தம்புள்ளை ஓரா அணியில் சனத் ஜயசூரியவிற்கு புதிய பொறுப்பு

93

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் அதிரடி சகலதுறை வீரருமான சனத் ஜயசூரிய இந்தப் பருவகாலத்திற்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் பங்கெடுக்கும் தம்புள்ளை ஓரா அணியின் கிரிக்கெட் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.  

>>IPL 2023 இல் துடுப்பினால் அமர்க்களப்படுத்தியவர்கள்<<

இந்தப் பருவகாலத்திற்கான LPL தொடர் அடுத்த மாத இறுதியில் ஆரம்பமாகின்றது. அதன்படி இந்த தொடரில் பங்கெடுக்கும் ஐந்து அணிகளில் ஒன்றான தம்புள்ளை ஓரா அணி, சனத் ஜயசூரிய தமது கிரிக்கெட் இயக்குனராக நியமிக்கப்பட்டிருக்கும் விடயத்தினை உத்தியோகபூர்வமாக இன்று (07) உறுதிப்படுத்தியிருக்கின்றது.

சனத் ஜயசூரிய கிரிக்கெட் இயக்குனர் பொறுப்பு மூலமாக தம்புள்ளை ஓரா அணியின் பயிற்சியாளர்கள் ஒழுங்கமைப்பு, ஏலத்தில் வீரர்கள் கொள்வனவு செய்தல் மற்றும் அணியின் உத்திகள் என பல்வேறு விடயங்களில் கவனம் செலுத்தவிருக்கின்றார்.

கடந்த LPL தொடர் பருவத்தில் கண்டி பல்கோன்ஸ் அணியுடன் இணைந்து பணிபுரிந்த சனத் ஜயசூரிய குறித்த அணி விளையாடிய 8 லீக் போட்டிகளில் 7 போட்டிகளில் வெல்வதற்கு தனது பங்களிப்பினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சனத் ஜயசூரியவின் ஆளுகையிலான தம்புள்ளை ஓரா அணி இந்த முறைக்கான LPL தொடரில் சிறந்த முடிவுகளைக் காட்டும் என நம்பிக்கையுடன் இருப்பதாக அணி உரிமையாளரான Dr. விரான்ஜித் தம்புகல குறிப்பிட்டிருக்கின்றார்.

>>உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா களத்தடுப்பில்<<

இதேநேரம், இந்தப் பருவத்திற்கான LPL தொடரில் குசல் மெண்டிஸ் தலைமையில் களமிறங்கவிருக்கும் தம்புள்ளை ஓரா அணி, வீரர்கள் ஏலத்தின் போது சிறந்த வீரர்கள் கொள்வனவுடன் பலமான அணியொன்றினைக் கட்டமைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்தோடு தம்புள்ளை ஓரா அணி இம்முறை தொடருக்கக ஏற்கனவே அதிரடி துடுப்பாட்டவீரர் அவிஷ்க பெர்னாண்டோவினை கொள்வனவு செய்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 >>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<