இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் சபை 19 வயதுக்கு உட்பட்ட பதினொருவர் அணியின் இரண்டு நாள் பயிற்சிபோட்டி யாழ் மத்திய கல்லூரி அணியின் சகலதுறை வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்தின் அபார பந்துவீச்சுடன் வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றது.
இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு எதிராக நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை இளையோர் அணியில் சேர்க்கப்பட்டிருக்கும் வலதுகை சுழl பந்துவீச்சாளரான வி. வியாஸ்காந்த் மொத்தம் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறமையை வெளிப்படுத்தினார்.
சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை பதினொருவர் அணி
கொழும்பு, NCC மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் முதல் தினம் முழுவதும் துடுப்பொடுத்தாடிய இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட பதினொருவர் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 253 ஓட்டங்களை பெற்ற நிலையில் இரண்டாவது நாளான இன்று (14) இந்திய அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது.
அணித்தலைவர் அனுஜ் ரவாத் மற்றும் பவன் ஷாஹ் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கி 82 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். இலங்கை ஆரம்ப வேகப்பந்து ஜோடியான சாமிக்க குணசேகர மற்றும் செல்வராசா மதூஷன் இருவரும் இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு இலகுவாக ஓட்டங்களை விட்டுக்கொடுத்த நிலையில் அணித்தலைவர் கமில் மிஷார இடதுகை சுழல் வீரர் ரொஹான் சஞ்சயவை பந்துவீச அழைத்தார்.
எனினும் சூழல் நெருக்கடிக்கு மத்தியிலும் பவன் ஷாஹ் 41 பந்துகளில் அரைச்சதம் எட்டினார்.
இந்நிலையில் தனது பந்துவீச்சு சாகசத்தை வெளிப்படுத்திய மஹீஷ் தீக்ஷன இந்திய அணித்தலைவர் அனுஜ் ரவாத்தை 28 ஓட்டங்களுடன் வெளியேற்றினார். அஜந்த மெண்டிஸின் பாணியிலான மஹீஷின் பந்துவீச்சு இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மஹீஷூடன் இடதுகை சுழல் வீரர் திலும் சுதீர இந்திய இளையோர் அணியின் துடுப்பாட்ட வேகத்தை மட்டுப்படுத்தினார். 25 ஓட்டங்கள் பெற்றிருந்த முதல் வரிசை வீரர் அதர்வா டாயிட்டின் விக்கெட்டை லக்ஷான் கமகே பாதம்பார்த்தார்.
இதன்போது அதிரடியாக ஆடிவந்த பவன் ஷாஹ் 70 பந்துகளில் 70 ஓட்டங்களை பெற்ற நிலையில் துடுப்பாட்டத்தை இடைநிறுத்திக் கொண்டார்.
இரண்டாம் நாள் ஆட்டத்தின் புகைப்படங்களைப் பார்வையிட
இந்நிலையில் இந்திய இளையோர் அணியின் மத்திய வரிசை வீரர்களான தேவ்தூத் பதிக்கல் (75), ஆரியான் ஜுயல் (50) ஓட்டங்களை சேகரித்து துடுப்பாட்ட பயிற்சியில் ஈடுபட்டனர். இலங்கை பந்துவீச்சாளர்களால் இவர்களின் விக்கெட்டை வீழ்த்த முடியாத நிலையில் இருவரும் துடுப்பாட்டத்தை இடைநிறுதிக்கொண்டே வெளியேறினர்.
இந்நிலையில் தனது பந்துவீச்சு திறமையை வெளிப்படுத்திய வி. வியாஸ்காந்த் இந்திய மத்திய பின் வரிசையை ஆட்டம் காணச்செய்தார்.
நேர்த்தியான இலக்கில் பந்துவீசிய வியாஸ்காந்த் யாஷ் ரதோட்டை 36 ஓட்டங்களுடன் போல்ட் செய்து அரைச்சதம் பெற்றிருந்த ஆயுஷ் பதோனியை பிடியெடுப்பு மூலம் வெளியேற்றினார். இந்நிலையில் பின்வரிசையில் வந்த சமீர் சௌத்ரி (8) மற்றும் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரை (5) வி. வியாஸ்காந்த் தொடர்ச்சியாக ஆட்டமிழக்கச் செய்தார்.
இறுதியில் இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணி இரண்டாவது மற்றும் கடைசி நாள் ஆட்டநேர முடிவின்போது 68.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 384 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை பதினொருவர் அணி சார்பில் பயிற்சி போட்டியில் அனுமதிக்கப்பட்ட 12 வீரர்கள் பந்து வீசினர். ஆனால் தனித்து சோபித்த வி. வியாஸ்காந்த் 9.1 ஓவர்கள் பந்து வீசி 63 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
எனினும் யாழ் மத்திய கல்லூரி வேகப்பந்து வீச்சாளர் செல்வராசா மதூஷன் 4 ஓவர்கள் பந்து வீசி 21 ஓட்டங்களை விட்டுக்கொடுத்ததோடு விக்கெட் வீழ்த்த தவறினார்.
இலங்கை மற்றும் இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் ஜூலை மாதம் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















