
மகளிர் உலக கிண்ணத்திற்கான, இன்றைய குழு நிலைப் போட்டி ஒன்றில் இந்திய மகளிர் அணியை எதிர்கொண்டிருந்த இலங்கை மகளிர் அணியானது, இந்திய மகளிர் அணியின் அபார பந்து வீச்சினால் 16 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.
டெர்பி நகர மைதானத்தில், ஆரம்பமாகியிருந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருந்த இந்திய மகளிர் அணியின் தலைவி மித்தலி ராஜ் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்திருந்தார்.
உலக கிண்ண கனவுகளுடன் துடுப்பாடக் களமிறங்கிய இந்தியாவின் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனைகளை இலங்கை மகளிர் அணியின் பந்துவீச்சாளர்கள் குறைவான ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தினர்.
ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனைகளில் ஒருவரான ஸ்மிரிட்டி மந்தனா வெறும் 8 ஓட்டங்களுடனும் பூணம் ராவட் 16 ஓட்டங்களுடனும் ஓய்வறை நோக்கி சென்றனர்.
துரித கதியில் வீழ்த்தப்பட்ட இரண்டு விக்கெட்டுகள் மூலம் சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றுக்கொண்ட இலங்கை மகளிர் அணிக்கு, அணித்தலைவி மித்தலி ராஜ் மற்றும் தீப்தி சர்மா ஆகியோரின் சாமர்த்தியமான ஆட்டத்தினால் இந்தியாவின் மூன்றாம் விக்கெட்டினை வீழ்த்துவது மிகவும் கடினமாக காணப்பட்டிருந்தது.
இந்த இரண்டு வீராங்கனைகளினதும் உறுதியான ஆட்டத்தின் மூலம் மூன்றாம் விக்கெட்டிற்காக 118 ஓட்டங்களை இணைப்பாட்டமாக சேர்த்திருந்தனர். இதனால், இந்திய மகளிர் அணி வலுவான நிலையை அடைந்தது.
இந்திய மகளிர் அணியின் மூன்றாம் விக்கெட்டாக, இலங்கையின் அமா காஞ்சனாவின் வேகத்தில் வீழ்ந்த தீப்தி சர்மா 110 பந்துகளில், 10 பவுண்டரிகள் உடன் 78 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
தொடர்ந்து, சிறிபாலி வீரக்கொடி மற்றும் இலங்கை அணித்தலைவி இனோகா ரணவீர ஆகியோரின் அபார பந்து வீச்சினால், விரைவாக வீழ்ந்த இந்திய மகளிர் அணி, 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்து 232 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இதில் இந்திய அணித்தலைவி மித்தலி ராஜ், 78 பந்துகளில் 4 பவுண்டரிகள் அடங்கலாக 53 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
இலங்கை மகளிர் அணியின் பந்து வீச்சில், சிறிபாலி வீரக்கொடி 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் அணித்தலைவி இனோகா ரணவீர இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.
இதனையடுத்து வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 233 ஓட்டங்களை 50 ஓவர்களில் பெறுவதற்கு பதிலுக்கு தமது துடுப்பாட்டத்தினை தொடங்கிய இலங்கை மகளிர் அணி, 17 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது தமது முதல் விக்கெட்டினை பறிகொடுத்தது.
எனினும், நிப்புனி ஹன்சிக்கா (29) மற்றும் சஷிகலா சிறிவர்தன (37) ஆகியோர் பெறுமதியான ஓட்டங்களைப் பெற்று இலங்கை மகளிர் அணியின் இலக்கு தொடும் போராட்டத்தினை உயிர்ப்பாக வைத்திருந்தனர்.
இவ்வாறானதொரு நிலையில் கட்டுப்படுத்தும் விதமான பந்து வீச்சினை இந்தியா வெளிப்படுத்தியதனால், ஓட்டங்கள் சேர்ப்பதில் இலங்கை மகளிர் அணி பின்னடைவை சந்தித்தது.
எனினும், ஐந்தாம் இலக்கத்தில் துடுப்பாடியிருந்த திலானி மனோதரா போராட்டத்தினை வெளிப்படுத்தி இலக்கினை அடைய முயற்சித்திருந்தார். எனினும், சவாலான இந்திய மகளிர் அணியினர் தொடர்ந்தும் விக்கெட்டுகளை சாய்த்து இலங்கை அணியை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.
இதனால், 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து இலங்கை மகளிர் அணி 216 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியியைத் தழுவியது.
இதில், இலங்கை சார்பாக போரட்டத்தினை வெளிப்படுத்தியிருந்த திலானி மனோதரா 75 பந்துகளில் 6 பவுண்டரிகளை விளாசி 61 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
இந்திய மகளிர் அணி சார்பாக பந்துவீச்சில், பூணம் யாதவ் மற்றும் ஜூலான் கோஸ்வாமி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.
இந்திய மகளிர் அணி, இலங்கை மகளிர் அணியுடனான இந்த வெற்றியுடன் உலக கிண்ண தொடரில் தமது நான்காவது தொடர்ச்சியான வெற்றியைப் பெற்றுக்கொள்கின்றது. அதேவேளையில், இலங்கை மகளிர் அணிக்கு இது நான்காவது தொடர் தோல்வியாகும்.
போட்டியின் சுருக்கம்
இந்தியா – 232/8 (50) – தீப்தி சர்மா 78(110), மித்தலி ராஜ் 53(78), சிறிபாலி வீரக்கொடி 28/3(9), இனோகா ரணவீர 55/2(10)
இலங்கை – 216/7 (50) – திலானி மனோதரா 61(75), சஷிகலா சிறிவர்தன 37(63), பூணம் யாதவ் 23/2(10)
போட்டி முடிவு – இந்திய மகளிர் அணி 16 ஓட்டங்களால் வெற்றி



















