சுழல் பந்துவீச்சாளர்களின் அபாரத்தினால் இரண்டாம் நாளிலும் இங்கிலாந்து அணி ஆதிக்கம்

544

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இடையே காலி நகரில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி சுழல் பந்துவீச்சாளர்களான மொயின் அலி, ஆதில் ரஷீத், ஜேக் லீச் ஆகியோரின் திறமையான செயற்பாட்டினால் முழு ஆதிக்கத்தினையும் வெளிக்காட்டியிருக்கின்றது.

அறிமுக வீரர் அசத்த சரிவில் இருந்து மீண்ட இங்கிலாந்து

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையே….

நேற்று தொடங்கிய இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி அறிமுக வீரர் பென் போக்ஸ் பெற்றுக்கொண்ட அரைச்சதத்தோடு, தமது முதல் இன்னிங்ஸில் 91 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து 321 ஓட்டங்களுடன் மிகவும் வலுவான நிலையில் காணப்பட்டிருந்தது. களத்தில் அரைச்சதம் தாண்டிய பென் போக்ஸ் 87 ஓட்டங்களுடனும், ஜேக் லீச் 14 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது இருந்தனர்.

போட்டியின் இன்றைய இரண்டாம் நாளில் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணி, அறிமுக வீரர் பென் போக்ஸ் பெற்றுக் கொண்ட சதத்தோடு இரண்டாம் நாள் தொடங்கி சிறிது நேரத்திலேயே அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 342 ஓட்டங்களுடன் தமது முதல் இன்னிங்ஸை நிறைவு செய்து கொண்டது.

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் தனது கன்னி டெஸ்ட் சதத்தினை அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே பதிவு செய்த போக்ஸ் 202 பந்துகளில் 10 பெளண்டரிகள் அடங்கலாக 107 ஓட்டங்களை குவித்திருந்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பாக தில்ருவான் பெரேரா 75 ஓட்டங்களை மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தோடு, சுரங்க லக்மால் உம் இங்கிலாந்தின் 3 விக்கெட்டுக்களை பதம்பார்த்திருந்தார்.

பலவாறு அலங்கரிக்கப்பட்ட காலி டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டம்

விற்றுத்தீர்ந்த நுழைவுச்சீட்டுக்கள், இலங்கை அணியின் தொடக்க ஆதிக்கம்….

இதனை தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்த இலங்கை அணிக்கு ஆரம்ப வீரர்களாக திமுத் கருணாரத்ன மற்றும் கெளசால் சில்வா ஆகியோர் களம் வந்தனர்.

இலங்கை அணியின் துடுப்பாட்ட இன்னிங்ஸில் ஜேம்ஸ் அன்டர்சனினால் வீசப்பட்ட முதல் ஓவரினை எதிர்கொண்ட திமுத் கருணாரத்ன குறித்த ஓவரின் இரண்டாவது பந்தினை இங்கிலாந்து விக்கெட் காப்பாளர் பென் போக்ஸிடம் பிடிகொடுத்து வெறும் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதன் பின்னர், நீண்ட கால இடைவெளி ஒன்றின் பின்னர் டெஸ்ட் அணிக்கு திரும்பிய ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கெளசால் சில்வாவின் விக்கெட்டும் ஒரு ஓட்டத்துடன் வீழ்த்தப்பட்டது.

இதனை அடுத்து களம் வந்த இலங்கை அணியின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களில் தனன்ஞய டி சில்வா 14 ஓட்டங்களுடனும், குசல் மெண்டிஸ் 19 ஓட்டங்களுனும் தமது விக்கெட்டுகளை பறிகொடுத்து ஏமாற்றினார். இதனால், ஆரம்பத்திலேயே இலங்கை அணி 40 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

இப்படியானதொரு நிலையில் ஜோடி சேர்ந்த அணித்தலைவர் தினேஷ் சந்திமால் மற்றும் அஞ்சலோ மெதிவ்ஸ் ஆகியோர் இலங்கை அணிக்கென நல்ல இணைப்பாட்டம் ஒன்றை 5ஆம் விக்கெட்டுக்காக கட்டியெழுப்பினர்.

இரண்டாம் நாளின் மதிய போசனத்தை தாண்டியும் நீடித்த இவர்களின் இணைப்பாட்டம் தினேஷ்  சந்திமாலின் விக்கெட்டோடு முடிவுக்கு வந்தது. இலங்கை அணியின் 5ஆம் விக்கெட்டுக்காக 75 ஓட்டங்களை மெதிவ்ஸ் உடன் பகிர்ந்த தினேஷ் சந்திமால் 33 ஓட்டங்களுடன் ஆதில் ரஷீத்தின் சுழலுக்கு இரையாகினார்.

எனினும் மறுமுனையில் ஆட்டமிழக்காது இருந்த அஞ்சலோ மெதிவ்ஸ் புதிய துடுப்பாட்ட வீரராக வந்த நிரோஷன் திக்வெல்லவுடன் கைகோர்த்து அணியின் ஓட்டங்களை உயர்த்தினார். இதனால், இரண்டாம் நாளுக்கான தேநீர் இடைவேளையினை இலங்கை வீரர்கள் அஞ்சலோ மெதிவ்ஸ் இன் அரைச்சதத்தோடு அடைந்தனர்.

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 53

இங்கிலாந்துடனான பயிற்சிப் போட்டியில் பந்து தலையில் தாக்கி காயமடைந்த…..

தேநீர் இடைவேளையினை அடுத்து இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக அஞ்சலோ மெதிவ்ஸ் மொயின் அலியின் சுழலில் ஆட்டமிழந்தார். இப்போட்டியில் தனது 30ஆவது டெஸ்ட் அரைச்சதத்தினை பூர்த்தி செய்த மெதிவ்ஸ் ஆட்டமிழக்கும் போது 3 பெளண்டரிகள் அடங்கலாக 52 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து மீண்டும் மொயின் அலியின் பந்துவீச்சினை முகம்கொடுக்க முடியாமல் நிரோஷன் திக்வெல்ல  28 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார். நிரோஷன் திக்வெல்லவினை அடுத்து இங்கிலாந்து அணியின் ஏனைய சுழல் வீரர்களை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி 68 ஓவர்களுக்கு 203 ஓட்டங்களை  மாத்திரம் பெற்றவாறு தமது முதல் இன்னிங்ஸினை முடித்துக் கொண்டது.

இலங்கை அணியின் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களில் தில்ருவான் பெரேரா மாத்திரமே இருபது ஓட்டங்களை கடந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதேநேரம் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட சுழல் பந்துவீச்சளர்களான மொயின் அலி 4 விக்கெட்டுக்களையும், ஜேக்  லீச் மற்றும் ஆதில் ரஷீத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சாய்த்திருந்தனர்.

பின்னர் 139 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி, போட்டியின் இரண்டாம் நாள் நிறைவில் 38 ஓட்டங்களுக்கு விக்கெட் இழப்புக்கள் ஏதுமின்றி காணப்படுகின்றது.

இலங்கை அணியினை விட மொத்தமாக 177 ஓட்டங்களால் முன்னிலை பெற்றிருக்கும் இங்கிலாந்து அணிக்கு ஆரம்ப வீரர்களாக வந்த ரோரி பேர்ன்ஸ் 11 ஓட்டங்களுடனும், கீட்டோன் ஜென்னிங்ஸ் 26 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்து நம்பிக்கை தருகின்றனர்.

ஸ்கோர் விபரம்

போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளுக்கு<<