சொந்த மண்ணில் ஓய்வு பெற ஆசை; சகீப் அல் ஹசன் விருப்பம்

17

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைசிறந்த சகலதுறை வீரரான சகீப் அல் ஹசன், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், தனது சொந்த மண்ணில் ஒரு முழுமையான இருதரப்பு தொடரில் பங்கெடுக்க விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.   

பக்ஹர் ஷமானுக்கு அபராதம் விதித்த ஐசிசி 

அரசியல் காரணங்கள் கருதி நீண்டகாலம் பங்களாதேஷ் அணியிலிருந்து விலகி இருக்கும் சகீப் அல் ஹசன், தான் இன்னும் கிரிக்கெட்டின் எந்த வடிவத்திலிருந்தும் அதிகாரபூர்வமாக ஓய்வு பெறவில்லை என்று  உறுதிப்படுத்தியுள்ளார். 

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சகீப் அல் ஹசன், மொயின் அலியுடனான கலந்துரையாடல் பேட்டி ஒன்றில், நான் அனைத்து வடிவங்களிலிருந்தும் (டெஸ்ட், ஒருநாள், மற்றும் T20) அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறவில்லை. பங்களாதேஷ் திரும்பி, மூவகைப் போட்டிகளும் கொண்ட ஒரு முழுமையான இருதரப்புத் தொடரில் விளையாடிவிட்டு ஓய்வு பெற வேண்டும் என்பதே எனது திட்டம். அதன்மூலம், எனக்கு எப்போதும் ஆதரவளித்த ரசிகர்களிடம் முறையாக விடைபெற முடியும்,” என்று கூறியுள்ளார். 

சொந்த நாட்டின் இரசிகர்களுக்கு முன்னால் விளையாடி விடைபெறுவதே தனது இலக்கு என்று குறிப்பிட்ட சகீப் அதன் பின்னர் தான் தொடர்ந்து விளையாடமாட்டேன் என்று உறுதியளித்தார். 

பங்களாதேஷில் நிலவும் அரசியல் சூழ்நிலை மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக, சகீப் தனது தாயகம் திரும்புவது கேள்விக்குறியாகியுள்ளது. அவருக்கு எதிராக அரசியல் ரீதியிலான குற்றச்சாட்டுகள் நிலவுவதால், அவர் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

எனினும், பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (BCB) மற்றும் சில உயர்மட்ட விளையாட்டு அதிகாரிகள், சகீப் அல் ஹசன் தனது கடைசிப் போட்டியை மிர்பூர் மைதானத்தில் விளையாட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும், அவருக்குத் தேவையான உயர் மட்ட பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். 

சகீப் அல் ஹசன் இறுதியாக கடந்த 2024ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் பங்களாதேஷ் அணிக்காக இறுதியாக டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் உலகின் பல்வேறு T20 லீக்குகளில் பங்கேற்று வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<