பார்சிலோனா மற்றும் இன்டர் மிலான் கழகங்களின் முன்னாள் வீரரான சாமுவேல் எட்டோ கட்டார் விளையாட்டுக் கழகத்துடன் ஒப்பந்தமாகியுள்ளார்.
கெமரூன் முன்னாள் வீரரான அவர் செவ்வாய்க்கிழமை (14) கட்டார் கழகத்துடன் இணைந்ததாக அந்தக் கழகம் அறிவித்துள்ளது. 37 வயதான எட்டோ தனது 21 ஆண்டு தொழில்சார் கால்பந்து வாழ்வில் இணையும் 13 ஆவது கழகம் இதுவாகும்.
துருக்கி கழகமான கொன்யஸ்போருக்கு விளையாடிவந்த அவர் பரஸ்பர உடன்பாட்டில் அந்தக் கழகத்தில் இருந்து வெளியேறி ஒரு சில தினங்களிலேயே புதிய கழகத்திற்கு மாறுவது பற்றிய அறிவிப்பு வந்துள்ளது.
FA கிண்ண 64 அணிகள் சுற்றின் போட்டி விபரம்
எட்டோ நான்கு முறை ஆபிரிக்காவின் ஆண்டின் சிறந்த வீரராக தெரிவானவராவார். அவர் பார்சிலோனாவில் இரண்டு சம்பியன்ஸ் லீக் பட்டங்கள் மற்றும் மூன்று லீக் பட்டங்களை வென்றுள்ளார். இன்டர் மிலானுக்காக அவர் மேலும் ஒரு சம்பியன்ஸ் லீக் மற்றும் லீக் பட்டங்களை வென்றுள்ளார்.
இவைதவிர, அவர் ரஷ்யாவின் அன்சி மகச்கலா, செல்சி, எவர்டன், சம்ப்டோரியா மற்றும் துருக்கியின் இரு கழகங்களுக்கு விளையாடியுள்ளார். கெமரூன் அணிக்காக 2000 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் அடுத்தடுத்து இரண்டு ஆபிரிக்க கிண்ணங்களையும் வென்றுள்ளார்.
கெமரூன் அணிக்காக அதிக கோல் பெற்றவர் என்ற சாதனையை தொடர்ந்து அவர் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
எட்டோ ஒரு வாரத்திற்கு முன் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, ”தொடர்ந்து கால்பந்து விளையாட வேண்டும் என்பதுவே எனது விருப்பம். இன்னும் இரண்டு பருவங்கள் நான் விளையாட விரும்புகிறேன். அதனைத் தொடர்ந்து எனது கால்பந்து வாழ்வை முடித்துக் கொண்டு புதியதொரு வாழ்க்கையை ஆரம்பிப்பேன்” என்றார்.
எட்டோவின் முன்னாள் பார்சிலோன சக வீரரான சாவி ஹெர்னாண்டஸ் மற்றும் நெதர்லாந்து அணியின் முன்னாள் வீரர் வெஸ்லி ஸ்னெடெஜர் ஆகியோருடன் கட்டார் அவர் அணியில் இணைகிறார்.
சிறிய மற்றும் செல்வந்த வளைகுடா நாடான கட்டார் 2022 உலகக் கிண்ண கால்பந்து போட்டியை நடத்தவுள்ளது.
மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க




















