சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற சௌண்டர்ஸ் மற்றும் ஜாவா லேன் அணிகளுக்கிடையிலான FA கிண்ணத்தின் தீர்க்கமான அரையிறுதிப் போட்டியில் பெனால்டி முறையில் 5 – 3 என்ற கணக்கில் வெற்றி பெற்ற ஜாவா லேன் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

ஏற்கனவே இடம்பெற்று முடிந்த காலிறுதிச் சுற்றில், இரண்டாவது பாதி அதிரடியின் மூலம் புளு ஸ்டார் அணியை 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்ட சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் அரையிறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியிருந்தது.   

அதேபோன்று, தமது காலிறுதியில் பிரபல ரினௌன் விளையாட்டுக் கழகத்திற்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் 3-1 என வெற்றி பெற்ற ஜாவா லேன் அணி அரையிறுதிக்கு தெரிவாகிய இறுதி அணியாக தம்மைப் பதிவு செய்துகொண்டது.

அரையிறுதி குறித்த ஒரு முன்னோட்டம்

அந்த வகையில் இரண்டாவது அரையிறுதி ஆட்டமாக சுகததாஸ அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் ஆரம்பம் முதலே சமபலம் மிக்க இரு அணி வீரர்களும் ஒருவருக்கொருவர் சளைக்காத விதத்தில் விறுவிறுப்பான விளையாட்டில் ஈடுபட்டனர்.

இரு அணி வீரர்களும் அழுத்தமான ஆட்டத்தில் (pressing game) ஈடுபட்டதால் தேவையற்ற வீழ்த்தல்கள் (tackles) தொடர்ச்சியாக இடம்பெற்றன.

ஆட்டத்தின் முதல் முயற்சியாக இந்த்ரீவ உதார அடித்த பந்து கோல் கம்பங்களை பதம்பார்த்த போதிலும் அவ்வாய்ப்பு சௌண்டர்ஸ் அணிக்கு கோலாக மாறவில்லை. மறு முனையில் ஜாவா லேன் அணிக்காக கிடைத்த வாய்ப்பை இளம் வீரர் நவீன் ஜூட் தவறவிட்டார்.

போட்டி விறுவிறுப்பாக இருந்தாலும், இரு அணியின் களத்தடுப்பாளர்களும் மிகவும் சிறப்பாக செயற்பட்டதால் கோல் அடிக்கும் வாய்ப்புகள் பெரிதாக உருவாகவில்லை.

எனினும் கிடைத்த ஓரிரு வாய்ப்புக்களின் போதும் இரு தரப்பினராலும் சிறந்த நிறைவுகள் மேற்கொள்ளப்படாமை, முதல் பாதி கோல்கள் இன்றி நிறைவுறுவதற்கு காரணமாக அமைந்தது.

முதல் பாதியில் பல தேவையற்ற வீழ்த்தல்கள் இடம்பெற்றாலும் யாருக்கும் மஞ்சள் அட்டை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் பாதியில் இறுதி நேரத்தில் கிரிஷாந்த அபேசேகரவிற்கு சிறந்த ஒரு வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. எனினும் அதனை ஜாவா லேன் கோல் காப்பாளர் தம்மிக செனரத் சிறந்த முறையில் பாய்ந்து தடுத்தார்.

முதல் பாதி: சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் 0 – 0 ஜாவா லேன் விளையாட்டுக் கழகம்

இரண்டாவது பாதியை சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் தமது ஆதிக்கத்துடன் ஆரம்பித்தது. அவர்களுக்கு ஒரு சில கோர்ணர் வாய்ப்புகள் உருவாகியபோதிலும் அவற்றை ஜாவா லேன் களத்தடுப்பாளர்கள் முறியடித்தனர்.

போட்டியின் ஐம்பதாவது நிமிடத்தில் லக்மால் பெரேரா உள்ளனுப்பிய பந்து கோல் கம்பங்களுக்குள் நுழையும் வண்ணம் பயணிக்கையில், சௌண்டர்ஸ் கோல் காப்பாளர் அசங்க விராஜ் அதனை அபாரமாகத் தடுத்தார்.

போட்டியின் 61ஆவது நிமிடத்தில் சௌண்டர்ஸ் அணிக்கு கோர்ணர் கிக் வாய்ப்பொன்று கிடைக்க, உள்ளனுப்பப்பட்ட பந்தினை சுந்தர்ராஜ் நிரேஷ் கோலாக மாற்றி சௌண்டர்ஸ் அணியை முன்னிலைப்படுத்தினார்.

திறமைகளை வெளிக்காட்டவிருக்கும் இலங்கை ரக்பி அணியின் அறிமுக வீரர்கள்

தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய சௌண்டர்ஸ் அணி வீரர்கள் போட்டியை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். எனினும் ஜாவா லேன் அணி தமது வேகத்தினை பயன்படுத்தி கோல் வாய்ப்புகளை உருவாக்க முயற்சித்தனர்.

ஜாவா லேனிற்கு மொஹமட் ரிஸ்கான் அடித்த உதையை தலையால் முட்டி கோலாக்க முனைந்தார் நவீன் ஜூட். எனினும் அவரது முயற்சி பலனளிக்கவில்லை.

எனினும் மீண்டும் ரிஸ்கான் நவீனுக்கு பந்தை சிறந்த முறையில் வழங்க, கோல் கம்பங்களுக்கு அண்மித்த வகையில் இருந்த நவீன் அதனை கோலாக மாற்றினார். இதனால் 75ஆவது நிமிடத்தில் ஜாவா லேன் அணி போட்டியை சமப்படுத்தியது.

புத்துயிர் பெற்ற ஜாவா லேன் அணியின் முன்கள வீரர்கள் வெற்றி கோலிற்கான முயற்சியில் ஈடுபடத் தொடங்கினர்.

போட்டி இறுதிக் கட்டத்தை நோக்கி நகர, இரு அணிகளும் சளைக்காமல் போராடினர். எனினும் போட்டி 1-1 என முடிவுற்று பெனால்டி முறைக்கு சென்றது.

முழு நேரம்: சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் 1 – 1 ஜாவா லேன் விளையாட்டுக் கழகம்

பெனால்டிக்கு சென்ற போட்டியில் சௌண்டர்ஸ் அணியின் அனுபவ வீரர் சஜித் தர்மபால அவரது வாய்ப்பை தவற விட்டார். ஜாவா லேன் சார்பாக அனைவரும் கோலினை அடிக்க 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ஜாவா லேன் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

பெனால்டி: சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் 3 – 5 ஜாவா லேன் விளையாட்டுக் கழகம்

ThePapare.com இன் ஆட்ட நாயகன் – ஜானக சமிந்த (ஜாவா லேன் விளையாட்டுக் கழகம்)

கோல் பெற்றவர்கள்

சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் – சுந்தர்ராஜ் நிரேஷ் 61′

ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் – நவீன் ஜூட் 75′

மஞ்சள் அட்டைகள்  

சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் – சுந்தர்ராஜ் நிரேஷ் 71′

ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் – முனீர் சாலி 46′