சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய பாக். வீரருக்கு 5 வருட போட்டித் தடை

1040
Sharjeel Khan

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் சர்ஜீல் கானுக்கு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க 5 வருட போட்டித் தடை விதிப்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தீர்மானித்தது.

டுபாயில் கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற 2ஆவது பாகிஸ்தான் சுப்பர் லீக் T-20 தொடரில் நடப்புச் சம்பியனான இஸ்லாமாபாத் யுனைடட் அணிக்காக விளையாடிய சர்ஜீல் கான் உள்ளிட்ட பாகிஸ்தான் அணியின் 4 வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

பாகிஸ்தானுக்கு எதிரான உலக பதினொருவர் அணியில் திஸர பெரேரா

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட T20…

இதனையடுத்து குறித்த சர்ச்சையில் முக்கிய வீரராக விளங்கிய சர்ஜீல் கான் மீதான விசாரணைகளை மும்முரமாக விசாரித்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, அந்நாட்டு கிரிக்கெட் ஊழல் தொடர்பிலான 5 விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டிற்காக 5 ஆண்டுகள் எந்தவொரு கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட முடியாதென சர்ஜீலுக்கு தீர்ப்பளித்தது.

இதன்படி முதல் 2 அரை வருடத்தில் சர்ஜீலுக்கு எந்தவொரு உள்ளூர் மற்றும் சர்வதேசப் போட்டிளிலும் விளையாட முடியாது என்பதுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அவரது நடத்தை தொடர்பில் கூடிய கவனம் செலுத்தவுள்ளது. எனினும், சர்ஜீலுக்கு சுமார் 30 மாதங்களுக்கு எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாட முடியாவிட்டாலும், அந்நாட்டு கிரிக்கெட் சபை விரும்பினால் உள்ளூர் மட்ட போட்டிகளில் விளையாடுவதற்கு அனுமதி வழங்கப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

குறித்த போட்டியில் பெஷாவர் சல்மி அணியை இஸ்லாமாபாத் அணி வீழ்த்தியிருந்தாலும், சர்ஜீல் கானுக்கு 2 மில்லியன் ரூபா பணம் சூதாட்ட முகவரால் வழங்கப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்தது. மேலும், சர்ஜீல் மாத்திரம் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கி 4 பந்துகளுக்கு மாத்திரம் முகங்கொடுத்து ஒரு ஓட்டத்தைப் பெற்று LBW முறையில் ஆட்டமிழந்தார். ஆனால், காலித் லதீப் இப்போட்டியில் விளையாடவில்லை. எனினும், பாகிஸ்தான் அணியின் மற்றுமொரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான நசீர் ஜம்ஷித், கடந்த 8ஆம் திகதி வட்ஸ்அப் மூலமாக இஸ்லாமாபாத் யுனைடட்டின் காலித் லத்தீப்புக்கு குறுந்தகவலொன்றை அனுப்பி யூசாப் என்ற தரகரை சந்திக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், அண்மைக்காலமாக பாகிஸ்தான் அணியில் பிரகாசித்துவந்த சுல்பிகர் பாபர் மற்றும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான சஹைப் ஹஸன் ஆகியோரும் குறித்த விடயம் தொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் ஊழல் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதனையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, குறித்த வீரர்களை நாட்டுக்குத் திருப்பி அழைத்ததுடன், கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு இடைக்காலத் தடையும் விதித்தது.

சகீபின் சுழலின் மூலம் வரலாற்று சிறப்பு வெற்றியைப் பெற்ற பங்களாதேஷ்

அவுஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான….

இந்நிலையில், லாகூர் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி அஷ்கர் ஹைதர் தலைமையிலான மூவரடங்கிய விசேட குழுவொன்றை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நியமித்தது. இதனையடுத்து குறித்த சூதாட்டத்தில் ஈடுபட்டதை மொஹமட் இர்பான் மற்றும் மொஹமட் நவாஸ் ஆகியோர் ஒப்புக்கொண்டதுடன், அவர்களுக்கு முறையே ஒரு வருட மற்றும் 2 மாதகால போட்டித் தடையை விதிக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில் இக்குற்றச்சாட்டின் ஆரம்ப குற்றவாளிகளில் ஒருவரான சர்ஜீல் கான் தொடர்பில் அந்நாட்டு நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த வழக்கு விசாரணை கடந்த மாதம் நிறைவுக்கு வந்த நிலையில், இருதரப்பு ஆதாரங்களையும் 29ஆம் திகதி தாக்கல் செய்வதற்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதன்படி முன்வைக்கப்படவுள்ள ஆதரங்களை பரிசீலனை செய்து எதிர்வரும் 30 தினங்களுக்குள் தீர்ப்பு வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக நடைபெற்ற நீதிமன்ற வழக்கு விசாரணைகளின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட சர்ஜீல் கானுக்கு தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது. இந்நிலையில், இது தொடர்பில் அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி அஷ்கர் ஹைதர் தலைமையிலான மூவரடங்கிய விசேட குழு குறித்த சூதாட்ட சர்ச்சையின் பிரதான சந்தேக நபராக விளங்கிய சர்ஜீல் கானுக்கு 5 வருட போட்டித் தடை விதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்படி, அவர் தற்காலிகமாக நீக்கப்பட்ட பெப்ரவரி 10ஆம் திகதியிலிருந்து இத்தடை அமுலுக்கு வரவுள்ளது. எனினும், அவர் சார்பில் ஆஜரான வழக்கிறிஞர் ஷெகான் இஜாஸ், “சர்ஜீலுக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு எதிராக நாம் மேன்முறையீடு செய்ய எதிர்பார்த்துள்ளோம். இதுவரை, அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட எந்தவொரு குற்றச்சாட்டும் உறுதிப்படுத்தப்படவில்லை. எனவே, மிக விரைவில் மேன்முறையீடு செய்யவுள்ளது” என தெரிவித்தார்.

ஆனால், சர்ஜீல் கானுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் நிரூபணமாகியுள்ளதால் 2 மில்லியன் ரூபா அபராதத் தொகையுடன் 5 வருட போட்டித் தடை விதிக்க ஊழல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட விசேட குழு தீர்மானித்ததாக அந்நாட்டு கிரிக்கெட் சபையின் சட்ட ஆலோசகர் தபாஸுல் ரிஸ்வி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணிக்காக 3 வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வந்த 28 வயதான சர்ஜீல் கான் கடந்த வருடம் நடைபெற்ற T-20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடியிருந்ததுடன், கடந்த வருட இறுதியில் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் போட்டித் தொடரில் சிறப்பாக விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கவலையுடனும், கண்ணீருடனும் பதவியிலிருந்து இராஜினமாச் செய்தேன் – சனத்

அண்மைக் காலமாக இலங்கை அணி சந்தித்து வருகின்ற தொடர் தோல்விகளுக்கு….

பாகிஸ்தான் அணிக்காக இதுவரை ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள சர்ஜீல் கான், 25 ஒருநாள் போட்டிகளிலும் 15 T-20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

இதேவேளை, குறித்த குற்றச்சாட்டுக்கு இலக்காகி விசாரணைகளுக்கு முகங்கொடுத்து வருகின்ற மற்றுமொரு முக்கிய வீரரான காலித் லத்தீப்பின் இறுதி தீர்ப்பு மற்றும் அவரது தடைக்காலம் குறித்து இதுவரை எந்தவொரு தகவல்களும் வெளியாகவில்லை.

இந்நிலையில் குறித்த சூதாட்டத்தில் தொடர்புடையவர் என இனங்காணப்பட்டுள்ள மற்றுமொரு வீரரான நசீர் ஜம்ஷித் இதுவரை எந்தவொரு விசாரணைக்கும் ஆஜராகவில்லை. எனினும், அவர் சார்பில் ஆஜரான வழக்கிறிஞர் அந்நாட்டு கிரிக்கெட் சபை பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் இடம்பெற்றதாக கூறப்படும் சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய மூன்றாவது வீரர் இவராவார். இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பங்களிப்புடன் பிரித்தானியாவின் சர்வதேச ஊழல் மோசடி தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் பிரித்தானியாவில் வைத்து நசீர் ஜம்ஷிட்டுடன், அவருடைய நண்பரான யூசுப் என்பவரும் கைது செய்யப்பட்டு பின்னர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.