LPL தொடரின் பாதியில் திடீரென பாகிஸ்தான் செல்லும் சஹிட் அப்ரிடி!

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

399
Image Credits - SLC

லங்கா ப்ரீமியர் லீக் அணியான கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியின் தலைவர் சஹிட் அப்ரிடி, அவசர தேவை காரணமாக உடனடியாக பாகிஸ்தான் திரும்பவுள்ளதாக கோல் க்ளேடியேட்டர்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த முன்னணி வீரரான லசித் மாலிங்க விலகியதற்கு பின்னர், அந்த அணியின் அனுபவ வீரராக சஹிட் அப்ரிடி மாத்திரமே உள்ளார்.  இந்தநிலையில், சஹீட் அப்ரிடி அவசர தேவை காரணமாக நாட்டுக்கு திரும்பவுள்ளதாக அறிவித்துள்ளார்.

>>தோல்வி காணாத அணியாக வீரநடை போடும் ஜப்னா ஸ்டாலியன்ஸ்<<

பாகிஸ்தான் செல்லவுள்ளமை தொடர்பில்  சஹிட் அப்ரிடி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில், “துரதிஷ்டவசமாக எனது தனிப்பட்ட அவசர தேவை காரணமாக நாட்டுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு சென்று நிலைமையை சரிசெய்த பின்னர், உடனடியாக இலங்கை வந்து, LPL  தொடரில் பங்கேற்பேன். அணிக்கு வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.

அவசர தேவை காரணமாக சஹிட் அப்ரிடி பாகிஸ்தான் செல்லவுள்ள நிலையில், கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியின் தலைவராக பானுக ராஜபக்ஷ நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் சஹிட் அப்ரிடி நாட்டுக்கு வருவதற்கு கால தாமதமாகலாம் எனவும், பானுக ராஜபக்ஷ முதலிரண்டு போட்டிகளில் அணியில் தலைவராக செயற்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், சஹிட் அப்ரிடி சரியான நேரத்தில் அணியுடன் இணைந்ததுடன், முதல் மூன்று போட்டிகளில் விளையாடியிருந்தார். எவ்வாறாயினும், கோல் க்ளேடியேட்டர்ஸ் அணி தங்களுடைய முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

அதேநேரம், கோல் க்ளேடியேட்ர்ஸ் அணி தங்களுடைய அடுத்த போட்டியில், ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியை நாளை எதிர்கொள்ளவுள்ளதுடன், நாளை மறுதினம் தம்புள்ள வைகிங் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

எவ்வாறாயினும், அடுத்த போட்டிகளுக்கான கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியின் தலைவராக யார் செயற்படுவார் என்ற உத்தியோகபூர்வமான அறிவித்தலை அணி நிர்வாகம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 >>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<