஒன்றான மாத்தளையை வீழ்த்தியது.

நாணய சுழற்சியினை கைப்பற்றியிருந்த கண்டி, முதலில் துடுப்பாடி ஒசாத பெர்னாந்து, கவிந்து குலசேகர மற்றும் ஷம்மு அஷான் ஆகியோரின் அபார அரைச்சதங்களுடன் 284 ஓட்டங்களைக் குவித்திருந்தது.

பதிலுக்கு வெற்றியிலக்கினை தொடுவதற்கு முனைந்த மாத்தளை அணிக்கு 190 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

கண்டி அணியின் பந்து வீச்சினை சிறப்பித்திருந்த தேசிய அணி வீரர் ஜெப்ரி வன்டர்சேய் மற்றும் விமுக்தி பெரேரா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீதம் பெற்று அணியின் வெற்றியினை ஊர்ஜிதம் செய்திருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

கண்டி மாவட்டம் – 284/9 (50) ஒசாத பெர்னாந்து 54, கவிந்து குலசேகர 59, சம்மு அஷான் 55, கல்ஹார பீரிஸ் 2/40

மாத்தளை மாவட்டம் – 190 (42.1) குசல் எதிஸ்சூரிய 57, AD வீரசூரிய 46, ஜெப்ரி வன்டர்சேய் 3/36, விமுக்தி பெரேரா 3/39


அம்பாறை எதிர் திருகோணமலை

விறுவிறுப்பாக இறுதி ஓவர் வரை சென்றிருந்த இப்போட்டியில் அம்பாறை அணி திருகோணமலை மாவட்ட அணியை  2 விக்கெட்டுக்களால் வீழ்த்தியது.

BRC மைதானத்தில் ஆரம்பாகியிருந்த இப்போட்டியில் அம்பாறை அணி விஷ்வ தீமந்தவின் அரைச்சதத்துடன் 219 ஓட்டங்களினை குவித்திருந்தது. ரொஸ்கோ தட்டில் மற்றும் புத்திக்க சந்தருவன் ஆகியோர் திருகோணமலை சார்பாக 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தனர்.

பதிலுக்கு ஆடிய திருகோணமலை, லஹிரு லக்மால் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட 95 ஓட்டங்களுடன் வெற்றியலக்கினை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

அம்பாறை மாவட்டம் – 219 (48.3) விஷ்வ தீமந்த 59, ஷெஹான் பெர்னாந்து 48,  நதீர நாவல 32, ரொஸ்கோ தட்டில் 3/28, புத்திக்க சந்தருவன் 3/33

திருகோணமலை மாவட்டம் – 221/8 (49.1) லஹிரு லக்மல் 95*, திமுத் வராப்பிட்டிய 39, சவித் பிரியன் 2/31