பங்களாதேஷ் அணியுடன் இணைந்துக்கொண்ட சகீப், முஷ்தபிசூர்

Sri Lanka tour of Bangladesh 2021

107

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் சகிப் அல் ஹசன் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் முஷ்தபிசூர் ரஹ்மான் ஆகியோர், அணியின் பயிற்சியில் நேற்றைய தினம் (18) இணைந்துள்ளனர்.

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பயிற்சிகளை பங்களாதேஷ் அணி விடுமுறைக்கு பின்னர், நேற்று ஆரம்பித்திருந்தது. மின் விளக்கு வெளிச்சத்தில் நேற்றைய பயிற்சிகள் ஆரம்பிக்கப்படவிருந்த போதும், திடீரென பொழிந்த கடும் மழையின் காரணமாக, பயிற்சிகள் உள்ளக அரங்கில் இடம்பெற்றன.

T20I தொடருக்காக அவுஸ்திரேலியா செல்லும் இலங்கை

குறித்த இந்த பயிற்சியில் பங்களாதேஷ் அணியின் முன்னணி வீரர்களான சகிப் அல் ஹசன் மற்றும் முஷ்தபிசூர் ரஹ்மான் ஆகியோர் பங்கேற்றனர். கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக ஐ.பி.எல். தொடர் பாதியில் இடைநிறுத்தப்பட்டது. இதன் காரணமாக கடந்த 6ம் திகதி நாடு திரும்பியிருந்தனர்.

பங்களாதேஷின் விதிமுறைப்படி, வெளிநாட்டிலிருந்து நாடு திரும்புபவர்களுக்கான தனிமைப்படுத்தல் காலம் 14 நாட்களாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தனிமைப்படுத்தலில் இருந்த இவர்கள், பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் விசேட கோரிக்கைக்கு அமைய 12 நாட்கள் தனிமைப்படுத்தலுடன் அணியுடன் பயிற்சிகளில் இணைந்துக்கொண்டனர்.

முஷ்தபிசூர் ரஹ்மான் மற்றும் சகிப் அல் ஹசன் ஆகியோர் ஏற்கனவே ஐ.பி.எல். தொடரில் விளையாடியுள்ளதால், அவர்கள் தயார்படுத்தல்களை மேற்கொள்வதில் எவ்வித சிக்கலையும் ஏற்படுத்தாது என பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் மின்னாஜூல் அபிதீன் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். தொடரில் விளையாடியதிலிருந்து சகிப் மற்றும் முஷ்தபிசூர் நீண்ட நாட்களாக கிரிக்கெட்டிலிருந்து வெளியில் இருக்கவில்லை என நான் நினைக்கிறேன். அவர்கள் தனிமைப்படுத்தலில் இருந்திருந்தாலும், அனுபம் வாய்ந்த வீரர்கள். அதனால், மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்புவதற்கு நீண்ட நாட்கள் எடுக்காது. இவர்கள், பயிற்சிப்போட்டிகளில் விளையாடவுள்ளனர். எனவே, எதிர்வரும் நாட்களில் திறன் பயிற்சிகளில் மாத்திரம் ஈடுபட்டால் போதுமானது என்றார்.

இதேவேளை, பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை அணி கடந்த ஞாயிற்றுக்கிழமை (16) அங்கு சென்றுள்ளதுடன், தனிமைப்படுத்தலில் இருந்து இன்றைய தினம் பயிற்சிகளை ஆரம்பிக்கவுள்ளது. இதேநேரம், இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் போட்டிகள், எதிர்வரும் 23, 25 மற்றும் 28ம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…